நாயகன் நிழல் உலகத்தைச் சேர்ந்தவன். நிறைய கொலைகளை செய்தவன். ஒதுங்கி வாழவேண்டும் என நினைத்து வாழ்கிறவனை, ஒருவன் போய் சிக்கல் செய்ய, பழிவாங்குவதற்காக மீண்டும் களத்தில் இறங்குகிறான். அவன் தலைக்கு பெரிய விலை வைக்கிறார்கள். அதனால் அவனை கொல்ல வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகையால் எங்கும் நடமாட முடியவில்லை.
நாயகன் பழைய நண்பனைத் தேடிப் போகிறார். அவனுக்கு அடைக்கலம் தருவது பெரிய ஆபத்து என தெரிந்தும், நட்புக்காக அடைக்கலம் தருகிறார். மோப்பம் பிடித்து, ”டேபிள்” அமைப்பு அங்கேயும் தேடி வருகிறார்கள். பெரிய ரணகளம் ஆகிறது.
நாயகனுக்கு விடுதலை வேண்டுமென்றால், ”டேபிள்” அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு குழு அவனை தன்னில் ஒருவனாக அங்கீகரிக்கவேண்டும். அதற்கு பிறகு டேபிள் தலைமையில் உள்ளவனிடம் ஒத்தைக்கு ஒத்தை போட்டிப்போட அழைத்தால், அந்த தலைவன் போட்டிப்போட்டே ஆகவேண்டும் என தொழில்முறை சீனியர் ஆலோசனை சொல்கிறார்.
அதற்காக வேலைகளை செய்ய துவங்குகிறான். ஆனால் அந்தப் பாதை அத்தனை எளிதாய் இல்லை. போகிற வழியெங்கும் கொலைகாரர்கள், மம்மி படத்தில் கூட்டம் கூட்டமாய் வரும் வண்டுகள் போல வந்துகொண்டே இருக்கிறார்கள்.
எல்லா சோதனைகளையும் கடந்து தனக்கான விடுதலையைப் பெற்றானா? என்பதை ரத்தம் தெறிக்க, கட்டி உருண்டு, மல்லுக்கட்டி சொல்லியிருக்கிறார்கள்.
****
படம் துவக்கம் முதல் இறுதி வரை… ஆங்காங்கே கொஞ்சூண்டு வசன காட்சிகளைத் தவிர சண்டை. கார் சேசிங். பைக் சேசிங் என சண்டைகள் தான்.
மியூட்டண்ட் படங்களில் வரும் வால்வரின் (Wolverine) இறக்கும் கடைசிப் படத்தில் மிகவும் சோர்வாக வருவார். அது போல இவங்களோடு மல்லுக்கட்டுனது போதும். டயர்ட் ஆயிடுச்சு! ஆளை விடுங்கடா என சொல்வது போல நாயகன் வலம் வருகிறார். ஆனாலும் விடாமல் இறுதிவரை சண்டை செய்கிறார்.
நாயகனின் பழைய நண்பராகவும், டேபிளின் தலைவனாக வரும் வில்லன் ”உன் பொண்ணுக்கு தொந்தரவு தருவேன்” என சொல்லியே தனக்கான வேலைகளை செய்யும் ஆளாக வரும் டோனி யென் (Donnie Yen) முக்கியப் பாத்திரத்தில் வருகிறார். ஒரு நாயை கூட்டிக்கொண்டு நாயகனை பின்தொடர்ந்து கொண்டே, வில்லனிடம் பேரம் பேசிக்கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டு, படம் முழுவதும் வரும் சாமியர் ஆண்டர்சன் (Shamier Anderson) முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.
சண்டைப் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் பாருங்கள். இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது
0 பின்னூட்டங்கள்:
Post a Comment