> குருத்து: அயோத்தி (2023) திரைப்பார்வை

March 5, 2023

அயோத்தி (2023) திரைப்பார்வை



அயோத்தியில் துவங்குகிறது கதை. நாயகியின் அப்பா உத்திரப்பிரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் பூஜை பொருட்கள் விற்கிறார். தீவிர இந்துத்துவ மனநிலையில் இருக்கிறார். கரசேவைக்கு அழைக்கும் பொழுது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கி அவர்களோடு செல்கிறார். தன் வீட்டில் ஆணாதிக்கத்துடனும், அடாவடித்தனமாகவும் நடந்துகொள்கிறார். குடும்பமே அவரைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால் அவருடைய துணைவியார் கல்லூரி செல்லும் தன் மகளிடத்திலும், பள்ளி செல்லும் மகனிடத்திலும் அன்பாகவும் அரவணைப்பாகவும் நடந்துகொள்கிறார்.


தரிசனத்திற்காக இராமேசுவரத்திற்கு தன் குடும்பத்தை அழைத்து செல்கிறார். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ரயிலில் மதுரை வந்து சேர்கிறார்கள். சூரிய உதயத்திற்குள் இராமேசுவரத்திற்கு செல்லவேண்டும் என்ற அவசரத்தில் ஒரு வாடகை டாக்சியைப் பிடிக்கிறார். தன் அடாவடித்தனத்தால் ஓட்டுனரோடு சண்டையிட மிக வேகமாக செல்லும் அந்த டாக்சி மோசமான விபத்துக்குள்ளாகிறது. அதில் அந்த குடும்பத் தலைவியின் தலையில் கடுமையாக அடிபட்டு உயிர் துறக்கிறார்.

விபத்தில் எல்லா பொருட்களையும் இழந்து, ஒரு உயிரை பலிகொடுத்தும் ஆதரவற்று நிற்கிறது அந்த குடும்பம். இந்நிலையில் எப்படி தன் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், தொய்வில்லாமலும் இறுதி வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்ததாய் தெரிவிக்கிறார்கள். படம் சொல்ல வந்ததை எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓட்டுநரின் நண்பராக வரும் நாயகன், கடைசி வரை நண்பனுடன் துணை நிற்கும் நாயகனின் நண்பன், தீபாவளி நாளில் கூட உழைக்கும் மனிதர்கள், பைக்கை விற்று உதவும் நண்பன், நிலைமையை புரிந்துகொண்டு உதவும் விமான நிலைய அதிகாரிகள், தங்கள் பேரனை முதன்முதலாய் பார்க்க போகும் அந்த பாட்டியும் தாத்தாவும் ”பிறகு போய்க்கொள்கிறோம்” என உதவும் இடம் என படம் முழுவதும் வரும் மனிதர்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள்.

தீவிர கரசேவகர் மனநிலையில் இருக்கும் நாயகியின் அப்பா, அவருடைய பிடிவாதமான மத நம்பிக்கைகள், ஒவ்வொரு இடத்திலும் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் மேற்கொண்டு மேற்கொண்டு சிக்கலாக்கிக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் தன் மகளே சட்டையை பிடித்து உலுக்கிய பிறகு, திருந்துவது எல்லாம் கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும், நம்புவோம், ”மதம்” பிடித்து ஆடுகிற மனிதர்கள், இயல்பு நிலைக்கும் திரும்புவார்கள்.

தன் இளவயதில் அனாதையாக நின்றோம் என்பதற்காக நாயகன் கடைசி வரை உதவி செய்ததாக படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், தன்னளவில் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளாத நிறைய மனிதர்கள், முகம் தெரியாத பல மனிதர்களின் நிலையைப் உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு வரலாறு முழுவதும் நிறைய உதவியிருக்கிறார்கள். நடைமுறை வாழ்வில் பலபேரை அப்படிப் பார்த்தும் இருக்கிறோம்.

சிறுபான்மை மதம் சார்ந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து, அவர்களுக்கு எதிராக எல்லாவித அராஜகங்களையும், அட்டூழியங்களையும் செய்து, இந்துத்துவ பயங்கரவாத மோடி கும்பல் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து ஆண்டுக்கொண்டிருக்கிறது. ஆகையால் அவர்களுடைய நச்சு கருத்துகளை பரப்பும் விதத்தில் வரலாற்றை திரித்தும், பொய்கள் கலந்தும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நச்சு சூழ்நிலைக்கு மத்தியில் இப்படியொரு படம் வந்திருப்பது மிகவும் ஆரோக்கியமானது.

எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் கதை எழுத, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் மந்திரமூர்த்தி. ரகுநந்தன் இசைத்திருக்கிறார். படத்தில் நாயகனாய் சசிக்குமார், தந்தையாய் யஷ்பால் சர்மா, மகளாய் நடித்திருக்கும் ப்ரீத்தி, அந்த அம்மா, அந்த பையன், புகழ், போஸ் வெங்கட் என அனைவருமே சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்கவேண்டிய படம். குடும்பத்தோடு பாருங்கள். நண்பர்களோடும், உறவினர்களோடும் விவாதியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: