1991. காலை 9 மணி. வீடு மள மளெவென தீப்பிடித்து எரிகிறது. உள்ளே இருக்கும் தனது மூன்று பெண் பிள்ளைகளை காப்பாற்ற போராடி, முடியாமல் புகைமூட்டம் தாளாமல் தள்ளாடி வெளியே வருகிறார் நாயகன். ”அப்பா, அப்பா” என பிள்ளைகளின் கூக்குரல் கேட்கிறது. சிலிண்டர், பிரிட்ஜ் என சில பொருட்களும் வெடிக்கின்றன. காப்பாற்ற முடியாமல், செய்வதறியாது அழுதுக்கொண்டே திகைத்து நிற்கிறான். தீயை அணைப்பதற்காக வண்டிகள் வருகின்றன. விபத்து நடந்த பொழுது நாயகனின் துணைவியார் இரவு வேலைக்கு போயிருக்கிறார்.
விசாரணை துவங்குகிறது. அடுத்து வந்த நாட்களில் திடீரென ஒருநாள் நாயகனை கைது செய்கிறார்கள். நடந்தது தீ விபத்து இல்லை. நாயகனே கொளுத்தியிருக்கிறான் என போலீசு குற்றம் சாட்டுகிறார்கள். ”ஆமாமாம். நாயகன் கூட என்கிட்ட கொளுத்தியதை சொல்லி அழுதான்” என ஒருவன் சாட்சி சொல்கிறான். அவன் மனப்பிசகு உள்ளவன் என (sociopath) என மருத்துவர் சான்றளிக்கிறார். அவன் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. கடந்த காலங்களில் அவன் மனைவியோடு தொடர்ந்து சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறான். இப்படி அவனின் தனிப்பட்ட பண்புகளும் சிக்கலாக இருக்க… வழக்கில் அவனுக்கு மரணதண்டனை தரப்படுகிறது.
ஊரே குழந்தைகளை கொன்றவன் (Baby Killer) என தூத்துகிறது. சிறைக்கு வந்தாலும் திட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். நொந்துப்போய் தன்னைத்தானே வதைத்துகொள்கிறான். அதனால் தனிமை சிறையில் போடுகிறார்கள். தனது துணைவியாரே வந்து பார்க்காமல் இருக்கிறாள். எல்லாம் வெறுத்துப் போகிறான்.
வேறு ஒருவரின் உதவியால் படிக்க துவங்குகிறான். அவனுடைய தொடர்ந்து மேல் முறையீடுகளால், வருடங்கள் உருண்டோடுகின்றன. ஒரு பெண் நாடக ஆசிரியரின் (Playwright) முகவரியைப் பிடித்து அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். நாடக ஆசிரியர் அவனை சிறைக்குப் போய் பார்க்கிறார். அவன் பேச்சில் இருந்த நம்பிக்கையில்… அந்த வழக்கை விசாரிக்க துவங்க… திட்டமிட்டு அவனை குற்றவாளியாக்கியிருக்கிறார்கள் என கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
இறுதியில் அவன் மரண தண்டனையில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
பிள்ளைகளின் மீது அத்தனை அன்புடன் இருந்தவன், தன் சொந்தப் பிள்ளைகளையே கொன்றவன் என ஊரே திட்டித் தீர்க்கும் பொழுது நொறுங்கிப்போகிறான். அதற்காகவாவது தான் நிரபராதி என நிரூபிக்கப்படவேண்டும் என விரும்புகிறான். ஆனால் அதற்கான சட்டப்பூர்வமான எல்லா வழிகளையும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
பெண் நாடக ஆசிரியர் இந்த வழக்கை சாத்தியமான வழிகளில் விசாரிக்க துவங்க… அதில் வெளிப்படும் உண்மைகள் அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்கின்றன. அவன் குற்றமற்றவன் என சட்ட ரீதியாக நிரூபிக்க அவள் நகர்த்தும் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. நாட்கள் நெருங்க நெருங்க அவள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள்.
1980களிலிருந்து 158 பேர் குற்றவாளிகள் என மரண தண்டனை என கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என புதிய தடயங்களால் (Evidences) தெரிய வந்திருக்கின்றன என படம் முடியும் பொழுது தெரிவிக்கிறார்கள். படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார். “நீதி வழங்கும் முறை உடைந்துவிட்டது” (System is broken).
ஆயுத பலத்தாலும், அரசியல் பலத்தாலும் உலகையே உருட்டி மிரட்டி பல படுகொலைகளையும் போரையும் தூண்டி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் நீதியை சரியாக வழங்கிவிடுமா என்ன? அமெரிக்க மக்கள் அநீதிக்கு எதிராக போராடவேண்டும்.
சமூக ஏற்றத் தாழ்வு கொண்ட நம் சமூகத்திலும் சட்டங்களை அதிகார, பணபலம் கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வளைப்பதும், எளியவர்கள் மாட்டிக்கொண்டு, தண்டனைகளில் சிக்கிக்கொள்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறன. அமெரிக்காவில் நடந்தது போலவே இங்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பல வழக்குகளை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், பல அதிர்ச்சியான உண்மைகள் நமக்கும் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
2009ல் அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க்கரில் (New Yorker) டேவிட் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாயகனாக ஜாக் ஓ கானல், நாடக ஆசிரியராக லாரா என இருவரும் முக்கிய பாத்திரங்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள். எட்வர்ட் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment