கடந்த ஞாயிறு (05/03/2023) மதியம் மூன்று மணியளவில் ”நண்பன் சக்தி (எ) இனியன் இறந்துவிட்டான்” என்ற அதிர்ச்சியான செய்தியை நண்பர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. ஆகையால் தொடர்ச்சியாய் டயலிசஸ் செய்யவேண்டும் என சொல்லிய பொழுதே, இனியனின் பாதி ஜீவன் போய்விட்டதாக உணர்ந்தேன்.
அவரும் அவருடைய நண்பர்களும் அறிவுச்சுடர் நடுவம் என்ற அமைப்பை நடத்திவந்தார்கள். சமூக மாற்றம் குறித்து விவாதிக்கும் களமாய் அது இருந்தது. கல்லூரியில் படிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதன் தொடர் பங்கேற்பாளர்களாய் இருந்தார்கள். அங்கு வாரம் வாரம் ஞாயிறு மாலை ஒரு தலைப்பில் தயாரித்து அதன் உறுப்பினர்கள் பேசுவார்கள் அல்லது வெளியில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துரையாடிவிட்டு செல்வார்கள். வெளியில் இருந்து பேச வருபவர்களுக்கு தகுதி பெரிய ஆள் என்பதெல்லாம் இல்லை. சமூக மாற்றத்திற்காக ஏதாவது பங்காற்றியவர்களைத் தான் அங்கு பேச அழைத்தோம். அதன்படி தோழர்கள் கோ. கேசவன், தியாகு, தொ. பரமசிவன் என பல ஆளுமைகள் அங்கு வந்து பேசியிருக்கிறார்கள்.
வார வார நிகழ்வுகளில், ஆண்டு விழாக்களில் இனியன்
• கவிதை வாசித்திருக்கிறான். மேலோட்டமாக இருக்காது. எடுத்துக்கொண்ட தலைப்பில் உணர்வுப்பூர்வமாகவும், ஆழமாகவும் எழுதுவான்.
• இனிமையாக பாடல் பாடுவான். ஏதாவது திரைப்பாடலை, கிராமிய பாடலின் மெட்டை எடுத்துக்கொண்டு சொந்த முறையில் அருமையாக பாடல் எழுதுவான்.
• நளினமாக நடனம் ஆடுவான். வேலுவும், இனியனும் ஆடத்தெரிந்தவர்களுக்கு எல்லாம் நடனமும் சொல்லித்தருவார்கள்.
• தேர்ந்த நடிகன் அவன். நாடகங்களில் அத்தனை அருமையாய் நடிப்பான்.
• நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவன். அவன் இருக்கும் இடம் எப்பொழுது கலகலப்பாக இருக்கும்.
• ஒரு குறிப்பிட்ட தலைப்பில் படித்து, நன்றாக தயாரித்து அருமையாக உரை ஆற்றுவான். இப்படி எல்லாவற்றிலும் ஆல்ரவுண்டராய் இருந்தவன் அவன்.
முல்லைப் பெரியார் அணையை பாதுகாப்போம் என தொடர் பிரச்சார இயக்கத்தில் தெரு நாடகங்களில் நடித்திருக்கிறான். கிராமிய, முற்போக்கான, புரட்சிகரமான பாடல்களுக்கு பல பொது மேடைகளில் ஆடியிருக்கிறான்.
இத்தனையும் செய்த இனியன், நான் சந்திக்கும் பொழுது +2 முடித்துவிட்டு கொத்தனராக வேலை செய்துகொண்டிருந்தான் என்பது ஆச்சர்யம். மிலிட்டரில் வேலை செய்து ஓய்வு பெற்ற வயதான அப்பா, அம்மா, அவனின் சகோதரியின் இரண்டு பிள்ளைகள் என மொத்தக் குடும்பத்தையும் அவன் தாங்கிக்கொண்டு இருந்தான்.
தமிழின் மீது அவனுக்கு மாறாத காதல் இருந்தது. அதனால் தான் சக்தி என்ற பெயரை சொல்லாமல், இனியன் என தன்னை அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டான். அன்றிலிருந்து இனியன் ஆனான். கடுமையான கொத்தனார் வேலைக்கு போய்க்கொண்டே தபால் வழியில் பிஏ தமிழ் இலக்கியம் படித்து. முடித்தான்.
பிறகு வழக்குரைஞர் படிக்க நுழைவுத் தேர்வு எழுதினான். அப்பா மிலிட்டரிகாரர் என்பதால் அந்த கோட்டா உதவி செய்தது. சட்டப்படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்து வழக்குரைஞர் ஆனான். படிக்கும் காலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் உறுப்பினராக இருந்து அரசியல் வேலைகளை முன்னெடுத்தான்.
வாழ்க்கை எல்லோரையும் வேறு வேறு திசைகள் நோக்கி தள்ளப்பட்டோம். இடைவெளிகள் உருவாகிவிட்டது.
காதல் திருமணம் செய்தான். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. வழக்கறிஞர் தொழில் செய்தான். எல்லாம் நல்லவிதமாய் போய்க்கொண்டிருந்த பொழுது… அவன் மொத்த ஆளுமையையும் சிதைக்கும் குடியைத் தேர்ந்தெடுத்தான்.
ஒரு ஆண்டு விழாவில் ஆல் ரவுண்டராய் எல்லாவற்றிலும் கலந்துகொள்வான். அடுத்த ஆண்டு எதிலுமே கலந்துகொள்ளாமல் அமைதியாய் ஒதுங்கி நிற்பான். என்னவென்று கேட்டாலும், மவுனம் காப்பான். எல்லாவற்றிலும் ஆழம் தேடுபவன் குடியிலும் ஆழம் தேடி விழுந்துவிட்டான். அங்கு தொடங்கியது அவனின் வீழ்ச்சி. அதற்கு பிறகு அவனைப் பற்றி கேள்விப்படுகிற செய்திகள் வருத்தமாய் இருந்தன.
கடந்த மாதம் அண்ணன் மகனுக்கு திருமணம் என்ற பொழுது, சில நண்பர்களை அழைத்திருந்தேன். அண்ணன் மகன் போய் பத்திரிக்கை வைத்து அழைத்தான். நானும் உடல்நலம் விசாரித்து பேசினேன். அவன் உடலில் இருந்த பலவீனம் குரலில் தென்படவேயில்லை. பழைய ஆளாய் உற்சாகமாய் தான் பேசினான். திருமணத்திற்கு வருவதாய் தெரிவித்தான்.
கடந்த வாரத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு ராசாசி மருத்துவமனையில் அவன் உயிர் பிரிந்தது என்ற செய்தி கேட்ட பொழுது, பெரிய வருத்தம் எழுந்தது.
அவன் கீழிருந்து தன் முயற்சியில் எழுந்து வந்தவன். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவன். இன்னமும் சமூகத்திற்கு நன்றாக உழைத்திருக்க கூடியவன். ஒரு மனிதனிடமிருந்து நல்ல அம்சங்களை கற்றுக்கொள்வோம். அவனை வீழ்த்திய அம்சங்களில் கூட படிப்பினையாய் பெற்றுக்கொள்வோம்.
போய் வா நண்பா!
உனக்கு எங்களது அஞ்சலி!
இந்த மண்ணில் வாழும் வரை
உன் நினைவுகள் சூழ வாழ்ந்திருப்போம்!
பின்குறிப்பு : இனியனின் அழகான புகைப்படத்தை கொஞ்சம் மங்கலாக்கித்தான் தந்திருக்கிறேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment