GSTPS பொதுக்குழு கூட்டத்தில் கிடைத்த சில அனுபவ பகிர்வுகள்
சொசைட்டியின் செயல்பாடுகள்
நமது சொசைட்டி துவங்கி சில மாதங்களிலேயே ஆட்கொல்லி கொரானா உலகையே முடக்கிவைத்தது. இந்தியாவும் ஊரடங்கு அறிவித்தது. இந்த புதிய சூழ்நிலை. கடந்த சில பத்தாண்டுகளில் நாடும், மக்களும் எதிர்கொள்ளாதது. 20 நாட்கள் கடந்தன. நாம் இணைய வழி ஜூம் கூட்டங்களை ஏற்பாடு செய்து, வரிசையாக கூட்டங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டோம். கொரானாவிற்கு முந்தைய காலத்தில் மாதத்தில் ஒரு கூட்டம் என்றால், கொரானாவிற்கு பிறகு மாதம் நான்கு கூட்டங்களாக நடத்தியது பாராட்டத்தக்கது. கால நிலைமைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளாத உயிரினங்கள் உலகில் நீடிப்பதில்லை என உயிரினங்களின் அறிவியல் நமக்கு போதிக்கிறது. அதுபோல தான் அமைப்பும் . புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சொசைட்டியின் செயல்பாடுகளும் உடனே மாறியது. நமது தலைவர் கொரானா காலத்தில் அயல்நாட்டில் மாட்டிக்கொண்டார். இந்திய நேரத்திற்கு தன்னை தகவமைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக கூட்டங்களை ஒருங்கிணைத்தார். இந்த சொசைட்டி எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு இரண்டு நல்ல உதாரணங்கள்.
ஒரு அமைப்பு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நிதி எப்பொழுதும் அவசியம். ஒரு மனிதர் தனிப்பட்ட முறையில் செலவாளியாக இருக்கலாம். ஆனால் சொசைட்டி உறுப்பினர்களுடன் பெறப்படும் கட்டணம், நன்கொடையாக பெறப்படும் பணம் என்பது பொதுப்பணம். அதை கையாளும் பொழுது மிகவும் பொறுப்பாக கையாளவேண்டும். அதை நிர்வாகிகள் நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு செலவு செய்யப்படும் பொழுது கவனமாக இருக்கிறார்கள். (இருந்தாலும் இன்னொரு கீசெயினும் கொடுத்திருக்கலாம். ) அதனால் தான் நிதியை சேகரித்து பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்கிறார்கள்.
பல அமைப்புகளில் தனது உறுப்பினர்களின் நலன்களுக்காக சிந்திக்கும் பொழுதும், செயல்படும் பொழுதும் அதை அமுல்படுத்த நிதி பற்றாக்குறை தான் கைகளை கட்டிப்போடும். இப்பொழுது நமது அமைப்பில் வருடாந்திர சந்தா என்பது மட்டும் பெறப்படுகிறது. சொசைட்டியில் பல்வேறு நிலைகளில், பல்வேறு வருமான அளவிலும் இருக்கிறார்கள். சொசைட்டி லாபம் ஈட்டுவதற்காக அல்ல! பொதுநலன் அடிப்படையிலான சேவையை முன்னிட்டு நிறுவப்பட்டது. அதனால தான் சொசைட்டியின் அடிப்படை செலவுகளை எதிர்கொள்வதற்காக குறைவான தொகையை தீர்மானித்து சந்தா என்ற பெயரில் வாங்குகிறார்கள். ஒரு சொசைட்டியின் இருப்பு, அதன் வளர்ச்சியின் பங்கில் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரும் எந்தவித சன்மானமும் பெறாமல் உழைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆகையால் கூடுதல் வருமானம் ஈட்டுபவர்கள் கூடுதல் நன்கொடை கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராயிருந்தால், போனஸ் என வாங்கும் பொழுது, சொசைட்டிக்கு ஒரு தொகையை தரலாம் என சிந்திக்கவேண்டும். கொடுக்கவேண்டும்.
சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த நமது உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் நேரிடையாக கூட்டம் நடக்கும் பொழுதெல்லாம், தலைவர் செந்தமிழ்செல்வன் சாரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக தருவார் என தலைவர் பகிர்ந்து கொண்ட பொழுது, நெகிழ்வாக இருந்தது. பலருடைய நலன்களுக்காக உழைக்கும் ஒரு அமைப்புக்கு நிதி எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருந்தால் தான் அவர் தொடர்ந்து கொடுத்திருக்கிறார். அவரிடமிருந்து அந்த நல்ல பண்பை நாம் எடுத்துக்கொள்வோம்.
உறுப்பினர்களின் எண்ணிக்கை
ஒரு அமைப்புக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் பிரதானமானது. எவ்வளவுக்கு நாம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சொசைட்டிக்கு நல்லது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வேலையை நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள் என சிந்திப்பது அல்லது அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது இரண்டுமே தவறு.
ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என இந்த சொசைட்டி செயல்பாடுகள் யாருக்கு கிடைத்தால் பயன்பெறுவார்களோ அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை உறுப்பினராக்கும் வேலையை செய்யும் ஒரு பணியை செய்வது அவசியமானது. தனது துறை சார்ந்த அறிவுக்காக எப்பொழுதும் தேடுதலோடு இருப்பவர்களுக்கு ஒருமுறை சொன்னாலே, சொசைட்டியில் இணைந்துவிடுவார்கள். நமது உறுப்பினர் Godwin Joe அப்படித்தான் நம்மோடு இணைந்தார். சிலருக்கு தொடர்ச்சியாக நமது கூட்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம், ஒரு சில கூட்டங்கள் கலந்துகொண்ட பிறகு உறுப்பினராக முன்வருவார்கள். அதற்கும் சிலர் உதாரணங்களாக இருக்கிறார்கள்.
ஐந்து பேரிடம் தொடர்ச்சியாக பேசினால், ஒருவர் உறுப்பினராகிவிடுவார் என்பது தான் கடந்த கால அனுபவமாக இருக்கிறது. ஆகையால் ஒவ்வொரு உறுப்பினரும் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மனதில் வைத்து அவர்களிடம் பேசுவதின் மூலம், சொசைட்டியின் செயல்பாடுகளை பகிர்ந்துகொண்டால் உறுப்பினர்களாவார்கள்.
நமது சொசைட்டியின் அனுபவமே கடந்த ஆண்டு இருந்தவர்கள் சிலர் அவர்களுடைய சொந்த காரணங்களால் விலகியிருக்கிறார்கள். நிர்வாகிகள் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்புடன் பேசியதில் அதை உறுதியும் செய்திருக்கிறார்கள். ஆக சிலர் விலகுவது இயல்பு தான். எப்பொழுதும் ஒரு அமைப்பு உற்சாகத்துடன் இயங்கவேண்டும் என்றால், புதியவர்கள் உள்ளே வந்துகொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் ஏற்கனவே இயங்கும் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உற்சாகம் வரும். இல்லையெனில் பார்த்த முகத்தையே பார்ப்பது சோர்வையே தரும்.
அதே போல, ஒரு பேச்சாளர் ஒரு உரைக்காக பல மணி நேரங்கள் படிக்கிறார். நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். உறுப்பினர்களுக்கு மனதில் எளிதாக பதியவேண்டும் என்பதற்காக வண்ணமயமாக PPT தயாரிக்கிறார். அவர் வகுப்பு எடுக்கும் பொழுது, நமது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரி பாதிபேர் தான் கலந்துகொள்கிறார்கள். அதற்கு குடும்ப நெருக்கடி, வேலை நெருக்கடி, உடல்நிலை என காரணங்களை முறையாக தெரிவிக்கிறார்கள். குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொழுது அவர் நிச்சயம் சோர்வடைவார். இதற்காகவும் நாம் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது அவசிய தேவையாகிறது.
இன்னும் சில நல்ல விசயங்களை இன்றைய கூட்டத்தில் பகிர்ந்துகொண்டோம். அதை நாளை பேசுவோம்.
நன்றி.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment