”எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.”
****
நாயகன் பணி ஓய்வு பெறும் வயதில் இருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய துணைவியார் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் புற்றுநோயால் இறந்து போயிருக்கிறார். அவருடைய இழப்பு அவருக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. விரைவில் தன் துணைவியாருடன் சென்று சேர்ந்துவிடவேண்டும் என நினைக்கிறார். மீதி நாட்களை அவளின் நினைவுகளில் வாழ்கிறார்.
பிரியத்துக்குரியவரை இழந்ததில் மனிதர் சிடுசிடுவென மாறிவிடுகிறார். தன் குடியிருப்பில் வாழும் அத்தனைப் பேரிடமும் அப்படித்தான் அணுகுகிறார். தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்குப் போனால், நிர்வாக மாற்றத்தினால், சிலருக்கு நல்ல செட்டில்மெண்டில் விருப்ப ஓய்வு கொடுக்கிறோம். அதில் நாயகனும் பட்டியலில் இருக்கிறார் என சொல்கிறார்கள். ”போங்கடா!” என திட்டிவிட்டு வந்துவிடுகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் தன் துணைவியாரின் கல்லறைக்கு போய், இன்று நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமால் பகிர்கிறார். ”விரைவில் உன்னுடன் வந்துவிடுகிறேன்” எனவும் சொல்கிறார்.
இந்த சமயத்தில் அருகே மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அங்கு வந்து சேர்கிறது. நிறைமாத கர்ப்பிணியான ஒரு அம்மா, அவரின் கணவன், அவர்களின் இரண்டு சின்ன பிள்ளைகள் என அவர் வீட்டுக்கு எதிரே குடிவருகிறார்கள். நாயகன் சிடு சிடுவென அவர்களிடமும் நடந்துகொண்டாலும், அவர்கள் குறிப்பாக அந்த அம்மா உரிமையோடு உதவியும் வாங்கிகொள்கிறார். உணவு, குக்கீஸ் என செய்து கொடுக்கவும் செய்கிறார்.
தன் துணைவியோரோடு போய்ச்சேர ஒவ்வொரு முறை தற்கொலை செய்துகொள்ள முயலும் பொழுதும், கர்ப்பிணி அம்மாவும், சுற்றி உள்ளவர்களும் ஏதோ விதத்தில் இடையூறு செய்து தடுத்துவிடுகிறார்கள்.
பிறகு என்ன ஆனது என்பதை முழு நீளப்படத்திலும் சொல்லி முடிக்கிறார்கள்.
****
முதலாளித்துவ சமூகமாக இருக்கும் அமெரிக்காவில், மக்கள் தொகை 33 கோடியாக இருந்தாலும், தனிநபர் சுதந்திரம் என்பது அதிகமாகி, யாரையும் எதையும் சொல்ல முடியாத இடத்திற்கு போய்விட்டார்கள் எனலாம். அதனால் தான் அங்கு குடும்பங்கள் சிதறி சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால் அங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும், தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பேன்.
அதனால் தான் தன் பிரியத்துக்குரிய துணைவியார் இறந்து போனதும், சமூகத்தோடு வாழ பிடிக்காமல், தன் வாழ்வை முடித்துக்கொள்ள பார்க்கிறார். ஆனால், வாழ்க்கை அப்படியில்லையே! எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.
2012ல் நாவலாக எழுதப்பட்டு, ஸ்வீடிஸ் மொழியில் முதலில் (2015) எடுக்கப்பட்டு, 2022ல் இங்கிலீஷில் வெளியாகியிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் Tom Hanks சிறப்பாக நடித்திருக்கிறார். பிறகு அந்த மெக்சிகன் பெண்ணாக வரும் Mariana Treviñoவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
அருமையான படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment