> குருத்து: யாத் வஷேம் நாவல் அறிமுகம்

March 27, 2023

யாத் வஷேம் நாவல் அறிமுகம்



கர்நாடக சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட நாவல்

 

ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் நாடு பிடிக்கும் சண்டையில் ஈடுபட்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலகட்டம்.  முதல் உலகப்போரில்,தொலைத்ததைப் பிடிக்கும் வெறியில் இட்லர் ஜெர்மனியில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தான். ஒவ்வொரு நாடாக படை எடுத்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான்.  சொந்த நாட்டிலும், தான் ஆக்கிரமித்த நாடுகளிலும்  பொதுவுடைமைவாதிகளை, தொழிற்சங்கவாதிகளை, ஜனநாயகவாதிகளை, யூதர்களை என பல லட்சம் பேரை வேட்டையாட  துவங்கினான்.

 

இதில் குறிப்பாக யூதர்களை பெண்கள், குழந்தைகள் என வித்தியாசமே இல்லாமல் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தினான். வதை முகாமில் சோறு தண்ணீர் இல்லாமல் வதைத்தான்.  சுட்டுக்கொன்றான்.  விஷ வாயுவை செலுத்தி கொன்றான்.  இப்படி அறுபது லட்சம் யூதர்களை கொன்று குவித்தான் என வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறது.


அமெரிக்க அருங்காட்சியம்

 

இந்த வரலாற்று கொடூரத்தை,  யூதர்கள் பட்ட கொடும் துன்பத்தை இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இன்றைக்கும் பதிவு செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.  எவ்வளவு பேசினாலும் ஆறாத ரணம் அது. புகழ்பெற்ற நாவல்கள், புகழ்பெற்ற திரைப்படங்கள் நிறைய வந்திருக்கின்றன. 

 

இட்லருடைய காலத்திற்கு முன்பும், இட்லருடைய நெருக்கடி காலக்கட்டத்திலும் தங்களுடைய எல்லா உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என யூதர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏதுமற்றவர்களாய் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.  இந்தியாவிற்கும் சிலர் அப்படி வந்திருக்கிறார்கள்.   இந்தப் பின்னணியில் தான் இந்த நாவல் எழுதப்பெற்றுள்ளது.

 

***


பெர்லின் நினைவகம்

இரண்டாம் உலகப்போர் துவங்குகிற காலகட்டம். ஜெர்மனியில் இளம் விஞ்ஞானியாக பண்புரிகிறார். இடலரின் யூத வெறுப்பின் வேரைத் தெரிந்துகொண்டவர்கள் ஜெர்மனியிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம் பெயர துவங்கினார்கள். மேல்த்தட்டில் அதுவும் விஞ்ஞானத்துறையில் பணிபுரியும் விஞ்ஞானியின் மீது கைவைக்க மாட்டார்கள் என அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் அங்கும் யூதர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள்.  கைமீறி போய்விட்டது என உணர்கிறார். இருப்பினும் கடைசி நேர முயற்சியில், உயிர் பிழைத்தால் போதும் தனது உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு தனது துணைவியார், இரண்டு மகள்களோடு  கிளம்புகிறார்.


இஸ்ரேல் அருங்காட்சியம்

 

ஒரு வழியாக பக்கத்து நிலமான டச்சின் ஆர்ம்ஸ்டர்டாமில் தஞ்சம் புகுந்து, வாழத் துவங்குகிறார்கள். குறுகிய காலத்திலேயே ஜெர்மனியின்  கொடூரப்படைகள் அங்கும் ஆக்கிரமிக்கிறார்கள்.   மீண்டும் அங்கிருந்தும் தப்பிக்கவேண்டிய நிலை. தன் குடும்பத்தோடு கிளம்புகிறார்கள். குடும்பம் மொத்தமும் கிளம்பிபோய், மாட்டிக்கொள்ள கூடாது என முடிவு செய்து,  தன் ஒன்பது வயது மகளை கையில் பிடித்துக்கொண்டு முன்னே போகிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, அவருடைய துணைவியார் 11 வயது மூத்த மகள், இரண்டு வயது மகனோடு வருகிறார். அப்பாவும், பொண்ணும் தப்பித்துவிடுகிறார்கள். பின்னால் வந்தவர்கள் ஜெர்மன் படைகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

இந்தியாவில் கர்நாடகாவின் பெங்களுருக்கு வந்து சேர்கிறார்.  தொலைந்து போன தன் குடும்பத்தாரை தொடர்புப்படுத்த எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.   இரண்டு ஆண்டுகளில்  அவரும் இறந்துவிடுகிறார்.  பெங்களுருவில் ஒரு குடும்பத்தால் ஆதரவு தரப்பட்டு தங்கள் சொந்த பிள்ளைகளோடு, அந்த சின்னப் பெண்ணும் வளர துவங்குகிறாள்.

 

தனது பால்ய கால நினைவுகள், தங்களது குடும்பத்தைப் பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளுக்கு நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.   எப்படியாவது தன் சொந்த மண்ணில் போய் சேர்ந்துவிடுவோம் என இட்லர் எப்பொழுது வீழ்ச்சியடைவான் என அங்கிருந்து வரும் செய்திகளை கவனித்தப்படியே இருக்கிறாள்.   சோவியத்  ரசியா இட்லரை முறியடித்தது. அதற்கு ரசிய மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். 2 கோடி மனித உயிர்கள்.

 

ஆனால், அவளுக்கு நல்ல செய்தி அவள் குடும்பத்தினரிடம் இருந்து எதுவும் வரவில்லை.  இது தான் நம்ம ஊர். இது தான் நம்ம குடும்பம் என மனதளவில் ஏற்றுக்கொண்டு வாழத்துவங்கிவிடுகிறாள்.   வளர்ந்த பிறகு அந்த வீட்டு பையனையே திருமணம் செய்துகொள்கிறாள். மகன் பிறக்கிறான். வளர்கிறான். நல்ல படிப்பு படிக்கிறான். நல்ல வேலையும் கிடைக்கிறது.

 

அறுபதுகளில் இருக்கும் அவள் தனது குடும்பத்தைத் தேடி தனது கணவனுடன் ஜெர்மனி செல்கிறாள்.  அங்கு கொல்லப்பட்ட யூதர்களைப் பற்றிய செய்திகள் முறையாக சேகரித்து வைக்கப்படவில்லை. ஜெர்மன் அரசு நடந்த கொடுமைகளை மறைக்க முயல்கிறது.  அமெரிக்காவில் சிறப்பாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என தகவல் சொல்கிறார்கள். அங்கும் செல்கிறார்கள். , ”இஸ்ரேலில் உள்ள ”யாத் வஷேம்” போனால் உங்களுக்கு தேவையான செய்திகள் கிடைக்கும்” என்கிறார்கள். 

 

இந்த தொடர்ச்சியான தேடலின் முடிவில் தனது சொந்தங்களை கண்டறிந்தாரா? இல்லையென்றால் அறுபது லட்ச மக்களோடு கொல்லப்பட்டுவிட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****

 

பெங்களூரில் பல மொழி பேசும் மக்கள், பல சாதி, மதங்களை, அதன் பண்பாடுகளை கடைப்பிடிக்கும் மக்கள் என கலந்து வாழும்  சூழலில் வாழ்ந்த யூத பெண்மணி ”இஸ்ரேலின்” அரசியல் சூழலை நினைத்து வருந்துகிறார்.

 

யூதர்கள் தங்களுக்கு என ஒரு சொந்த மண் இல்லையே என தங்கள் கடவுள் ”கை காட்டிய இடம்” என பாலஸ்தீனத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து,  இட்லரிடம் இருந்து தப்பித்த யூதர்கள்  இன்னும் வேகமாய் நிலங்களை ஆக்கிரமித்து 1948ல் ”இஸ்ரேல்” என அறிவித்துவிட்டார்கள்.

 

அறிவித்த நாள் துவங்கி, இன்றைக்கு வரைக்கும்  அந்த மண் கலவர பூமியாகத் தான் இருக்கிறது.  இஸ்ரேல் தனது அரசியல் செல்வாக்காலும், படைப் பலத்தாலும் பாலஸ்தீன மக்களை மேற்கு கரையிலும், காஸா (Gaza) பகுதிக்கும் ஓரமாய் தள்ளிவிட்டுவிட்டார்கள்.  பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த மண்ணை இழந்து பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.  தாங்கள் இழந்த சொந்த மண்ணை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

வரலாற்றில் போரை, இட்லரின் யூத வெறுப்பை வெறுப்பவர்கள் பாலஸ்தீன மக்களை ஒடுக்கும் ”இஸ்ரேலை” ஆதரித்து விட முடியுமா!  எல்லோரும் இணைந்து வாழும் நிலைமை எப்பொழுது சாத்தியப்படும் என்பதை முன்வைக்கிறார்.

 

தொலைந்து போன குடும்பத்தில் அக்காவை மட்டும் கண்டறிகிறார்.  அவர் தன் சொந்தங்களுடன் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ”இங்கேயே இருந்துவிடாலாமே!” என்கிறார்.  இத்தனை ஆண்டுகள் வாழ்க்கையில் இந்தியா தன்னை தன் மகளாக ஏற்றுக்கொண்டுவிட்டது. அது தான் தன்னுடைய சொந்த மண் என உணர்வதாக கிளம்பிவருகிறார்.  ”இட்லர் நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்.  நமக்குள் பிறந்துவிடக்கூடிய இட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது” என முடிக்கிறார்.

இந்தியாவிலும் வலது சாரி வெறுப்பு அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.   வெறுப்பையும், வதந்திகளையும், கவவரத்தையும் ஊதி  ஊதிப் பெருக்கித்தான் மனிதர்களின் ரத்தம் குடித்துத்தான் தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்தார்கள். அமைப்புகளை வளர்த்தார்கள். மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்து ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள். 

பெரும்பாலான மக்களுக்கு எல்லாம் செத்ததற்கு பிறகு தான் சொர்க்கம் என போதிப்பவர்கள். மனுதர்மத்தின் மேலடுக்குகளில் வாழ்பவர்களுக்கு மட்டும் இந்த மண்ணில் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவித்தார்கள்.  இழந்த சொர்க்கத்தை மீட்பதற்குத்தான் அவர்கள் விடாப்பிடியாக போராடுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று ”சொர்க்கத்தை” அடைந்துவிட்டால் , இந்த மண்ணிலேயே பெரும்பாலான மக்கள் நம்மால் ”நரகத்தை” பார்த்துவிடமுடியும்.

அவர்கள் முன்வைப்பது இட்லரின் வெறுப்பு அரசியலைத் தான்.  யூதர்களுக்கு மட்டுமல்ல! மனித குலத்திற்கே ஆறாத ரணம் தான் இட்லரின் வெறுப்பு அரசியலும், படுகொலைகளும்!  பார்ப்பனிய பயங்கரவாதிகளான் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், அதன் அடியாட்படைகளையும் அரசியல் அரங்கிலிருந்து துரத்தும் பொறுப்பு இங்கு மனித நேயத்தை விரும்பும் அத்தனைப் பேருக்கும் முன்னுள்ள கடமையாகும்.

 

ஆசிரியர் : நேமி சந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி

விலை : ரூ. 399

பக்கங்கள் : 360

வெளியீடு : எதிர் வெளியீடு.

0 பின்னூட்டங்கள்: