> குருத்து: பெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி!

December 2, 2008

பெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி!

கச்சா பேரல் விலையை தீர்மானிப்பதில் வாஷிங்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள இரண்டு சந்தைகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த சந்தையை நிதிமூலதன கும்பல்கள் தான் ஆட்டி படைக்கின்றன. கச்சா பேரல் விலையில் ஊக வணிகம் விளையாடுகிறது என்பதை சமீபத்தில் சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.

உலக சந்தையில் கச்சா பேரல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் பாதிக்காமல் இருக்க... அரசு பெட்ரோல் விலையை முன்பு நிர்ணயம் செய்தது. இடைக்காலத்தில் அதில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, உலக சந்தையில் என்ன விலை விற்கிறதோ அதற்கேற்றார் போல விலை நிர்ணயம் செய்யும் நிலை வந்தது. 160 டாலருக்கும் மேல் விற்ற கச்சா பேரல் விலை இன்றைக்கு 50 டாலருக்கும் கீழே விற்கிறது. நடப்புக் கொள்கைப் படி கூட இந்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க மறுக்கிறது.

ஏறியிருக்கும் பொழுது, நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தன. இறங்கி நிற்கும் பொழுது, இந்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.

****

தொடரும் கட்டுரை "லைட் லிங்க்" என்பவர் எழுதியுள்ளார்.

முதலாளிகளுக்கு ஒரு சிரமம் என்றால், அரசு பதறுகிறது. விலையை குறைக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு சிரமம் என்றால், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

****

முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு விமான எரிபொருள் விலையை சரிபாதிக்கும் கீழாக குறைத்துள்ள மன்மோகன் சிங் அரசு, சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடத் தேவைகளுள் ஒன்றான பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க மறுத்துவருகிறார்.இவருக்கும், சிதம்பரத்திற்க்கும் இந்திய ஏழைகள் கண்ணுக்கு தெரிவதே இல்லை. இவர்கள் போட்டுள்ள கண்ணாடிகளின் சிறப்பம்சம்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையிலும் கூட உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க மன்மோகன் சிங் அரசு மறுத்து வருகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கும் கீழாக வீழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 123 டாலரை தொட்ட போது, உள்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை பேரல் ஒன்றுக்கு 67 டாலர் அளவிற்கே இருக்கிறது என்ற உண்மையை அரசே ஒப்புக் கொண்ட போதிலும் கூட, சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மறுப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் 5 முறை, விமான போக்குவரத்து நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் (ஏவியேசன் டர்பைன் ஆயில்) விலையை மன்மோகன் சிங் அரசு குறைத்துள்ளது. ஒரு கிலோ லிட்டர் (1000 லிட்டர்) ரூ.71,000 ஆக இருந்த விமான எரிபொருள் விலை தற்போது கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.43,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான எரி பொருளுக்கு இறக்குமதி வரி 5 சத வீதத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி தனியார் விமான கம்பெனிகளுக்கு மிகப்பெரும் அளவில் சலுகை அளித்திருப்பதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் சந்திக்கும் மிகப் பெரும் இழப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கோ, நிதியமைச்சரோ யோசிக்க தயாராக இல்லை.

ஆனால் அதே நேரத்தில் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், அதையொட்டி அனைத்து விதமான பொருட்களின் விலை உயர்வாலும் மிகக் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் தரும் பொருட்டு, பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மறுப்பதன் மூலம் ஒரு ஈன அணுகுமுறையை பின்பற்றுகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பதே நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல பலனை ஏற்படுத்தும்; அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க உதவும்.

உலகெங்கும் பெட்ரோல் விலை குறைப்பு

உலக நாடுகள் பலவும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலையைக் குறைத்துள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மட்டும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ), பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, கென்யா போன்றவையும் பெட்ரோல் விலையைக் குறைத்த நாடுகளின் பட்டியலில் அடங்கும். பெட்ரோல், டீசல் விலையை மலேசியா கடந்த செவ்வாயன்று மேலும் குறைத்தது. கடந்த ஆகஸ்ட்டுக்குப் பின் மலேசியா பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது இது ஆறாவது முறையாகும்.

பாகிஸ்தானில் பெட்ரோல் 13 சதவீதமும், டீசல் 11.6 சத வீதமும் குறைக்கப்பட்டது.
வங்கதேசம் முறையே 10.3 சத வீதமும் 12.7 சதவீதமும் குறைத்தது.

இலங்கையில் நவம்பர் முதல்வாரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் பெட்ரோல் விலை 15 ரூபாயும் குறைக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் கடந்த அக்டோபருக்குப் பின் ஐந்து முறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
கென்யாவில் பெட்ரோல் 5 சதவீதம் டீசல் 4 சதவீதமும் குறைக்கப்பட்டது.

அயர்லாந்தில் பெட்ரோல் விலை 3 சதவீதம் குறைக்கப் பட்டது.

கென்யாவிலும் அயர்லாந்திலும் கூட சில்லரை விற்பனை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பெட்ரோல் - டீசல் விற்பனை செய்யும் தனியார் கம்பெனிகள் நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலேயே எண்ணெய் உற்பத்தி நாடுகளும், பெட்ரோல் சில்லரை விற்பனை விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

துபாயில் டீசல் விலை காலனுக்கு 60 திர்ஹம் (துபாய் நாணயம்) குறைக்கப்பட்டது. கடந்த ஜூலைக்குப் பின் 10 முறை எரிபொருள் விலை இங்கு குறைக்கப்பட்டது!

கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் அக்டோபருக்குப் பின் பெட்ரோலியப் பொருட்களின் விலை 16.7 சதவீதம் குறைக்கப்பட்டது!

சீனாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலை குறையத் தொடங்கியது.
உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சாதனையை உலகிலுள்ள எந்த நாடும் நிகழ்த்தியதில்லை.

நன்றி : http://lightlink.wordpress.com

1 பின்னூட்டங்கள்:

Che Kaliraj said...

"இந்தியாவில் ஏழைகள் என்ற வர்கம் இல்லை. அப்படி இருந்தால் அவை வரி கட்ட மட்டுமே அன்றி வேறில்லை. ஏழைகளை பற்றி எல்லாம் கவலை பட நேரமில்லை அம்பானி குடும்ப சண்டையை பற்றி யோசித்து யோசித்து பல நாட்களக தூக்கமில்லை. எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்லி ஓயவில்லை, இதில் விலைவாசி வேறு, எத்தனையை சமாளிப்பது? புஷ்க்கு கொடுத்த வாக்கை காப்பற்றியாகி விட்டது. தனியார் பண முதலை களுக்கு தனம் செய்ய வேண்டிய நேரத்தில் பெட்ரோல் வேலை குறைப்பா? முடியாது முடியவே முடியாது. பல கட்சி தாங்கும் தான் அரசு ஆட்டம் கண்டு விடாமலிருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அதனையும் செய்து கொண்டு இருக்கிறோம். இப்படிபல நல்ல காரியங்கள் செய்தாலும் இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாய் எதிர்க்கிறார்கள் என்ன காரணம்?" புரியாமல் அமெரிக்க நலம் விரும்பி