December 25, 2008
சொட்டு மருந்தில் தெரியுது பார் பிள்ளை பாசம்!
என் வீடு
என் மனைவி
என் மக்கள் – என
நத்தைக் கூட்டுக்குள்
நகருகிறது வாழ்க்கை.
சன்னல் திறப்போம்!
சமுத்திரமாய்
விரிந்து கிடக்கிறது
உலகம்!
சமூகத்தையும் நேசிக்க
கற்றுக்கொள்வோம். – யாரோ!
***
தமிழகம் கடந்த ஞாயிறன்று (21.12.2008) சொட்டு மருந்து பீதியால் கல கலத்து போயிருந்தது. தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை தூக்கி கொண்டு எல்லோரும் மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள். பிள்ளைகளை மருத்துவர்களைப் பரிசோதிக்க சொன்னார்கள்.
கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தால், மருத்துவர்களால் பரிசோதிக்க முடியாத சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையும், திருப்பூரில் ஒரு மருத்துவமனையும் கோபத்தில் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
அதிமுக விசுவாசிகளும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்து வெளியிட்ட செய்திகள் வதந்திகள் தான் என இப்பொழுது தெரிந்துவிட்டது.
இந்த பதிவு சொட்டு மருந்து பீதியைப் பற்றியது அல்ல! மாறாக குழந்தைகளின் பெற்றோருடைய மனநிலையை பற்றி பேசுவது.
****
இது நடந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஒருநாள் அப்பாவுக்கு திடீரென கடுமையான தலைவலி. இரண்டு மணி நேரத்தில் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். மருத்துவமனையில் அட்மிட் செய்து, சோதித்ததில்... மூளைக்கு செல்லும் ரத்த குழாய் உடைந்து, மூளையில் ரத்தம் கசிந்துவிட்டது.
4 நாட்கள் தனியார் மருத்துவமனையில் வைத்திருந்து விட்டு, பணப் பிரச்சனையில் அரசு மருத்துவமனைக்கு அப்பாவை எடுத்துச் சென்றோம்.
மயக்க நிலையில் இருந்த அப்பாவுக்கு அட்மிசன் போட உள்ளே போனால்... 50 பேர் வரிசையில் நிற்கிறார்கள். உள்ளே போய் “அப்பாவுக்கு சீரியஸ். மயக்க நிலையில் இருக்கிறார்” என்று சொன்னால்... “இங்கே எல்லாமே சீரியஸ் கேஸ்தான்” என எரிச்சலாய் பதில் வந்தது.
ஒன்றரை மணி நேரம் கழித்து, அப்பாவுக்கு அட்மிசன் கிடைத்தது. அதற்கு பிறகு, அவர்கள் கொடுத்த மோசமான சிகிச்சையில் ஆறு மணிநேரத்தில் நினைவு திரும்பாமலே இறந்து போனார்.
அப்பொழுது... மொத்த மருத்துவமனையை கொளுத்த வேண்டும் என்ற வெறி வந்தது.
இப்படி நம்மில் பலருக்கும் இது மாதிரி பல சம்பவங்களை கடந்து தான் வந்திருக்கிறோம்.
பலரும் தங்கள் சொந்த பந்தங்கள், உறவுகள் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மருத்துவமனையில் கடுமையான முறையில் சண்டை போடுகிறோம். போட்டிருக்கிறோம். அதே தான் இந்த சொட்டு மருந்து பீதி விசயத்திலும் நடந்திருக்கிறது.
சொந்த விசயங்களுக்காக இப்படி கோப ஆவேசத்துடன் சாலை மறியல், மருத்துவமனையை நொறுக்கி சண்டையிடுகிற நாம்... ஏன் பொது விசயங்களுக்காக கோப ஆவேசப்படுவதில்லை. அது மற்றவர்களுக்கு என்பதலா!
“மனிதனை ஒரு சமூக விலங்கு” என்கிறது இயற்கை விஞ்ஞானம்.
“தனக்கான ஆடையை தானே தான் தயாரிக்க வேண்டும் என இருந்தால் மனிதன் இன்னும் இலை தளைகளை தான் கட்டிக்கொண்டு திரிந்திருப்பான்.
தனக்கான தானியத்தை தானே தயாரிக்க வேண்டும் என்றால், விளைவிக்கிற உணவு நமக்கு வாய்க்கு அரிசியாக தான் நம் வாயில் விழும்.
“தனக்கான வீட்டை தானே தான் கட்ட வேண்டும் என்றால்... கட்டுகிற வீடே நமக்கு கல்லறையாகிவிடும்” - (அப்துல்ரகுமான்)
எல்லோருக்கும் தேவையானதை சமூகமே சேர்ந்து தான் உருவாக்குகிறோம். ஆனால், நமக்கான பிரச்சனைகளுக்கு மட்டும் நாம் ஒன்று சேர்ந்து போராட மறுக்கிறோம்.
வளர்ந்த நாடுகளில் ஒரு பொது பிரச்சனை என்றால்... லட்சகணக்கில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.
ஆனால், நம் தமிழகத்தில்... முற்போக்கு, ஜனநாயக, மார்க்சிய, பெரியாரிய, மார்க்சிய-லெனினிய அமைப்புகள் பல சமூக பிரச்சனைகளுக்காக களத்தில் போராடுகின்றன. ஆனால், பல போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 300 அல்லது 500-ஐ தாண்டுவதில்லை.
இப்படி நம் வீடு, மனைவி, குழந்தைகள் என மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்வதால் தான் தமிழகத்தில் பாசிச ஜெயலலிதாவை எதிர்கட்சி தலைவியாக பெற்றிருக்கிறோம். (பத்து ஆண்டுகள் ஆட்சியும் ஆண்டிருக்கிறார்) ஊழலில், நாட்டைக் காட்டிக்கொடுப்பதில் முன்ணணியில் திகழும் காங்கிரசு மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை நாம் எப்பொழுது உணரப்போகிறோம்?
நம் பொதுப்பிரச்சனைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில் தான், நம் வாழ்வின் துன்ப துயரங்களுக்கான விடிவும், மக்கள் விரோதிகளாய் வலம் வந்து கொண்டிருக்கிற பலருக்கு முடிவும்
இருப்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்?
****
பின்குறிப்பு : மீண்டும், சொட்டு மருந்து பீதி விசயத்திற்கு வருவோம். இந்த பீதிக்கு அதிமுக விசுவாசிகள் மற்றும் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே காரணம் இல்லை.
வேறு காரணங்களும் இருக்கின்றன. கடந்த முறை சொட்டு மருந்து போடும் பொழுது சில குழந்தைகள் இறந்தன. மருந்தில் பிரச்சனை இருந்ததாக ஆய்வில் சொன்னார்கள். இறந்த குழந்தைகளுக்காக அரசு பொதுமக்களிடம் மன்னிப்பா கேட்டது? அல்லது இனிமேல் இவ்வாறு நடக்காது என உறுதிதான் கொடுத்ததா?
ஈரோட்டில் ஒரு குழந்தை இறந்தது சொட்டுமருந்தினால் அல்ல! அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தான் என அரசு தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டது.
ஆனால், பிற மாவட்டங்களில் மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றன. அதில் ஒரு குழந்தை மட்டும் சளித்தொந்தரவால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற இரு குழந்தைகளின் நிலை மருத்துவ சோதனைக்கு பிறகு உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சொட்டு மருந்து கொடுக்காவிட்டால் குழந்தை போலியாவால் பாதிக்கப்படும். ஆனால், குழந்தை உயிரோடு இருக்கும் அல்லவா! என்று தானே மக்கள் இயல்பாக சிந்திப்பார்கள்.
மக்கள் நலன் நாடு அரசு அமையாத வரை, ஒவ்வொரு முறையும் சொட்டு மருந்து கொடுப்பதா, தடுப்பூசி போடுவதா என்பது ஒரு மக்களுக்கு மனப்போராட்டம் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
தினசரிகளில் பறந்து செல்லும் செய்திகளை சமூகக் கண்ணோட்டத்துடன் பார்த்து பதிவதில் மகிழ்ச்சி.
வினவு
ஒரு பாட்டில் மருந்தில் 10,20 பேருக்கு சொட்டு மருந்து போடலாம்..!
ஒரு குழந்தைக்கு மட்டும் பிரச்சனை என்றால்..?
!!!
//சொந்த விசயங்களுக்காக இப்படி கோப ஆவேசத்துடன் சாலை மறியல், மருத்துவமனையை நொறுக்கி சண்டையிடுகிற நாம்... ஏன் பொது விசயங்களுக்காக கோப ஆவேசப்படுவதில்லை. அது மற்றவர்களுக்கு என்பதலா!//
தனக்காக என்பது நமக்காக என்று வரும் பொழுது சட்டம், ஒழுங்கு சொல்லிக் கொடுக்காமலேயே வந்து சேர்கிற மர்மம்தான் நாம் ஆராய வேண்டியது.
உதாரணம் ஜார்க்கண்டில் நடைபெற்ற சிறுவியாபாரிகளின் ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டம்.. அங்கே ரிலையன்ஸ் கடையை சூறையாடுவதில் முடிந்து, அக்கடை இழுத்து மூடப்பட்டது. இங்கே அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் நடைபெற்றது.
சுயமரியாதை இயக்கம் கண்ட தமிழகத்தில் எதிர்பார்க்கும் பல சமயங்களில் சுயமரியாதை உறங்கிக் கிடப்பதும், எதிர்பாராத சில சமயங்களில் பொங்கியெழுவதும் புதிராகவே இருக்கிறது. மென்மேலும் இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
Post a Comment