> குருத்து: Coherence (2013)

October 1, 2020

Coherence (2013)

 


Science Fiction Thriller

கதை. ஒரு வால்நட்சத்திரம் விழுந்துகொண்டிருக்கிறது. இதற்காக கூடலாம் என முடிவெடுத்து நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களில் ஒருவருடைய வீட்டில் கூடுகிறார்கள். பரஸ்பரம் குசல விசாரிப்புக்கு பிறகு, 1973 வாக்கில் வால்நட்சத்திரம் ஒன்று பூமியைக் கடந்து சென்றது குறித்து நாயகி விளக்குகிறாள்.


”கடந்து சென்றதின் தொடர்விளைவாக பலருக்கும் ஞாபகக் கோளாறு ஏற்பட்டது. எவருக்கும் தனது சொந்த வீடு ஞாபகத்திலில்லை. மாறாக வெவ்வேறு வீடுகளில் பல வருடங்கள் வாழ்ந்தது போல மாற்றி வாழ்ந்தனர். இது பல நாட்கள் நீடித்தது. ஆனால், ஒருத்திக்கு மட்டும் ஞாபகத்தில் எந்த பிசகும் இல்லை. போலீசுக்கு போன் செய்து தன் வீட்டிலிருப்பவன் தனது கணவனல்ல என்று புகார் கொடுத்தாள். ஆனால், போலீசோ அவன் தான் அவளது கணவனென்று பல சான்றுகளை முன் வைத்தது. அவள் இல்லவே இல்லையென்று வாதிட்டாள்.


இறுதியாக அவள் சில உண்மைகளை வெளியிட்டாள். முந்தைய நாள் மாலை வேளையில் தனது கணவனை அவள் கொன்று விட்டதாகவும், இப்போது இருப்பவன் தனது கணவனே இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கி எறிந்தாள். அவள் வார்த்தைகளில் அவள் உறுதியாகவும் இருந்தாள். காவல்துறை ஆடிப் போனது. அப்படியென்றால் இப்போது அதே உருவத்தில் இருப்பவன் யார்? குழப்பமே மிஞ்சியது. இறுதியாக காவல் துறை ஒரு விசயத்தை உறுதி செய்தது. வால் நட்சத்திரம் கடந்து சென்றதில் ஏற்பட்ட கால மாற்றத்தால், இறந்த கணவன் இறப்பதற்கு முன்பான நேரத்தில் திரும்பி வீடு வந்திருக்கிறான்.” என சொல்லிமுடிப்பாள். "அப்ப திரும்பி வந்தவனை மீண்டும் போட்டுத்தள்ளவேண்டியது தான்!” என சிரித்துக்கொண்டு சொல்வார்கள்.


பிறகு, எல்லோருடைய செல்போனிலும் டவர் இல்லாமல் போகிறது. இன்டெர்னெட் வேலை செய்யவில்லை. சிறிது நேரத்தில் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வெளியே போய் வால்நட்சத்திரத்தை பார்க்கலாம் என சிலர் வெளியே போகிறார்கள். ஒரு வீட்டில் மட்டும் வெளிச்சம் நன்றாக இருக்கிறது. குழுவில் ஒருவர் தன்னுடைய தம்பிக்கு ஒரு தகவலை அவசரமாக சொல்லவேண்டும். அந்த வீட்டில் போய் பேசிவிட்டு வருகிறேன் என இன்னொருவருடன் சொல்லி கிளம்புகிறார்கள். திரும்பி வரும் பொழுது, இருவருக்கும் சில காயங்களுடனும், ஒரு சின்ன பெட்டியுடன் வந்து சேர்கிறார்கள். அந்த பெட்டியில் அந்த வீட்டில் உள்ளவர்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. பின்னாடி எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்ன என ஆராய்கிறார்கள்.


இதுவரை சொன்னதெல்லாம், படத்தின் சில நிமிடங்கள் மட்டும் தான். அதற்கு பிறகு குழப்பமான பல சம்பவங்கள் அந்த வீட்டில் நடைபெறுகின்றன. அதை விளக்கினால், ஸ்பாய்லராகிவிடும். ஆகையால் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


****

கதை குவாண்டம் பிசிக்ஸ் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். கதையை படிக்காமல் எதைச்சையாக தான் பார்க்க துவங்கினேன். படம் பார்த்ததும் நிறைய குழப்பமாகிவிட்டது. இது சம்பந்தமாக தேடும் பொழுது தான் தெரிகிறது. படத்தின் நீளம் 88 நிமிடங்கள் தான். இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள வழக்கமாக படத்தை விமர்சனம் செய்கிற மக்கள் 30 நிமிடங்கள். நாற்பது நிமிடங்கள் என நீண்ட விளக்கம் கொடுக்கிறார்கள்.


அந்த விளக்கத்தை எல்லாம் கேட்ட பிறகு கூட ஏதோ புரிந்தமாதிரி இருக்கிறதோ ஒழிய, முழுசா புரிஞ்சுக்க முடியவில்லை. நமக்கும் அறிவியலுக்கும் தூரம் என்பதால் இருக்கலாம். இதற்கு முன்பு Triangle என ஒரு படம் பார்த்து மண்டையை பிய்த்துக்கொண்டேன்.


படம் பாருங்கள். குவாண்டம் பிசிக்ஸ் புரிந்துகொள்ள ஒரு உந்துதலாக இருக்கும்.

0 பின்னூட்டங்கள்: