> குருத்து: Nightcrawler (2014) English

October 25, 2020

Nightcrawler (2014) English


கதை. நாயகன் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்துவருகிறான். ஒருநாள் இரவு ஒரு விபத்து. அங்கு வந்த ஒரு நிருபர் வேகவேகமாக வந்து அந்த விபத்தை எடுத்துவிட்டு உடனே கிளம்புகிறார். எதையும் வேகமாக கற்கும் திறனுள்ள (பெரும்பாலான திருடர்களுக்கு உள்ள விசேச திறன் அது) அவன் இதன் மூலம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறான்.

கையிருப்பை வைத்து, ஒரு கார், ஒரு கேண்டி கேமிரா, போலீஸ் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வயர்லெஸ் செய்திகளை ஒட்டு கேட்க ஒரு ரேடியோ, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தோடு தொடர்பு என அடிப்படையான அம்சங்களை தயார் செய்து இரவுகளில் அலைய துவங்குகிறான். முதலில் ஏமாற்றம் இருந்தாலும், மெல்ல மெல்ல முன்னேறுகிறான். அவன் தரும் வீடியோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஒரு முன்னாள் திருடன் என்பதால், தன்னுடைய வளர்ச்சி மட்டும் தான் கண்முன்னால் நிற்கிறது. ஒரு பத்திரிக்கையாளனுக்குரிய அறம் என்பதே அவனிடம் இல்லை. அந்த தொலைக்காட்சி சானலின் முதலாளிக்கும் திருடனைப் போலவே தன் வளர்ச்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

அதற்கு பிறகு அவன் செய்வதெல்லாம் இன்னும் மோசமான கிரிமினல் வேலைகளாக இருக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

*****

தொலைக்காட்சி சானல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சி சானல்கள் பெரும் முதலாளிகளின் சானல்களாக இருக்கின்றன. கட்சிகளுனுடையதாக இருக்கின்றன. எந்த செய்தியை முதன்மைப்படுத்துவது: எதை விடுவது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன. இதில் எந்த ஊடகமாவது ‘’நடுநிலை’ என்று சொன்னால் வாய் கொள்ளாமல் சிரித்துவிடுகிறேன்.

இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு பத்திரிக்கையாளன் தனக்கான அறம் என்பதை கடைப்பிடிக்க இங்கு வாய்ப்பேயில்லை. அப்படி கடைப்பிடித்தால், அவனால் அங்கு நீடிக்கமுடிவதில்லை. சமீபத்திய தமிழகத்து சானல்களில் நடந்துகொண்டிருக்கும் நிலை இதுதான்.

நேர்மையில்லாத பத்திரிக்கையாளன் என்றே நேரடியாக கதையில் சொல்லியிருக்கலாம். அவனை ஏன் ஒரு திருடன் என சொன்னார்கள் என்பது தான் எனக்கு வியப்பு. அவன் திருடன். ஆனால், தொலைக்காட்சி சானலின் முதலாளியின் கூட்டு அருமையாக பொருந்துகிறதே! அது எப்படி? அது தான் கள எதார்த்த நிலைமையாக இருக்கிறது.

இதில் பார்வையாளர்களின் நிலை தான் மிகவும் சிக்கலானது. செய்திகளுக்கு பின்னால் தான் உண்மை இருக்கிறது என்பார்கள். பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தால் தான் நம்மால் உண்மையை கண்டறியமுடியும். இல்லையெனில் நம்மை எல்லாம் இருட்டிலேயே தான் வைத்திருப்பார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

படம் பட்ஜெட் படமாக இருந்தாலும், படம் எடுத்துக்கொண்ட கதைக்கரு என்பது சமூகத்தை பாதிக்க கூடியதாக இருக்கிறது. ஆகையால், இந்தப் படம் கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது.

படத்தின் முடிவும் அத்தனை எதார்த்தம். 'நீதிக்கதை'யை போல அவனை தண்டிக்காமல், மங்காத்தாவின் முடிவு தான். படத்தின் இறுதியில் தனது எல்லைகளை விரிவாக்குகிறான்.

படத்தில் சொற்ப பாத்திரங்கள் தான். ஆனால், எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் நாயகனும், அந்த சானல் முதலாளியும், அந்த சானலில் முதன்மை பத்திரிக்கையாளரின் நடிப்பும் சிறப்பு.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: