> குருத்து: Manjadikuru (2008) மலையாளம்

October 1, 2020

Manjadikuru (2008) மலையாளம்


 "தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை."

- இரா.பிரபாகர்


*****


கதை. 1980களில் நடக்கிறது. கேரளாவின் உட்பகுதியில் ஒரு பெரிய‌ வீட்டில் ஒரு பெரியவர் இறந்துவிடுகிறார். அவருக்கு இரண்டு பையன்கள். நான்கு பெண்கள். ஒருவரை தவிர மற்ற எல்லோருக்கும் திருமணமாகிவிடுகிறது. சென்னை, துபாய், அமெரிக்கா என தூரத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வருகிறார்கள். பிறகு அடக்கம் செய்கிறார்கள்.


அவர்கள் எல்லோரும் குடும்பமாக இருந்தாலும், வசதி, வாய்ப்பு அடிப்படையில் ஏற்ற தாழ்வாக இருக்கிறார்கள். அப்பாவின் உயில் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என எதிர்ப்பார்க்கிறார்கள். அம்மாவோ 16 நாள் ஆகட்டும். பிறகு பேசிக்கொள்ளலாம் என கறாராக சொல்லிவிடுகிறார்.


அந்த பெரியவரின் பேரப்பிள்ளைகள், அந்த வீட்டில் வேலை செய்யும் சிறுமியின் வாழ்வும் வழியாக தான் பெரியவர்களின் கதையும் சொல்லப்படுகிறது. இந்த 16 நாள் வாழ்க்கை தான் படத்தின் கதை.


****


மஞ்சாடிக்குரு என்பது கேரள மண்ணில் ஆங்காங்கே கிடைக்கக்கூடியது. பிள்ளைகள் வைத்து விளையாடக்கூடியது. நம்மூரில் களிமண்ணில் பிள்ளையார் செய்யும் பொழுது, கண்களுக்கு வைப்பார்கள் அல்லவா! அது தான் (தானா? இது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது).


பணக்காரர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவை. ஏழை குடும்பங்களின் வாழ்க்கை தனித்தானவை என்பார் புகழ்பெற்ற ரசிய எழுத்தாளர். சகோதர, சகோதர்களின் பகட்டு பேச்சு ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை நிலை சிக்கலாக தான் இருக்கிறது. 16 நாட்களில் அவர்கள் வாழ்வில் சிக்கல்களை, அவர்களின் குணங்களை நன்றாக புரிந்துகொள்ள வைத்திருப்பார் இயக்குநர்.


பெரியவரின் மூத்தப் பிள்ளை தனது இளமை காலத்தில் கம்யூனிசத்தின் பால் ஈர்ப்புகொண்டு, வீட்டை விட்டு வெளியேறியவர். பல ஆண்டுகள் கழித்து காவி உடை உடுத்தி தன‌து தந்தையின் இறப்புக்கு வருவார். அவரால் யாரோடும் ஒட்ட முடிவதில்லை. யாரும் ஒட்டுவதுமில்லை.


அதேபோல, தமிழகத்தின் சிவகாசி மண்ணில் பிறந்து, தந்தையை இழந்து, அந்த வீட்டில் வேலை செய்யும் சிறுமியின் வாழ்க்கை தான் எத்தனை துயரமானது? மற்றவர்கள் வெளி மண்ணில் வாழ, அப்பாவுடன் இருந்து சுக, துக்கங்களை சுமக்கும் மனிதனாக இளைய மகன். இனி இங்கு வாழமுடியாது. சென்னைக்கு நகர்ந்துவிட முடிவு செய்கிறார். மனிதர்களிடத்தில் தான் எத்தனை எத்தனை கதைகள்?


படத்தின் இயக்குநர் அஞ்சலி மேனன். உஸ்தாத் ஹோட்டல் படத்தின் கதை ஆசிரியர். பெங்களூர் டேஸ் படத்தின் இயக்குநர். படத்தில் நட்புக்காக பிருத்விராஜின் குரலில் தான் கதை விவரிக்கப்படுகிறது. இறுதியில் சில காட்சிகளில் வருகிறார். பிருத்விராஜ், திலகன், ஊர்வசி, ரகுமான், முரளி, அந்த சிறுவர்கள் என எல்லோருமே நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.


சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: