> குருத்து: The Ninth Gate (1999)

October 25, 2020

The Ninth Gate (1999)


கதை. நாயகன் அரியவகை புத்தகங்களை வாங்கி, புத்தக ஆர்வலர்களிடம் விற்க கூடிய ஆள். நியூயார்க்கில் பிரபலமான புத்தக ஆர்வலர் நாயகனை வரச்சொல்லி, தன்னிடம் உள்ள ஒரு அரிய புத்தகத்தை காண்பிக்கிறார். அதே போல வேறு இருவரும் அதே போல பிரதிகளை வைத்திருக்கிறார்கள். ஆக உலகத்திலேயே அந்த புத்தகம் மூன்று மட்டுமே இருக்கின்றன. அந்த மூன்றிலும் ஒன்று தான் மூலப்பிரதி. அந்த இரண்டு பிரதிகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கி ஆய்வு செய்து, எது உண்மையான பிரதி என கண்டறியவேண்டும். விலைக்கும் வாங்கி வந்துவிடவேண்டும் என பணியை தருகிறார். முதலில் தயங்குகிற நாயகன் அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்.

ஐரோப்பா சென்று முதலில் ஒருவரை சந்திக்கிறார். அவர் வைத்திருக்கும் பிரதியை காண்பிக்கிறார். இரண்டு புத்தகங்களையும் ஆய்வு செய்யவும் சம்மதிக்கிறார். இரண்டுக்கும் சில நுட்பமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அதை குறித்துவிட்டு வந்துவிடுகிறார். இந்த வேலையை ஒப்படைத்தவருக்கு தெரிவிக்கும் பொழுது, ”அந்த புத்தகத்தை வாங்கிவிடு! இப்பொழுது போய் அவரைப் பார்” என சொல்கிறார். அங்கு போனால், புத்தக உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த புத்தகத்தை யாரோ நெருப்பில் எரியவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இப்படி புத்தகங்களை தேடிய பயணத்தில் பல்வேறு சோதனைகள். இறுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்தாரா? என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

முதலில் படத்தில் என்னை ஈர்த்தது புத்தகங்களை தேடித் தேடிச் சேர்ப்பதும், அத்தனை புத்தகங்களையும் மர அடுக்குகளில் முறையாக பராமரிப்பதும், அந்த புத்தகங்களைப் பற்றி பேசும் பொழுது, கண்களில் ஒளியுடன் பேசுவதைப் பார்க்கும் பொழுது, நாம் புத்தகங்களை எவ்வளவு அலட்சியமாக கையாள்கிறோம் என வெட்கப்பட வைத்துவிட்டார்கள். புத்தகங்களை ஒழுங்காக கையாளவேண்டும் என்ற உணர்வை தந்தது.

புத்தகங்களைப் பற்றிய பயணமும், அடுத்து என்ன? அடுத்து என்ன? என்பதையும் நன்றாக எடுத்திருந்தார்கள். படம் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த Karundhel Rajesh சொல்வது போல இறுதிக் காட்சிகள் சொதப்பலாக இருந்தன.

படத்தில் பிரதானமாக நடித்த ஜானி டெப் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். மற்றவர்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். புகழ்பெற்ற Pianist படத்தை இயக்கிய ரோமன் பொலன்ஸ்கி தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

பார்க்கலாம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: