> குருத்து: Drag me to Hell (2009) Horror

October 25, 2020

Drag me to Hell (2009) Horror


கதை. நாயகி வங்கியில் பணிபுரிகிறார். அவருடைய வேலை திறனால், அவருக்கு விரைவில் உதவி மேலாளர் பதவி கிடைக்க இருக்க கூடிய நல்ல தருணம். இந்த சமயத்தில் தன்னால் வீட்டுக்கடனை அடைக்கமுடியவில்லை. இன்னும் கூடுதல் காலம் வேண்டும் என கேட்டு வருகிறார் ஒரு வயதான அம்மா.

மேலாளரிடம் விவாதிக்கும் பொழுது, “நீயே முடிவெடு!” என்கிறார். ரிஸ்க் வேண்டாம் என முடிவெடுத்து, கூடுதல் தவணைக்கு வாய்ப்பில்லை என மறுத்துவிடுகிறார். முதலில் கெஞ்சும் அம்மா, அங்கு நடக்கும் களேபரத்தால், கடுப்பாகி திட்டிவிடுகிறாள். வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள்.

இரவு வேலை முடிந்து, பார்க்கில் வண்டியை எடுக்கும் பொழுது, அந்த அம்மா காத்திருந்து தாக்குகிறாள். இறுதியில் எதையோ ஓதிவிட்டு சென்றுவிடுகிறாள்.

அதற்கு பிறகு அவளைச் சுற்றி நடப்பது எல்லாம் கோளாறாகவும், பயமுறுத்துவையாகவும் இருக்கின்றன. தன்னை காதலிக்கும் மருத்துவனோடு, பில்லி, சூன்யம் தொடர்பான ஒரு நபரை சந்திக்கிறார்கள். அவன் சோதித்துவிட்டு, ”அந்த அம்மா உன்னை கடுமையாக சபித்து இருக்கிறாள். இன்னும் மூன்று நாள். அந்த சாபத்தில் இருந்து விடுபடவேண்டும். இல்லையெனில், உயிரை பறித்துக்கொண்டு போய்விடும்” என திகிலூட்டுகிறான்.

பிறகு என்ன நடந்தது எனபது முழு நீள பயமுறுத்துகிற கதை.

***** 


1981ல் Evil Dead என்றொரு பேய்ப்படம். சமீபத்திய Conjuring போல மிகப்பிரபல படம். உலகையே அலற வைத்தது. அதன் தாக்கம் உலகம் முழுவதிலும் எடுக்கப்பட்ட பேய்ப்படங்களில் இருந்தது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மைடியர் லிசாவில் அதன் தாக்கம் அதிகம். அந்தப் படம் பார்த்து சிறுவயதில் அவ்வளவு பயந்திருக்கிறேன். அந்த பிரபல இயக்குனர் Sam Raimi. அவர் வேறு வேறு படங்கள் எடுத்து பிறகு பேய்ப்படம் எடுத்தார். அது தான் இந்தப்படம்.

சூன்யக்கார கிழவி என்பார்களே அது போல அந்த வயதான அம்மாவை காண்பித்திருப்பார்கள். அருமையாக பயமுறுத்திருக்கிறார். நாயகியும் சிறப்பாக பயந்திருக்கிறார். பிறகு அந்த சாபத்தை நீக்க போராடும் இடமும் காட்சிகளும் அருமை. கடைசியில் வருகிற ட்விஸ்ட் எதிர்பாராதது.

ஒரு இடத்தில் தனக்கு கிடைத்த சாபத்தை யாருக்கு கைமாற்றிவிடலாம் என நாயகி யோசிப்பாள். அதுபோல நமக்கு இந்த சாபம் கிடைத்து யாருக்கு கைமாற்றிவிடலாம் என யோசித்தால், தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பலபேர் மனதில் வந்துபோனார்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், யாருக்கு கைமாற்றிவிடுவீர்கள்?

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் கொஞ்சம் பயம் வரும். கொஞ்சம் சில்லிடவைக்கும்.

0 பின்னூட்டங்கள்: