> குருத்து: Stree (பெண்) 2018

October 25, 2020

Stree (பெண்) 2018


Hindi Comedy Horror

கதை. நாயகன் பெண்கள் உடை தைப்பதில் கைதேர்ந்தவன். கண்களாலே அளவெடுத்துவிடுகிறான். ஊர் திருவிழாவிற்கு வந்த நாயகி அவனை தனியாக சந்தித்து, தன் ஆடையை விரைவில் தைக்க சொல்லி வேண்டுகிறாள். மிகுந்த விருப்பத்துடன் சம்மதிக்கிறான்.

வட இந்தியாவில் ஒரு பழமையான கிராமம் அது. வருடம் தோறும் திருவிழா நடக்கும் நாட்களில், ஸ்திரி என்ற 'பிசாசு' ஊரைச் சுற்றிவரும். இளைஞர்கள் தனியாக சிக்கினால், அலேக்காக தூக்கிசென்றுவிடும். அதனால் ஸ்திரியை திசை திருப்பும் விதமாக "ஸ்திரி நாளை வா!" என எல்லோருடைய வீடுகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த மக்குப் பிசாசும் கட்டுப்படுகிறது.

இதற்கிடையில், இளைஞர்கள் ஒரு வீட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். இடையில் வெளியில் வந்த நாயகன் விளையாட்டாய் உச்சாப் போய் "ஸ்திரி நாளை வா!" வார்த்தைகளில், "நாளை" அழித்துவிடுகிறான். மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பிசாசு ஒரு இளைஞனை தூக்கி சென்றுவிடுகிறது. ஊரே களேபரமாகிவிடுகிறது.

நாயகனை நாயகி எப்பொழுதும் தனியாகவே சந்திக்கிறாள். சில விசேஷ பொருட்களையும் வாங்கி வரச்சொல்கிறாள். நாயகனின் நண்பன் அவள் 'ஸ்திரி'யாக இருக்கலாம் என எச்சரிக்கிறான்.

நாயகி தான் பேயா? நாயகியை காதலித்த நாயகன் என்ன ஆனான்? என்பதை கலகலப்பாகவும், பயமுறுத்தியும் சொல்லியிருக்கிறார்கள்.

*****

கர்நாடகத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில் நிலவுகிற ஒரு மூடக் கதையை எடுத்துக்கொண்டு, மத்திய இந்தியாவில் பொருத்தி இந்திப் படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஒரு சின்ன கிராமம். சில கதாப்பாத்திரங்கள். பிசாசை நம்பி, களத்தில் குதித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

'ஸ்திரி' பிசாசுக்கு சொல்லப்படுகிற கதையும், படத்தின் இறுதியில் சொல்லப்படுகிற செய்தியும் உணர்வுபூர்வமானவை. முடித்தவிதமும் பாராட்டத்தக்கவை.

நாயகியை சுற்றிய படம் என்றாலும், ஸ்ரத்தா கபூரை விட, நாயகன் ராஜ்குமார் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடுகிறார். மற்ற பாத்திரங்களும் சிறப்பு.

இந்தப் படம் பிலிம்பேர் விருதுகளுக்காக பல பிரிவுகளில் பரிந்துரைப்பட்டிருந்தாலும், 'அறிமுக இயக்குநர் பிரிவில்' இயக்குனர் வெற்றிபெற்றிருக்கிறார். படத்தின் வெற்றியில் இரண்டாவது கதை எடுக்க திட்டமிருக்கிறது என்கிறார்கள்.

பேய் படங்களை ஒரே மாதிரியே எடுக்காமல், நம்மூர்களில் நிலவுகிற இது போன்ற கதைகளை எடுத்தால், புதுசாவும் இருக்கும். இயல்பாகவும் இருக்கும்.

யூடியூப்பில் ஆங்கில சப் டைட்டிலுடன் நல்ல பிரதி இலவசமாக கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: