> குருத்து: Midnight Runners (2017) Korean

October 25, 2020

Midnight Runners (2017) Korean


கதை. போலீஸ் அகாடமியின் பயிற்சியின் பொழுது இருவர் நண்பர்களாகிறார்கள். இரண்டு வருடங்கள் கடக்கின்றன. தங்களுடன் பயிற்சியில் இருக்கும் ஒருவனுக்கு தோழி ஒருவள் இருக்கிறாள். எப்படி என விசாரிக்கும் பொழுது, பப்பில் சந்தித்ததாக சொல்கிறான். இவர்களும் ஆர்வமாக வெளியே வர அனுமதிவாங்கி, பப்புக்கு வருகிறார்கள். நடுநிசி வேளையில் வீடு திரும்பும் பொழுது, ஒரு இளம்பெண் கண்ணில்படுகிறாள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணை காரில் கடத்துகிறார்கள். முயன்றும், அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

ஒருவர் கடத்தப்பட்ட பிறகு வருகிற ஏழு மணி நேரம் என்பது முக்கியமான நேரங்கள் (Critical Hours). அதற்குள் கடத்தப்பட்டவர்களை மீட்டுவிடவேண்டும். இல்லையெனில் சிரமம் என பாடத்தில் படித்திருப்பார்கள். அதனால், உடனடியாக போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் தெரிவிக்கிறார்கள். அவர்களோ வேறு வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இருவருமே தங்கள் கற்றதை வைத்துக்கொண்டு, விசாரித்து, விசாரித்து, கடத்திய பெண்ணை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

அங்கு அந்த பெண் மட்டுமல்ல! நிறைய இளம்பெண்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடத்திய ஆட்களோ ஒரு மாபியா கும்பலாக இருக்கிறது. எதற்காக இளம்பெண்கள் கடத்தப்பட்டார்கள்? அந்த பெண்களை அவர்கள் மீட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

****

இரண்டு கத்துக்குட்டிகள். தங்களை விட இளம்வயது பெண் கடத்தப்படுவதைப் பார்த்து பதைப்பதைத்து ஒரு மனிதாபிமானத்துடன் மல்லுக்கட்டுவதை உணர்வுபூர்வமாகவும், காட்சிகளில் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

கற்பது வேறு. நடைமுறை வேறு என்கிற முரண்பாட்டை அவர்கள் உணரும் இடம் முக்கியமான இடம். பெண்ணை கடத்தி சென்றுவிட்டார்கள் என இவர்கள் பதைபதைப்புடன் வந்து சொல்லும் பொழுது, அங்கிருக்கும் ஒரு போலீசு அதிகாரி ”ஒரு பெரிய விஜபியினுடைய பேரன் காணாமல் போய்விட்டான். என்னவென்று உடனே பாருங்கள் என மேலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. மேலிட உத்தரவு ரெம்ப முக்கியம்” என சொல்லி வேகமாக கிளம்பி செல்வார்.

நம்மூரில் எளிய மக்களின் புகாரை போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்வதே பெரிய போராட்டம் தான். பல சமயங்களில் அவர்களை வழக்கை பதிய வைப்பதற்கே, ஒரு வழக்கறிஞரை பார்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்காடி உத்தரவு வாங்கி வரவேண்டியிருக்கும். அப்பவும் போலீசு உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்கமாட்டார்கள். ”உங்க உத்திரவை மதிக்க மாட்டேங்கிறாங்க!” என திரும்பவும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும். இப்படி பல ஆயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்பது தனிக்கதை. ஆனால், அதிகாரத்தில், ஆட்சியில், பணம் படைத்தவர்களுக்கு போலீசில் கிடைக்கும் மரியாதை எப்போதும் தனிதான்.

கத்துக்குட்டிகள் இந்த உண்மையை, எதார்த்தத்தை பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே கற்றுக்கொள்வார்கள். பிறகு அதுவே பழக்கமாகிவிடும். பிறகு அந்த உயரதிகாரியை போலவே ”சாமர்த்தியமாக” நடந்துகொள்வார்கள்.

மற்றபடி, கமர்சியலான படம். நண்பர்கள் இருவரும் சிறப்பாக தங்கள் பாத்திரத்தை தாங்கியிருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

படம்_செய்தி :

எதார்த்தம் ஒன்றாகவும், பாடம் நடத்துவது ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து ஆசிரியரை உற்றுப்பார்க்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: