> குருத்து: EZRA (2017) மலையாளம்

October 1, 2020

EZRA (2017) மலையாளம்


கதை. நாயகன் மும்பையில் அணு உலையில் அணுக்கழிவுகளை கையாளும் பிரிவில் அதிகாரியாக இருக்கிறார். பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. பதவி உயர்வுடன் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு வந்து சேர்கிறார்.


புதிதாக குடியேறிய அந்த பெரிய வில்லாவில், அலங்கரிப்பதற்காக சில புராதன பொருட்களை நாயகி வாங்குகிறார். அதில் கேரளாவில் வாழ்ந்த கடைசி யூதர் வீட்டில் இருந்து எடுத்து வந்த, ஒரு மரப்பெட்டியும் ஒன்று.


வெகுகாலமாக அடைக்கப்பட்டு, பழிவாங்க காத்துக்கொண்டிருந்த ஆவியை தெரியாமல் நாயகி திறந்துவிடுகிறார். நாயகியின் உடம்புக்குள் போய்விடுகிறது. இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாமல், இப்பொழுது கர்ப்பம் தரிக்கிறார்.


அந்த ஆவி யாரை பழிவாங்கியது? எதற்காக? என்பதையும் பதை பதைக்க சொல்லியிருக்கிறார்கள்.


****


வழக்கமான பேய் படங்களுக்கான சமச்சாரங்கள் இருந்தாலும், எடுத்த விதத்தில், கவனம் ஈர்த்திருக்கிறார்கள். தமிழில் நயந்தாரா நடித்த "மாயா" போல பிடித்திருந்தது. வழக்கமான இந்து சாமியார், சர்ச் பாதர் இல்லாமல், யூத இனத்தவருடைய சடங்குகள் இடம்பெற்றுள்ளது புதுசு!


பாலஸ்தீனத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து, இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான (!) யூதர்கள் அங்கு குடியேறினார்கள். கேரளாவில் வாழும் இஸ்ரா தந்தைக்கும் இஸ்ரேல் செல்வது தான் கனவாக இருக்கிறது. அதற்காக தனது மகன் வேறு ஒரு மதத்தை சேர்ந்த பெண் காதலை கடுமையாக எதிர்க்கிறார். அதில் ஒரு இடத்தில் யூத இனத்தின் பெருமை வேறு பேசுகிறார். கடந்த நூற்றாண்டில் இதற்காக எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது?


மற்றபடி நாயகன் பிரித்திவிராஜ் இத்தனை வருடங்களுக்கு பிறகு பிறக்க இருக்கும் குழந்தை சிக்கலானது என தெரிந்து, அவஸ்தைபடும் கணவராக நன்றாக பொருந்தியிருக்கிறார். பிரியா ஆனந்தும் அப்படியே! இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமையாக இருக்கிறது. திரையில் கர்ப்பிணிகளை எப்பொழுது தான் கொடுமைப்படுத்துவதை நிறுத்தப்போகிறார்களோ?


பழிவாங்கல், ஊரை அழிக்கும் அணுக்கழிவு - பேயெல்லாம் நிறைய முன்னேறி போய்க்கொண்டு இருக்கின்றன. நல்லவேளை பேய் எல்லாம் இல்லை. அதனால் தப்பித்தோம்.


பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: