> குருத்து: வைகுந்தபுரம் (2020)

January 19, 2022

வைகுந்தபுரம் (2020)


ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கும், அவரிடம் வேலை செய்பவருக்கும் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. தன் குழந்தை வசதியாக வளரவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையை மாற்றிவிடுகிறார். அதற்கு பிறகு 25 வருடங்கள் கழித்து கதை நகர்கிறது.


தன்னிடம் வளரும் (முதலாளியின்) மகனான நாயகனை மட்டம் தட்டி வளர்க்கிறார். முதலாளியின் வீட்டில் உள்ள பையன் வசதியாக வளர்கிறான். முதலாளிக்கு ஒரு மாபியா கும்பலால் தொல்லைகள் வருகின்றன. அந்த முதலாளியின் உயிரை காப்பாற்றுவதற்கு எதைச்சையாக நாயகன் உதவ, அந்த முதலாளியின் வாரிசு இவன் தான் என தெரியவருகிறது.

அதற்கு பிறகு நடந்ததை, கொஞ்சம் கலகலப்பாகவும், அடிதடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

****

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்டைல் படங்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் பெரிய வெற்றி. அடுத்த வாரத்தில் இந்தியில் ரீமேக் செய்து வெளியிடுகிறார்கள். ரெம்ப விரிவாக (Geographically) செல்லாமல் இரண்டு வீடு, ஒரு மருத்துவமனை, ஒரு ஹோட்டல் என சிம்பிளாக முடித்துவிட்டார்கள். அதை சரிக்கட்டும் விதமாக ஒரு பாடலில் 150, 200 பேர் ஆடுகிறார்கள். சண்டைகள் எல்லாம் டிசைன், டிசைனாக இருக்கிறது. வழக்கமான தெலுங்கு மசாலா இருந்தாலும், கொஞ்சம் அடக்கி வாசித்ததால், நமக்கும் பிடிக்கிறது.

அப்பாவை போல பிள்ளைகளுக்கும் அதே குணங்கள் வந்துவிடுமா என்ன? வளர்ப்பில் குணநலன்களை எல்லாம் மாற்ற முடியாதா? என்றெல்லாம் கேள்விகள் எல்லாம் கேட்டீர்கள் என்றால்… உங்களால இந்தப் படத்தை பார்க்க முடியாது. நாயகனுக்கு உண்மை தெரிந்த பிறகு, வழக்கமான முறையில் உறவினர்கள் இரண்டு பேரை கொடூரமாக காட்டாமல், கொஞ்சம் நிதானமாக நடந்துகொண்டது நன்றாக இருந்தது.

அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு என எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். சமீப காலங்களில் ஆந்திராவும், கேரளாவும் ரெம்பவும் கொஞ்சிகொள்கிறார்கள். எங்கே போய் முடியப்போகிறதோ?

நெட் பிளிக்சில் தெலுங்கிலும், மலையாளத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. மிக்ஸ் பிளேயரில் இலவசமாகவே பார்க்க முடிகிறது.

0 பின்னூட்டங்கள்: