> குருத்து: Spiderman - No Way Home (2021)

January 4, 2022

Spiderman - No Way Home (2021)


கடைசியாய் வந்த ஸ்பைடர் மேன் படத்தில் வில்லன், சாவதற்கு முன்பாக பீட்டர் பார்க்கர் தான் ஸ்பைடர் மேன் என உலகத்திற்கு (!) சொல்லிவிட்டு செத்துப்போகிறான். இப்பொழுது ஸ்பைடர் மேனின் பழைய சம்பவங்கள் எல்லாம் தோண்டி எடுக்கப்படுகின்றன. விசாரணைக்கு அழைக்கப்படுகிறான்.


அயர்ன் மேனின் ஸ்டார்க் நிறுவனம் அதில் சம்பந்தப்பட்டடிருப்பதால், எல்லா வழக்குகளும் சரிக்கட்டப்படுகின்றன.(!) புதிய பிரச்சனையாக பீட்டருக்கும், அவன் காதலிக்கும், நண்பனுக்கும் புகழ்பெற்ற எந்த கல்லூரியிலும் இடம் தர மறுக்கிறார்கள்.

ஆழ்ந்த (!) யோசனைக்கு பிறகு, டாக்டர் ஸ்ட்ரேஞ்சை சந்தித்து தன் பிரச்சனைகளை சொல்கிறான். ஆகையால், எல்லோரும் பீட்டர் தான் ஸ்பைடர் மேன் என்பதை மறக்கடிக்க செய்ய வாய்ப்பு இருக்கிறதா என கோருகிறான். ஏற்கனவே உலகத்தை காப்பாற்றியதில் ஸ்பைடர் மேனின் பங்கும் இருப்பதால் உதவ முன்வருகிறார்.

அப்படி செய்யும் பொழுது ”என் காதலி என்னைய மறக்க கூடாது. என் நண்பன் என்னை மறக்க கூடாது” என சொல்ல, ஒரு பெரிய சிக்கலாகிவிடுகிறது. பிரபஞ்சத்தில் இருந்து (Multi Universe concept) பூமியை போலவே இருக்கும் வேறு கிரகங்களிலிருந்து பழைய வில்லன்கள் எல்லோரும் ஸ்பைடர் மேனை தாக்க வருகிறார்கள்.

ஒவ்வொரு வில்லனையும் ஒவ்வொரு படத்தில் கடுமையாக மல்லுக்கட்டி டீல் செய்த ஸ்பைடர் மேன், இப்பொழுது மொத்தமாக வந்தால் என்ன செய்வான்? இதில் டாக்டர் ஸ்டேரஞ்சோடு வேறு கருத்து வேறுபாடு. ஆகையால் அவருடைய உதவி சுத்தமாக கிடைக்காது. இதுவரை நான் சொன்னதெல்லாம் துவக்க கதை தான். பிறகு என்ன ஆனது என்பதை முழு நீளப்படத்தில் சாகசங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.
****

ஸ்பைடர் மேனுக்கு வயது பதினேழு தான். இப்பத்தான் பள்ளி படிப்பையே முடித்திருக்கிறான். அந்த பையன் வந்து சொன்னததற்காக, தன் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு போனில் முடிக்கிற விசயத்தை விட்டுவிட்டு, ஸ்ட்ரேஞ் இப்படி அறிவுக்கெட்டத்தனமாக செய்யலாமா என ஒரு பதிவர் கேட்டது தான் படம் பார்க்கும் பொழுது எனக்கும் தோன்றியது. அசாத்திய பவர் கைக்கு வரும் பொழுது தான் மிகுந்த பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். 🙂

படத்தின் இறுதியில் போஸ்ட் கிரடிட் காட்சிகளில் இந்த படத்தில் ஸ்ட்ரேஞ் செய்த “பாவம்” அவரை தொட்டு தொடர்கிறது. அதற்கான விளைவுகளை எதிர்கொள்கிறார். 2022ல் படம் வரும் போலிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பான ஸ்பைடர் மேனை பார்த்தது பழைய நினைவுகளை கிளறுவதாக இருந்தது.

ஒண்ணு சூப்பர் மேன் கதைகளை தொடர்ச்சியாக பார்க்கவேண்டும். அதைத்தேடி மற்ற விசயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அரைகுறையுமா விட்டு விட்டு படங்களை மட்டும் பார்க்கும் பொழுது, சில விசயங்கள் புரிய மாட்டேங்குகிறது எனக்கு. 🙂

இந்தப்படமும் என் பொண்ணுக்காக தான் படம் பார்த்தேன். கொரானா காலத்தில் 3D படத்திற்கு போகிறோம் என யோசித்தேன். எப்பொழுதும் கண்ணாடியை திரும்ப வாங்குபவர்கள், நேற்று யூஸ் & த்ரோ கண்ணாடியை கொடுத்தார்கள். நல்லது. அந்த பயம் இருக்கட்டும். 🙂

கொரானாவின் 3 வது அலை உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகை ”காக்கும்” சூப்பர் மேன்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அவர்கள் செத்துவிட்டால், அபாயங்களிலிருந்து யார் உலகத்தை காப்பாற்றுவது? ஒரே கவலையாய் இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: