> குருத்து: நெடுஞ்சாலை மோட்டல் உணவகங்கள் - கொடுங்கனவு

January 29, 2022

நெடுஞ்சாலை மோட்டல் உணவகங்கள் - கொடுங்கனவு


அந்த அரசு பேருந்து மதுரையிலிருந்து கிளம்பிய பொழுது இரவு ஒன்பதை தாண்டிவிட்டது. குலுங்கி குலுங்கி தாலாட்டிக்கொண்டே சென்ற பேருந்து இன்னும் பலமாக குலுங்கி நின்றது. பேருந்தில் உள்ள சன்னலை ஒட்டி ஏதோ ஒன்றை வைத்து மோசமாக கீறிக்கொண்டே ஒரு குரல் பலரையும் எழுப்பியது. “பேருந்து இன்னும் 15 நிமிடம் தான் நிற்கும். ஆகையால் இறங்கி போங்க!” தூக்கம் கலைந்து, மெல்ல விழித்துப் பார்த்தால், பேருந்து நின்ற இடத்தில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத மாதிரி சத்தமாக பாடல் கேட்டது. அநேகமாக மணி ஒன்றை தாண்டிவிட்டது. அது எந்த பகுதி? என்ன மாவட்டம்? என தேடிப்பார்த்தால், அந்த உணவகத்தின் பெயர் போர்டில் பேர் மட்டுமே இருந்தது.


கண்களை கசக்கிக்கொண்டே, டாய்லெட்டில் யூரின் போக நுழைந்தால் மூத்திர நாத்தம் மூக்கைத் துளைத்தது. பளிச்சென லைட் போட்டால், அங்கிருந்த மோசமான நிலைமை தெரிந்துவிடும் என்பதற்காக, ஒரு மங்கலான பல்பு எரிந்துகொண்டிருந்தது. அந்த சிறந்த சர்வீஸ் தந்ததற்காகவே அவருக்கு ரூ. 5 கொடுத்தேன்.

ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தேன். லேசாக பசித்தது. பிஸ்கெட் வாங்கலாம் என்றால், பிரிட்டானியாவை போல உள்ள டூப்ளிகேட் பிஸ்கட். சன் பீஸ்ட் போலவே ஒரு எழுத்து மாறி வேறு ஒரு பிஸ்கெட் பாக்கெட் இருந்தது. தூக்க கலக்கத்தில் மக்கள் வாங்கிவிடுவார்கள் என அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. குடிக்க தண்ணீர் எங்கும் இல்லை. ஒரு லிட்டர் பாட்டில் 25. அதுவும் அந்த உணவக முதலாளியே அந்த பிராண்ட் தயாரிப்பார் போலிருக்கிறது. வேறு எங்கும் அந்த பெயரைப் பார்த்ததில்லை.

”பசிக்குது ஏதாவது சாப்பிடலாம்” என உடன் வந்த நண்பர் என்னை அழைத்தார். விஷப்பரிட்சை வேண்டாம் என்றேன். கேட்கவில்லை. ’விதி’ யாரை விட்டது? இருவரும் உள்ளே போனோம். ”புரோட்டா சொல்லவா” என்றார். ”இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது!” என்றதும், கொஞ்சம் சுதாரித்து ஒரு தோசை கேட்டார். ”தோசை என்பது செட்டாக தான் கிடைக்கும். (பிரிக்க முடியாது. பிரித்தால் ஓனர் கோவித்துக்கொள்வார்) என்றார். ”சரி கொண்டு வாங்க! என்றார். உடனே வந்தது. பேருந்தை விட்டு இறங்கி ஓடிவருவார்கள். அப்படியே லபக்! லபக்குன்னு உள்ளே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பவும் ஓடிப் போய்விடுவது போல, சுட்டு ரெடியாக வைத்திருப்பார்கள் போல! ஆறிப்போயிருந்தது.

ஊரில் உள்ள தோசையின் அளவு வேறு. அங்கிருந்து இங்கு வரைக்கும் ஓடி வந்ததில், மிகவும் இளைத்திருந்தது. தட்டில் இருக்கும் பொழுதே புளிப்பு வாசனை மூக்கைத் தொட்டது. எப்பொழுது அரைத்த மாவோ? அதற்கு தொட்டுக்க கொடுத்த சாம்பாரை வாழ்நாளில் அவ்வளவு மோசமாய் பார்த்ததேயில்லை. சாப்பிட்டதுமில்லை., எப்படி சாப்பிட போகிறார்? என நினைக்கும் பொழுதே எனக்கே துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு தோசையை தட்டு, தடுமாறி சாப்பிட்டு முடித்தார். இன்னொன்றை அப்படியே வைத்துவிட்டார். வைத்து விட்டு போன பிறகு, இந்த டேபிளின் பக்கம் அந்த சர்வர் வந்து எட்டியே பார்க்கவில்லை. அந்த குட்டித்தோசை இரண்டுக்கு விலை ரூ.80. கோபத்தை அடக்க முடியாமல், அந்த கேசியரிடமே ”புளிச்சுப்போன மாவுங்க! எப்படிங்க சாப்பிடுறது? என நண்பர் கேட்டேவிட்டார். உடனடியாக ஒரு ரெடிமேட் பதிலை சொன்னார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிட்டேன். நல்லாத்தான் இருந்தது”

ஆறுதல்படுத்த ஒரு காபி வாங்கினார். சுடுதண்ணீரில் காபி பொடியை கலந்தது போல இருந்தது. அந்த நடுநிசியிலும், ”சுகராகம் சோகம் தானே” என இளையராஜா சளைக்காமல் இசைத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் பேருந்தில் ஏறினோம். மீண்டும் தூங்கிக்கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம். இரவில் நடந்தது எல்லாம், ஒரு நரகத்தில் மாட்டிக்கொண்டது போலவும், அங்கு எங்களை விதவிதமாக கொடுமைப்படுத்தியது எல்லாம் ஒரு கொடுங்கனவாக நினைவில் வந்து போனது.

இரவு நேரத்திலோ, பகல் நேரத்திலோ கொஞ்சம் தூரமாய் பேருந்தில் பயணம் செய்த எல்லோருமே இதை எதிர்கொண்டிருப்பார்கள். அனுபவம் இதைப் போலவோ அல்லது இதைவிட மோசமாகவும் எதிர்கொண்டிருக்கலாம். இதைப் பற்றி தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். ஊடகங்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்த அவலத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசு இதை கண்டுகொள்ளவேயில்லை.

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இருவருக்கும் ஓசியில சாப்பாடு. சிகரெட். அதனால் இங்கு நிப்பாட்டுகிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பேசினால், ”வாயிலேயே வைக்க முடியவில்லை. இன்னும் நான்கு, ஐந்து மணி நேரம் போகனுமேன்னு எதையாவது சாப்பிட வேண்டியிருக்கு. எங்க டிப்போவில் அதிகாரிங்க எங்களுக்கு இங்கு வந்து நிப்பாட்டி செல்லனும்னு உத்தரவு போடுறாங்க! பயணிகள் மோசமாக திட்டறாங்கன்னு வேறு உணவகத்திற்கு போனால், அடுத்த நாளே மெமோ குடுக்கறாங்க!” என்கிறார்கள்.

இது சம்பந்தமாக விசாரித்தால், முன்பு அரசு பேருந்து டிப்போவில் உள்ள போக்குவரத்து மேலதிகாரிகளைப் பார்த்து தள்ள வேண்டியதை கணிசமாக தள்ளி, அனுமதி வாங்கி உணவகத்தை நடத்தினார்கள். இதிலும் காசு பார்க்கலாம் என தெரிந்ததும், அரசு சமீப காலங்களில் வெளிப்படையாகவே டெண்டர் வெளியிடுகிறது. உணவகத்தில் நிறுத்தி செல்லும் ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ. 75ஐ அரசு அந்த உணவகத்திடம் வசூல் செய்கிறது. டாய்லெட்டை கூட தனியாக டெண்டர் விடுகிறதாம். அரசுக்கு நல்ல வருமானம். உணவகத்திற்கு நல்ல வருமானம். அல்லல்படுவதோ பொதுமக்கள்.

டெண்டரில் உள்ள விதிமுறைகளைப் படித்து பார்த்தால், புல்லரிக்கிறது. ”மக்களுக்கு சுத்தமான இலவச குடிநீர் வழங்கவேண்டும். சுகாதாரமான முறையில் டாய்லெட்டை பராமரிக்கவேண்டும். எம்.ஆர்.பி விலைக்கு விற்கவேண்டும்” என எல்லா
அருமையான
விதிமுறைகளும் தாள்களிலேயே தூங்கிவிடுகின்றன. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

உணவக அதிகாரிகளைப் பார்த்து ஊடகங்கள் சென்று கேள்விக்கேட்டால் “நாங்கள் புகார் வரும் பொழுது சோதிக்கிறோம். உணவில் தரமில்லை என அபராதம் விதிக்கிறோம். அதை கட்டிவிட்டு அவர்கள் எப்பொழுதும் போல தொடர்கிறார்கள்” என அலுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு நெடுஞ்சாலை உணவகத்தை நடத்த அரசின் 24 துறைகளிடமிருந்து அனுமதி பெறவேண்டியிருக்கிறதாம். ”யாரிடம் வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்! கொடுப்பவர்களுக்கு மாதம் மாதம் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறோம்” என அந்த உணவக நிர்வாகத்தினர் மக்களிடம் எகாத்தாளமாக பேசுவதின் பொருளை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. அதே குறைகள் தொடர…. பொதுமக்கள், ஊடகங்கள் என பலரும் தொடர்ந்து அபாயச் சங்கு ஊதிக்கொண்டே இருந்ததால்…. இப்பொழுது விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டதாகவும், மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலை உணவகங்களின் நிலைமை தமிழ்நாடு தழுவிய தளவில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ பேருக்கு ஐந்து இடங்கள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என கணக்கு காட்டுவது போல இருக்கிறது!

கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பல தரப்பினரும் பல்வேறு காரணங்களுக்காக தினமும் தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பயணத்தை
இனிமையாக
்குவதில் உணவுக்கும், சுகாதாரத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பயணத்தை சுமையாக்குவதில் இவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து போராடுவதை தவிர நமக்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை!

கட்டுரை தொடர்பான ஆதாரங்கள்

அத்துமீறும் நெடுஞ்சாலை உணவகங்கள் - கட்டுப்படுத்துமா அரசு ? புதிய தலைமுறை– 21/09/2021

நெடுஞ்சாலை உணவகங்கள் - நியூஸ்7 – 24/02/2017

0 பின்னூட்டங்கள்: