ஒரு சூப்பர் ஹீரோ உதயமாகிறான்.
ஆற்றின் கரையோரம் உள்ள ஒரு கிராமம். சில நூறு தலைக்கட்டுகள் கொண்ட சின்ன ஊர் அது. ஒரு நாள் இரவு மின்னல் இருவரை தாக்குகிறது. பொதுவாக இப்படித் தாக்கப்பட்டவர்கள் இறந்து போவது வழக்கம். ஆனால், இவர்களுக்கு சூப்பர் பவர் வந்துவிடுகிறது. மெல்ல மெல்ல தங்களுக்கு கிடைத்த சக்தியை உணர்கிறார்கள்.
மின்னல் தாக்கும் நாயகன் ஒரு தையற்காரரின் மகன். ஒரு போலீசின் பெண்ணை காதலிக்கிறான். வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறான். அந்த பெண்ணுக்கு வேறு திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பழிவாங்கும் விதமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை தடுத்து வைக்கிறார்கள்.
மின்னல் தாக்கும் இன்னொருவர் ஒரு உணவகத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளி. சிறு வயதில் இருந்து ஒரு பெண்ணை உருக்கமாய் ஒருதலையாய் காதலிக்கிறார். அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார். சில ஆண்டுகள் கழித்து, தன்னுடைய குட்டி பெண்ணுடன் தன் கணவனை விட்டு வந்துவிடுகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். வேறு நபர்கள் அந்த பெண்ணை தொந்தரவு செய்கிறார்கள்.
பிறகு அந்த ஊரில் நடக்கும் உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் கலாட்டாக்களும் தான் முழு நீளக்கதை.
****
ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் தாக்கத்தில், மலையாளத்தில் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனக்கென்னவோ மலையாளத்தில் வெற்றி பெற்றது ஆச்சர்யமில்லை. தமிழிலும், தெலுங்கிலும் உள்ள ஹீரோக்கள் பெரும்பாலும் ஏற்கனவே ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பேரை அடித்து துவைத்து, பறக்கவிட்டு, ஏற்கனவே சூப்பர் ஹீரோக்களாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
உணர்வுபூர்வமாக கொஞ்சம் கதை, நகைச்சுவை கொஞ்சம், சாகசம் கொஞ்சம் என ஒரு கலைவையாக பார்க்கும்படி வந்திருக்கிறது.
நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள் தான் மனிதர்கள். முழுவதும் கெட்டவன், முழுவதும் நல்லவனாக காட்டக்கூடியது எல்லாம் பழைய பார்முலாக்கள். நாயகனிடம் உள்ள தவறுகள், நெகட்டிவ்வான கதாப்பாத்திரத்திடம் உள்ள நல்லவைகளையும் காட்டியிருப்பது சரியான விசயங்கள்.
மற்றபடி நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் வரும் ஷிபு நல்லவன் என்கிறார்கள். ஒருவர் இயல்பில் நல்லவனாக இருப்பதை விட, ஒரு அசாத்திய திறன் வந்த பிறகு நிதானமாகவும், நல்லவனாகவும் இருப்பது தான் முக்கியமான பண்பு. ஒரு நெருக்கடியில் தான் ஒருவனை உரசிப்பார்க்கமுடியும் என்பேன்.
மற்றபடி, சூப்பர் ஹீரோக்கள் கதைகள் என்பது சுவாரசியத்திற்காக தானே எடுக்கப்படுகிறது. மக்கள் தான் மகத்தான சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மையான வரலாறுகள். அந்த கதைகளை எல்லாம் எப்பொழுது படமாக்கினாலும் இன்னும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.
மற்றபடி டெவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் என அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment