நாயகி பீகாரில் உள்ள குடும்பத்தில் வாழ்கிறாள். ஒவ்வொரு முறையும் தன் காதலனைத் தேடி ஓடும் பொழுதும், பிடித்து இழுத்து வந்துவிடுகிறார்கள். இனியும் அவளை நிறுத்தி வைக்கமுடியாது என முடிவு செய்து… தில்லியிலிருந்து அந்த ஊருக்கு சென்ற நாயகனை அலேக்காக தூக்கி சென்று, நாயகிக்கு கட்டாய கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.
இருவரையும் பொறுப்பாக தில்லிக்கு அனுப்பிவைக்கிறார்கள். நாயகன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து, இன்னும் இரண்டு நாளில் நிச்சயத்தார்த்தம் வேறு நடக்க இருக்கிறது. இந்த பெண்ணால் நின்றுவிடுகிறது.
நாயகன் நாயகியை அவள் விரும்பியபடி காதலனுடன் அனுப்பிவைத்தானா? அல்லது இருவருக்குள்ளும் புரிதல் வந்து இணைந்து வாழ்ந்தார்களா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
பொதுவாக பல தெலுங்கு படங்களில் லாஜிக்கை மதிக்கமாட்டார்கள். அது போல இந்தப் படத்தையும் அந்த பட்டியலில் சேர்த்துவிடலாம். வழிப்போக்கன் ஒருவனை தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து வைப்பதெல்லாம் ஓவர். அதை கூட மன்னிக்கலாம். நாயகன், நாயகி இருவருக்கும் ஒரு புரிதலோ, அன்போ வருவதற்கு அடிப்படையான காட்சிகளே எதுவுமே இல்லாமல், மேலே மேலே உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அமைப்பது எல்லாம் வீணாகிவிட்டது. பார்வையாளர்களால் ஒன்றவே முடியவில்லை.
விளையாட்டாக ஒரு கதை சொல்வார்கள். ஒரு நாள் ஒரு குழு வந்து சாலையோரம் பொறுப்பாய் ஒரு சீரான இடைவெளியில் குழி தோண்டிக் கொண்டே சென்றார்களாம். அடுத்தநாள், யாரும் வரவில்லை. அதற்கு அடுத்த நாள் ஒரு குழு வந்து தோண்டிய குழிக்களை எல்லாம் பொறுப்பாக மூடிக்கொண்டே சென்றார்களாம். என்னவோ தப்பா இருக்கே என விசாரித்தால், முதல்நாள் குழிகளுக்குள் செடிகளுக்கான விதையை வைப்பதற்கான குழு வரவில்லையாம்.
அது போல தான் படம் இருக்கிறது. தனுஷ், அக்சய் குமார், சாரா அலிகான் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். நல்ல ஒளிப்பதிவு. ஏஆர் ரகுமானின் இசை. ஆனால் கதை, திரைக்கதை ஊத்திக்கிச்சு.. Tumbbad படத்தின் தயாரிப்பாளரும் Raanjhaanaa பட இயக்குநர் தான் இயக்கியுள்ளார். ஆச்சர்யம்.
இன்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளிவந்திருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள். நான் சொல்வது சரி தானா என்பதை சொல்லுங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment