> குருத்து: Chandigarh Kare Aashiqui (சண்டிகரின் ரொமான்ஸ்) 2021 இந்தி

January 21, 2022

Chandigarh Kare Aashiqui (சண்டிகரின் ரொமான்ஸ்) 2021 இந்தி


நாயகன் சண்டிகரில் தன் பாடியை பில்டப் செய்துகொண்டே, ஒரு பிட்னெஸ் ஜிம்மும் நடத்திவருகிறார். சண்டிகரில் மிஸ்டர் மெட்ராஸ் போல G.O.A.T என போட்டி நடக்கிறது. அதில் இரண்டு வருடமாக ஜெயிக்க மல்லுக்கட்டுகிறார். ஜிம் பெரிசா காத்து வாங்குது! அங்கேயும் புது வருடத்தில் சில நாட்கள் மட்டும் கூட்டம் பொங்கும் போலிருக்கிறது. 😄


வெளியூரில் இருந்து வரும் நாயகிக்கு ஜிம்மில் ஒரு பகுதியை ஜும்பா நடனத்திற்கு வாடகைக்கு விடுகிறார்கள். நடனத்திற்கு ஒரு பெண்கள் கூட்டம் வருகிறது. அதன் விளைவாய் ஜிம்மிலும் இளைஞர்கள் அதிகரிக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் பழகி, ரெம்ப நெருக்கமாய் இருக்கும் பொழுது, “நான் ஒண்ணு சொல்லனும்” என்கிறார். காதல் மயக்கத்தில் ”சொல்லாதே” என வாயிலேயே முத்தமிடுகிறார்.

பிறகு நிதானமான ஒரு நாளில் ”நாம கல்யாணம் செய்துக்கலாமா” என்கிறார் நாயகன். அப்பொழுது நான் ஒரு Trans Girl என்கிற உண்மையை சொல்கிறார். அதிர்ச்சி அடைகிறான். “அருவருப்பு” அடைகிறான். ”நீ என்னை ஏமாத்திட்ட!” என திட்டிவிட்டு போய்விடுகிறான். பிறகு அவனுக்கு ”அவமானமாய்” உணர்ந்து... “நீ ஊரைவிட்டு போய்விடு!” என்கிறான்.

பிறகு அவர்களுடைய உறவில் என்னென்ன நடந்தது? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

”இருபது வருடமா ஆண் பெயரில் வாழ்ந்துட்டேன். நான் எந்த காலத்திலும் உள்ளுக்குள்ளே ஆணா உணர்ந்தேயில்லை! என நாயகனிடம் கண் கலங்கி சொல்லும் பொழுதும், ”ஜிம்மை விட்டு நின்னுடும்மா! வேறு ஊருக்கு போயிரலாம்” என ஆறுதலாய் பேசும் அப்பாவிடம் ”இப்படித்தான் பள்ளியை விட்டேன். கல்லூரியை விட்டேன். இன்னும் எத்தனையைத் தான் விடுறது!” என சொல்லும் பொழுது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

கூவாக திருவிழா கதை என்ன? மகாபாரத கதையில் போரின் துவக்கத்தில் அரவானை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அவன் திருமணம் ஆகாத இளைஞன். அவனை ஒரு நாளாவது மனைவியோடு ”வாழ வைக்க” முடிவெடுக்கிறார்கள். அடுத்தநாள் பலியாக போகும் அரவானுக்கு யார் பெண் தருவார்கள்? ஆகையால், ”கிருஷ்ணனே பெண் அவதாரம்” எடுக்கிறார். திருமணம் செய்து வைத்து, ஒரு நாள் “வாழ” வைக்கிறார்கள். அடுத்த நாள், அரவானை பலிகொடுக்கிறார்கள். அந்த ”கிருஷ்ண பெண் அவதாரம்” என தங்களைப் பாவித்து தாலி அறுக்கிறார்கள் திருநங்கைகள். ஆக, மகாபாரதம் எழுதிய காலத்திலிருந்து ”திருநங்கை” இருக்கிறார்.

கப்பலில் வாஸ்கோடகாமாவை போல, 14ம் நூற்றாண்டில் உலகை சுற்றி வந்த சீனத்தின் ”செங் ஹே” ஒரு திருநங்கை தான். வரலாற்றின் பல பக்கங்களில் திருநங்கைகளும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே பல ஆயிரம் திருநங்கைகள் இருக்கிறார்கள். சமூகத்திலேயே பலரும் கேலி, கிண்டல் செய்வதின் விளைவு அவர்களுடைய சொந்த வீட்டிலேயே பெற்றோர், உறவினர்கள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனால் உருவாகும் டார்ச்சரில் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என வேலை கிடைப்பதிலும் சமூகத்தில் பிரச்சனை. ஆகையால், பிச்சையெடுக்கிறார்கள். தன் உடலை விற்று பிழைக்கிறார்கள். நாகரீக சமூகம் என நம்மை சொல்லிக்கொண்டு சக மனிதர்களை இப்படி நடத்தினால் எப்படி?

தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, கடந்த சில வருடங்களாக நல்ல செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. ஒலிம்பிக்கில் முதல் திருநங்கை 2021ல் பங்கேற்றார். மணிப்பூரில் 2020ல் முதல் மருத்துவராகி உள்ளார். 2019ல் முதல் அரசு செவிலியர். இப்படி “முதல் முதல்” என செய்திகள் வந்துகொண்டே இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

திருநங்கை குறித்து சமூகத்தில் ஏற்படும் படங்கள் கலைகளிலும் வெளிப்படுவது சரியானது. தமிழில் ஐஸ்வர்யா நடித்த “திட்டம் இரண்டு” ஒரு நல்ல துவக்க முயற்சி. இப்பொழுது இந்தியில் வந்துள்ள இந்தப் படம் இன்னும் மேலே போய், பிரச்சனைகளை தைரியமாய் எதிர்கொள்கிற நாயகியாக, நாயகன் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கிற, பெற்றோர் அங்கீகரிக்கிற படமாக வந்திருப்பது இன்னும் நல்ல முயற்சி.

வாணி கபூர் அற்புதமாக அந்த பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நம் நாயகர்கள் எல்லாம் நடிக்க தயங்கும் கதையில், தைரியமாய் ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடித்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பு. ”Kai po se” இயக்கிய இயக்குநர் அபிசேக் கபூர் தான் இயக்கியிருக்கிறார்.

நல்ல படம். பாருங்கள். சப் டைட்டிலுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

If its a Hollywood movie, they would have made a real transgender person act in that role. But at least this movie has portrayed a transgender person in a positive manner, instead of degrading them. Should watch.