> குருத்து: தேசாந்திரி – எஸ். இராமகிருஷ்ணன்

January 4, 2022

தேசாந்திரி – எஸ். இராமகிருஷ்ணன்


”ஊர்ச்சுற்றி புராணம்” என்ற புத்தம் என்னுடைய பதினேழு வயதில் கையில் கிடைத்தது. இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்கும் நடந்தே ஊர் சுற்றிய புகழ்பெற்ற இராகுல் சாகிங்கிருத்தியாயன் தான் அந்த புத்தகத்தை எழுதியிருந்தார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் உற்சாகமாய் ஊர் சுற்றியிருக்கிறேன். வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் குற்றாலத்திற்கு சொந்த பந்தங்களுடன் அந்த அருவிகளில் குளித்து அந்த ஈரப்பதத்தை ஆண்டு முழுவதும் மனதில் சுமந்து திரிந்திரிக்கிறேன்.


மும்பையில் பத்து நாட்கள் தன்னந்தனியனாய் ஒரு வரைபடத்தின் உதவியுடன் முக்கிய இடங்களை போய் பார்த்திருக்கிறேன். ஒரு பனிக்காலத்தில் நண்பர்களுடன் ஆக்ராவிற்கு போய் தாஜ்மகாலைப் பார்த்திருக்கிறேன். வைதேகி காத்திருந்தாள் படத்தில் போர்வையை சுற்றிக்கொண்டு வரும் நாயகனைப் போல பீகாரின் தெருக்களில் அந்த கடும் குளிரை எதிர்கொள்ள கம்பளியை சுற்றித்திரிந்திருக்கிறேன்.

இதெல்லாம் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு, திட்டமிடல்களுடன்
சென்று வந்தவை என்ற கணக்கில் சொல்லலாம். எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ஊர் சுற்றுதல் அப்படியில்லை. ஒரு எழுத்தாளராய் நிலங்களையும், மனிதர்களையும் அறிய ஊர் சுற்றியிருக்கிறார். தன் வீட்டை விட்டு கிளம்பிய அவர், புத்தகத்தின் இறுதியில் நேபாள் வழியாக இமயமலையில் ஏறி சூரிய உதயத்தை பார்ப்பதோடு முடிகிறது.

ஊர்ச்சுற்றி புராணத்திற்கு பிறகு தேசாந்திரி பிடித்த புத்தகமாகிவிட்டது. முன்பு அந்த வசதியில்லை. இப்பொழுது ஒவ்வொரு அத்தியாயம் படித்து முடித்த பிறகும், அந்த இடத்தைப் பற்றி யூடியூப்பில் போய் காட்சிகளாக பார்க்க முடிகிறது. பீகாரில் சாரநாத்தில் புத்தரின் உபதேசம் செய்த இடத்தை பார்க்கமுடிகிறது. அங்கு தியானத்தின் பொழுது உச்சரிக்கப்படும் புத்தம் சரணம் கச்சாமியை ஒவ்வொரு தேசத்திலும் எப்படி விதவிதமாய் பாடுகிறார்கள் என்பதை கேட்க முடிகிறது. சுவாரசியமாய் இருக்கிறது.

கொடைக்கானலில் வேண்டா வெறுப்பாய் படிக்கும் அந்த பையனை படித்த பொழுது, தாரே ஜமின் பர் படத்தில் வரும் சின்ன பையனை நினைவுப்படுத்தினான். இப்படி பல நினைவுகள் எழுந்தது.

ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும் பொழுதும், ஒரு கவிதையோ அல்லது கவிதையின் ஒரு பகுதியோ படிப்பதற்கு சுவாரசியமாய் இருக்கிறது.

“தள்ளிவிடப்பட்ட
டம்ளர்
அரைவட்டில்
உருள்கிறது
காற்று
தொடும் பொழுதெல்லாம்
சந்தோசமாய்.
- சமயவேல்

இந்தியா முன்பை போல ஊர் சுற்றுதல் இல்லை. சந்தேகத்தின் நிழல் என்பதில் விளக்கும் பொழுது பகீரென்று இருக்கிறது. காட்டில் வசிக்கும் அந்த மனிதன் ”இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நகரத்தில் வாழும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என சொன்னது ஆச்சர்யம் தந்தது. கடலுக்குள் படகில் செல்லும் பொழுது, ”கண்ணால் பார்த்து கடலை புரிந்துகொள்ள முடியாது” என சொன்னது சரி தான். புத்தகத்தில் பேசுவதற்கு பல இடங்கள் இருந்தாலும், நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். பிறிதொரு நாளில் மீண்டும் விரிவாய் பேசலாம்.

முன்பு ஆனந்தவிகடன் வெளியிட்ட ”தேசாந்திரி” புத்தகத்தில் ஓவியங்களும், வண்ண எழுத்துக்களும் ஈர்ப்பாய் இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிய தேசாந்திரி புத்தகம் எஸ். இராமகிருஷ்ணனின் ”தேசாந்திரி” வெளியீடாக வந்த புத்தகத்தில் ஓவியங்களோ, வண்ண எழுத்துக்களோ இல்லாதது ஏமாற்றத்தை தந்தது.

மற்றபடி மீண்டும் மீண்டும் வாசிக்க கூடிய புத்தகம். என் வீட்டு நூலகத்தில் தேசாந்திரிக்கு எப்பொழுதும் இடம் உண்டு.

பக்கங்கள் : 323
வெளியீடு : தேசாந்திரி

0 பின்னூட்டங்கள்: