நாயகன் மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ஒரு அரசு பொறியாளர். அவருக்கு தில்லியில் நாயகியை பெண் பார்த்து. திருமணம் செய்கிறார்கள். நாயகிக்கு தன் கணவன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம். நாயகனோ கொஞ்சம் டல்லான ஆள். இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. இதற்கிடையில் நாயகனின் தம்பி முறையில் ஒருவன் வருகிறான். இருவருக்குமான இடைவெளியில் அவன் உள்ளே புகுந்துவிடுகிறான்.
கணவனிடம் சொல்லிவிட்டு, அவனோடு போய்விடலாம் என்ற முடிவில் இருக்கும் பொழுது, அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடுகிறான். இருப்பினும் நாயகனிடம் நாயகி உண்மையை சொல்லிவிடுகிறாள். அவனால் தாங்கவே முடியவில்லை. இருவருக்குள்ளும் உள்ள இடைவெளி இன்னும் பெரிதாகிவிடுகிறது.
இந்த சமயத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்கிறது. அதில் நாயகன் கொலை செய்யப்படுகிறான். கொலைப்பழி நாயகி மீது விழுகிறது. விசாரணை நடக்கிறது. இறுதியில் அந்த கொலையை யார் செய்தார்கள் என்பதை சுவாரசியமாக சொல்லிமுடிக்கிறார்கள்.
****
திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கணவன் தன் குணத்திற்கு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப துணைவியாரை மாற்ற முயற்சி செய்வான். இதே போல துணைவியாரும் என ஒரு சிறுகதையில் எழுத்தாளர் ஆதவன் எழுதியிருப்பார். உண்மை தான். ஆனால் அப்படி மாறுவார்களா என்றால் இல்லை. ஆனால், இவனை/இவளைத் திருத்த முடியாது. இவன்/இவள் எப்படி இருக்கிறானோ/ளோ அப்படியேத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு இருவரும் வந்துவிடுவார்கள். இந்த மாற்றத்திற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் காலத்தில், பரஸ்பர அணுகுமுறையில் கோளாறாக இருக்கும் ஜோடிகள் தான் பிரிந்துவிடுவார்கள். இது தான் என் புரிதல்.
மத்திய பிரதேசம் போன்ற பகுதியில் இருப்பவர் தில்லியில் மாடர்ன் பொண்ணை திருமணம் செய்து வருவது சிக்கலானது தான். படத்தில் திருமணத்திற்கு முன்பே நாயகன் நாயகியின் பெயரை பச்சை குத்திக்கொள்வான். (இதை பின்னால் முக்கியமான ஒன்றாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்றாலும்) ஒரு அரசு பொறியாளர் இப்படி பொறித்துகொள்வாரா என்பது நம்பும்படி இல்லை. அதே போல் தம்பியுடன் ஏற்படும் உறவை மறைப்பார்கள். மறைக்கிறாள். ஆனால், அவன் ஓடிப்போன பின்பு, தன் கணவனிடம் சொல்வது நம்பும்படி இல்லை. “இங்கே இருக்காதே! என கணவன் சொன்ன பிறகு, அவன் பெயரில் உள்ள அன்பில் அங்கேயே இருப்பேன் என சொல்வதும் நம்பும்படி இல்லை. இதை எல்லாவற்றையும் மீறி, 6.9 IMDB இருந்தது ஆச்சர்யம்.
தாப்ஸி தான் நாயகியாக வருகிறார். மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் நல்ல தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment