> குருத்து: Taare Zameen Par (2007) மண்ணில் ஒளிரும் நட்சத்திரங்கள்

January 4, 2022

Taare Zameen Par (2007) மண்ணில் ஒளிரும் நட்சத்திரங்கள்




தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்ற படம்

"சாலமன் தீவுகளில், பழங்குடியினர் காடுகளை துடைத்து வயலுக்கு வழிவகை செய்யும் போது, ​​​​அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை, அவர்கள் வெறுமனே ஒன்றுகூடி அதை சபிக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, மரங்கள் மெல்ல மெல்ல வாட ஆரம்பிக்கின்றன. அது தானே இறக்கிறது.”
- படத்திலிருந்து....

****

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் இரண்டு பையன்கள் கொண்ட நடுத்தர வர்க்க குடும்பம் அது. இதில் மூத்தவன் பள்ளியில் நன்றாக படிக்கும் பையன். மூன்றாம் வகுப்பு படிக்கும் இளையவன் படிப்பில் பின் தங்கி இருக்கிறான். அவனால் படிக்க முடியவில்லை. எழுத்துகள் நடனமாடுகின்றன. தேர்வுகள் பயமுறுத்துகின்றன. ஆசிரியர்கள் திட்டி தீர்க்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மற்றபடி வழக்கமான சேட்டைகள் கொண்ட இயல்பான பையன் அவன்.

அவனை உண்டு, உறைவிட பள்ளியில் (Boarding School) சேர்க்கிறார்கள். வீட்டில் அம்மாவும், அண்ணாவும் தான் பெரிய ஆறுதல். இப்பொழுது தனித்துவிடப்படுகிறான். அந்த பள்ளியிலும் வழக்கம் போல ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். தண்டிக்கிறார்கள். யாரிடமும் பேசாமல் மெளனமாகிவிடுகிறான்.

இந்த நெருக்கடியான சமயத்தில்;… கலை ஆசிரியராக புதியவர் வருகிறார். வழக்கமான ஆசிரியராக இல்லாமல், குழந்தைகளின் இயல்பை புரிந்துகொண்டு கையாள்கிறார். அவனுக்கு இருக்கும் சிறப்பு பிரச்சனையையும், சிறப்பான ஆற்றல் எது என்பதையும் கண்டறிகிறார். பெற்றோர்களை சந்தித்து விவாதிக்கிறார். தலைமை ஆசிரியருடன் கலந்து பேசுகிறார்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அந்த பையன் கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் இறுக்கமாகி கொண்டே, யாரிடமும் பேசாமல் இருப்பதை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. ”என்னைய விட்டுறுங்கடா!” என அவன் கண்ணின் வழியே புரிந்துகொள்ளமுடியும்.

அந்த பையனின் பிரச்சனை என்பது புதிது அல்ல! படத்திலேயே சொல்வது போல அந்த பையனுக்கு உள்ள கற்றல் குறைபாடு பிரச்சனையான டிஸ்லெக்சியா (dyslexia) புகழ்பெற்றவர்களான அறிவியலாளர் ஐன்ஸ்டீன், ஓவியர் லியோனார்டோ டாவின்சி, வால்ட் டிஸ்னி, நடிகர் டாம் க்ரூஸ் நம்மூர் அபிசேக் பச்சன் என பலரும் இருக்கிறார்கள். 2016 டேட்டா படியே இந்தியாவில் 3.5 கோடி குழந்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த குறைபாடுள்ள மாணவனின் பிரச்சனையை அந்த பள்ளியாலும், நேசிக்கும் படித்த பெற்றோர்களாலும் கூட கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம். ஒரு பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பொழுது, ஆசிரியருக்கு இருக்கும் அழுத்தத்தால் ஒவ்வொரு மாணவனின் பிரச்சனையை கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்பார் தலைமை ஆசிரியர். இது நம்முடைய கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சனை. ஒரு வகுப்பில் 20பேருக்கு மேல் இருக்ககூடாது என்பது தான் சரியானது என்கிறார்கள். ஓடுகிற ஓட்டத்தில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை மிதித்துவிட்டு ஓடுவது தான் வழக்கமாகிவிடுகிறது.

ஒரு இடத்தில் ஒரு பாடலை சொல்லி அர்த்தம் கேட்கும் பொழுது, அதைப் புரிந்துகொண்டு அவன் சொந்த வார்த்தைகளில் விளக்குவான். ஆசிரியர் அவனைத் திட்டுவார். புத்தகத்தில் உள்ளதை ஒரு பையன் ஒப்பிப்பான். அவனை பாராட்டுவார். மனப்பாடம் செய்ய முடியாத ஒரு மாணவன் இந்த சிஸ்டத்தில் என்ன ஆவான்?

இப்பொழுது நடைமுறையில் உள்ள ”மெக்காலே” கல்விமுறை சரியில்லை! மாற்றவேண்டும் என கடந்த இருபது வருடங்களாக பல்கலை துணைவேந்தர்கள் முதல், பல பேராசிரியர்கள், கல்வியாளர்கள் திரும்ப ஊடகங்கள் வழியாக, கருத்தரங்கள் வழியாக திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பொழுது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ்காரனுக்கு தேவைப்பட்டது. அறிமுகப்படுத்தினான். இப்பொழுதும் இந்த கல்விமுறையை யாருடைய நலன்களுக்காக கட்டிக்கொண்டு அழுகிறார்கள்?

மற்றபடி, அந்த பையன் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தான் எனலாம். அமீர்கான் எப்பொழுதும் போல சிறப்பு. அமீர்கான் முதன்முதலாய் இயக்கியப்படம் என்பது இன்னும் சிறப்பு. படம் பல விருதுகளை பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை கவனப்படுத்தியிருக்கிறது என்பது இந்தப் படத்தின் சிறப்பு.

படம் வெளிவந்த சமயத்திலேயே பார்த்திருந்தாலும், இப்பொழுது பார்த்தாலும் மனதிற்கு நெருக்கமாக தான் இருக்கிறது. அருமையான படம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: