> குருத்து: The Battle at Lake of changjin (2021) ஒரு பார்வை

January 15, 2022

The Battle at Lake of changjin (2021) ஒரு பார்வை






னவரி மாத குளிரில் நடுநிசியில் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி இதோ ரயில் போய்க்கொண்டிருக்கிறது. காற்றோட்டத்திற்காக ஒருவர் சன்னலை திறந்துவைத்து தூங்கி கொண்டிருக்கிறார்.  ரயிலின் வேகத்தில் விறு விறு என அடிக்கும் மார்கழி மாத குளிர் காற்று அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் குளிர செய்கிறது. பஞ்சு வைத்திருந்தாலும், காதை துளைத்து உடலுக்குள் செல்ல முயற்சி செய்கிறது.  இதெல்லாம் ப்ளஸ் 21 டிகிரி குளிர் செய்கிற வேலை.

 

திரைப்படத்தில் அந்த மலைப்பிரதேசத்திற்குள் சில நூறு வீரர்கள் தங்களுக்கு வரும் உத்தரவிற்காக கண்கொட்டாமல் காத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதத்து குளிர். மைனஸ் 40 டிகிரி. ஒரு வீரர் தனக்குள்ளேயே போராட தயங்கினால், அப்படியே குளிரில் உறைந்து போய், இறந்துவிடுவார். நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது.

 

1950 காலம். சீனத்தின் படையின் ஒரு உயர் அதிகாரி தன் கிராமத்திற்கு வந்து சேர்கிறார். தன் சொந்த தம்பியாலேயே அவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஊரை விட்டு சென்று அவ்வளவு காலமாகிவிட்டது.   (இப்படிப்பட்ட தன்னலம் கருதாத வீரர்களின், மக்களின் போராட்டத்தில் தான் 1949ல்  மக்கள் சீனம்  விடுதலையடைந்தது)  அன்றிரவே “உடனே கிளம்பி வாருங்கள்” என அவருக்கு உத்தரவு வருகிறது.. ஆர்வக் கோளாறில் இளைய தம்பியும் படைக்கு வர ஆசைப்படுகிறான். அண்ணன் மறுக்கிறார்.  ஆனால் அவரை விடாமல் பின் தொடர்ந்து அவனும் படையில் வந்து சேர்கிறான்.

இரண்டாம் உலகப்போரில் ஏகாதிபத்திய ஜப்பான் வீழ்ச்சியடைய, அதன் ஆக்கிரமிப்பில் இருந்த கொரியா விடுபடுகிறது.  ஜெர்மனியின் இட்லரை போரில் வீழ்த்திய ரசியா இந்த போரில் இரண்டு கோடி மக்களை இழந்தது.  ரசியா இப்பொழுது கொரியாவிற்கு உதவவே, முன்பு ”கம்யூனிச பூதத்தின்” பிடியில்  ரசியா, இப்பொழுது சீனா. அடுத்து கொரியாவா? என பதட்டத்தில் அமெரிக்கா கொரியாவை ஆக்கிரமிக்க வருகிறது.

சீன எல்லைகளை மீறியும் உள்ளே வந்து தாக்குதலை நடத்துகிறது.  சீன அரசின் உயர்மட்டக் குழு கூடுகிறது. தேச பாதுகாப்பிற்காக அமெரிக்காவை எதிர்த்து போரிடவேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

மாவோவின் வீட்டில் இளைஞனாக இருக்கும் மாவோவின் இளைய மகனும் போர் முனைக்கு செல்ல ஆசைப்படுகிறார்.  ”ஏற்கனவே ஒரு பையன் இறந்துவிட்டார். இன்னொருவர் உடல் சுகமில்லாமல் இருக்கிறார். எஞ்சியிருப்பது நீ மட்டும் தான். ஆகையால் போகவேண்டாம்” என்கிறார் மாவோவின் நண்பர். தற்செயலாக  அங்கு வரும் மாவோ, “மக்களுக்கும் இதே கருத்தைத் தான் சொல்கிறோம். மீறி விருப்பப்படுவர்களை அனுமதிக்கலாம். அவன் விருப்பப்படி போர் முனைக்கு செல்லட்டும்” என்கிறார். அதற்கு பிறகான நாட்களில், போரில் சில ஆயிரம் இளைஞர்களில் ஒருவராக மாவோவின் மகனும் கொல்லப்படுகிறார். (சொத்துக்களை காக்க அரசியலில் வாரிசுகளை ஈடுபடுத்தும் நமது அரசியல் வாதிகளை ஒப்பிட்டு பாருங்கள்)

 

போர்முனைக்கு செல்ல அந்த ரயில் தயாராக இருக்கிறது. நூற்றுக்கணக்கான இளைஞர்களும், அதிகாரிகளும் ரயிலில் கிளம்புகிறார்கள்.   அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள்ளேயே அமெரிக்காவின் வான்வழிப்படைகள் ரயிலை திடீரென தாக்குகிறார்கள்.  சிலர் இறக்க, கையில் கிடைத்ததை வைத்து பலர் அந்த கடுங்குளிரில் நடந்தே முன்னேறுகிறார்கள். அமெரிக்காவின் நவீன துப்பாக்கிகளை, பீரங்கி டாங்குகளை சீனாவின் வீரர்கள் எதிர்கொள்கிறார்கள். கடுமையான சண்டை. பல உயிரிழப்புகள். இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

கொரிய போர் 1950ல் துவங்கி, 1953 வரை நடைபெற்றது. அதற்கு பிறகு போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் சண்டை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அந்த சண்டை நீடித்துக்கொண்டே இருப்பதை தான் தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.  இந்த போரில் மட்டும் 25 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக பிபிசி தனது கட்டுரையில் தெரிவிக்கிறது.  முதலாளித்துவ நாடுகள் தங்களுடைய சந்தைக்கு நாடு பிடிக்கும் சண்டைகள் தாம் முதலாம் உலகப்போரும், இரண்டாம் உலகப்போரும்! இதில் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கின. நாடுகளிடையே, மனிதர்களிடையே சமத்துவம் விரும்பும் கம்யூனிசம் போரை வெறுக்கிறது. ஆனால், சந்தைக்காகவும், கொள்ளைக்காகவும் முதலாளித்துவம் சண்டைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பது போல முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் போர் அச்சமும், கடுமையாக இழப்புகளும் இருந்துகொண்டே தான் இருக்கும்.

சீனாவின் கம்யூனிச கட்சி துவங்கி 100 ஆண்டு நிறைவில் இருக்கிறது. உழைக்கும் மக்கள் உலகம் முழுவதும் இந்த நாளை நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், சீனா பல இலட்சக்கணக்கான தோழர்களின், மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு, இழப்புகளுக்கு பிறகு 1949ல் மக்கள் சீனாவாக விடுதலையடைந்தது..  மாவோவின் இறப்புக்கு பிறகு சீனாவை முதலாளித்துவ பாதைக்கு திருப்பிவிட்டுவிட்டார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல உற்பத்தியை பெருக்கி, இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி சந்தையை விரிவாக்கிவிட்டார்கள்.  அத்தோடு கூடவே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு, தன்னையும் ”வல்லரசாக” தயார் செய்து கொண்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, கம்யூனிஸ் கட்சியின் துவக்கத்தை கொண்டாடும் விதத்தில் பல கோடி பொருட்செலவில் படத்தை எடுத்து இருப்பது இப்போதைய சூழ்நிலையில் தன்னுடைய நலன்களுக்காக தான் என்பது வெளிப்படை.

 

படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு, சீனாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ரசியா, தென்கொரியா, வடகொரியா, மலேசியா, ஜப்பான் என பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் நிலைக்கு தக்கவாறு ஆதரித்தோ, தாக்கியோ கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.  மலேசியாவில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தடை செய்திருக்கிறார்கள்.

 

சீனாவோடு இந்தியா எல்லை பிரச்சனையில் முரண்படும் வேளையில் அநேகமாக இந்தியாவிலும் தடை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் எல்லைகளை எல்லாம் அழித்து நிதி மூலதனம் உலகை சூறையாடி வருகிறது.  இந்தியாவிலும் கார்ப்பரேட் கும்பல்களும், ஏகாதிப்பத்தியங்களும் தங்கு தடையின்றி, ஆட்சியதிகாரத்தில் உள்ள காவி கும்பல்களின் முழு ஆதரவுடன் சட்டப்பூர்வமாகவே கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பொழுது எல்லைத் தகராறு, குறிப்பிட்ட பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டார்கள் என சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக செய்திகளைச் சொல்லும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது. இதையே காரணமாக வைத்து, தேசப் பக்தியை தூண்டி, ஒவ்வொரு ஆண்டிலும் இராணுவ ஆயுத தளவாடங்கள் வாங்க மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்குவதும், அதை தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் மறைப்பதும், அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு அடியாள் வேலை செய்வதும், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஒதுக்கப்படும் மான்யங்களை கணிசமாக வெட்டிக்கொண்டே செல்வதும் அநியாயத்திலும் அநியாயம்.

0 பின்னூட்டங்கள்: