> குருத்து: February 2022

February 28, 2022

Jab we met (2007) இந்தி - நாம் சந்தித்த பொழுது!


நாயகன் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு. அப்பா இறக்கிறார். தொழிலை ஏற்று நடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். தான் காதலித்தப் பெண் வேறு ஒருவரை மணக்கிறார். எல்லாம் ஒன்றாய் சேர்ந்து மொத்தமாய் தாக்கியதில் மனம் வெறுத்து, கால் போன போக்கில் போய், ரயிலில் ஏறுகிறார். தற்கொலை செய்துகொள்ளலாம் என கண நேரத்தில் முடிவெடுக்கும் பொழுது, நாயகி அவன் வாழ்வில் வருகிறார்.


நாயகன் எவ்வளவோ சீரியசோ, அவள் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத ஆள். கலகலவென பேசுகிறார். இவனை காப்பாற்றப் போய் ரயிலை தவறவிடுகிறார். ஏகப்பட்ட கலாட்டக்களுக்கு பிறகு, அவளின் குணம் தந்த தாக்கத்தால், அவன் தன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் கொள்கிறான்.

இருவரும் நாயகியின் வீடு வந்து சேர்கிறார்கள். நாயகி ஒருவனை காதலிக்கிறாள். வீட்டில் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என அவளைத் தேடி கிளம்புகிறாள். போகும் பொழுது வீட்டிற்கு வந்திருந்த நாயகனையும் அழைத்து செல்கிறாள். வீட்டில் இருவரும் ஓடிவிட்டார்கள் என தேடுகிறார்கள்.

தேடிச் சென்ற காதலனை திருமணம் முடித்தாளா? பிறகு என்ன நடந்தது என்பதை
உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

எதிரெதிர் குணங்கள் கொண்ட இருவர் ஒருவருக்கொருவர் எப்படி பாதிக்கிறார்கள் என்பது தான் கதை. சமீபத்தில் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். “எல்லாவற்றையும் கடந்து, நாற்பதுகளை கடக்கும் பொழுது, மீண்டும் 20 லிருந்து ஆரம்பித்தால், ஏகமாய் சாதிக்கலாம் என எண்ணம் வரும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், பெரிதாக எதையும் மாற்றிவிடமுடியாது.” அது போல வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கொஞ்சம் கூலாகவே எதிர்கொள்ளலாம். ரெம்பவும் பதட்டப்பட வேண்டியதில்லை என்பதை ஜாலியாக சொல்லிய பீல் குட் மூவி தான் படம். பிரச்சனைகளால் மண்டை காயும் பொழுது, இந்தப் படத்தைப் பார்த்தால் மீண்டுவிடலாம்.

கரீனாவும், ஷாகித்தும் சிறப்பாக நடித்து படம் வந்து வெற்றி பெற்றது. படத்தில் பாடிய ஸ்ரேயாவிற்கு தேசிய விருது கிடைத்தது. தென்னிந்திய மொழிகளில் மீண்டும் எடுக்க முயன்றதில், தமிழில் பரத், தமன்னா நடித்து கண்ணன் இயக்கியிருந்தார். இந்திப் படத்தை அப்படியே எந்தவித (உடைகள் கூட அதே தான் 🙂 ) மாற்றம் இல்லாமல் எடுத்தார்கள். வெற்றி பெற்றது.

நெட் பிளிக்சில் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

February 25, 2022

Hawkeye (2021) ஒரு தொடரில் ஆறு அத்தியாயங்கள்.


அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முடிந்த ஒரு வருடத்தில் கதை துவங்குகிறது. ஏலியன்களுடன் அவெஞ்சர்ஸ் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த பொழுது, அவெஞ்சர்களில் வில்வித்தை வீரரான‌ ஹாக்ஐப் பார்த்து, சிறுமியான கேட் பிசப் தன் ரோல் மாடலாக நினைத்து வளர்கிறாள். அதற்காக வில்வித்தைகளை உற்சாகத்துடன் கற்கிறாள்.


கேட் இப்பொழுது வளர்ந்துவிடுகிறாள். வில்வித்தையில் நல்ல தேர்ச்சியுடன் இருக்கிறாள். கேட்டின் அப்பா இறந்து, சில வருடங்கள் கழித்து, கேட்டின் அம்மா இப்பொழுது மீண்டும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். இந்த சமயத்தில் ஒரு ஹோட்டலில் ரகசிய ஏலம் நடக்கிறது. அதில் "ரோனின்" ஆடை ஏலத்திற்கு வருகிறது. அங்கு நடக்கும் களேபேரத்தில் ரேனின் ஆடைகள் கேட்டிற்கு கிடைக்கிறது.

அவெஞ்சர்ஸ் முதல்பாகத்திற்கு பிறகு தானோஸ் செய்த கலவரத்தால், பிரபஞ்சத்தில் பாதிப்பேர் காணாமல் போய்விடுகிறார்கள் அல்லவா! அதில் ஹாக்ஐயின் மூன்று பிள்ளைகளுமே காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஹாக்ஐ ஏக‌ வெறியாகி ஏகப்பட்ட கெட்டவர்களை தேடித்தேடி கொன்று குவிக்கிறார்.

இதனால் ரோனின் சிக்கினால் போட்டுத்தள்ள ஏகப்பட்ட பேர்கள் கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முன்கதை எல்லாம் அறியாமல் கேட் விளையாட்டுத்தனமாய் ரோனின் ஆடைகளை அணிய, அவளை கொல்ல துரத்துகிறார்கள். இதில் ஹாக்ஐ தான் ரோனின் என்பதை அவளிடம் சொல்லாமல், அந்த பிரச்சனைகளிலிருந்து வெளிவர தலையிடுகிறார்.

’ஐந்து வருடங்கள்’ காணாமல் போய் உயிரோடு வரும் நடாஷாவின் தங்கை ஹாக்ஐ தான் நடாஷாவின் இறப்புக்கு காரணம் என தவறாக‌ புரிந்துகொண்டு ஹாக்ஐ கொல்ல வருகிறாள். என்ன ஆனது என்பதை சில சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

அவெஞ்சர்களில் ஒருவரான ஹாக்ஐ கொஞ்சம் ஆரவாரம் இல்லாமல், அலட்டிக்காமல் வருகிற ஆள். ஹாக்ஐ ரோல் மாடலாக நினைக்கும் கேட்டிற்கு அதில் வருத்தம். அவர் இன்னும் பிரபலப்படுத்திக்கொள்ளவேண்டும் என வாதிக்கிறாள். அதெல்லாம் தேவையேயில்லை என உறுதியாய் மறுக்கிறார்.

ஹாக்ஐ போலவே தானும் உருவாகவேண்டும் என்பது அவளது இலக்கு. அவெஞ்சராய் வாழ்வதில் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. ஏகப்பட்ட இழப்புகள் இருக்கின்றன. அது ஒன்றும் எளிதில்லை என சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

ரோனினை கொல்ல வரும் எதிரிகளை இருவரும் இணைந்து எதிர்கொள்வது தான் ஆறு எபிசோட்களும்! ஆறு அத்தியாயங்களையும் போராடிக்காமல் எடுத்திருக்கிறார்கள். நடித்திருப்பவர்களும் சிறப்பு.

சூப்பர் ஹீரோ கதை பிடிக்கும் என்பவர்களும், சண்டை பிரியர்களும் பார்க்கலாம். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

February 22, 2022

சென்னை வண்டலூர் : அண்ணா உயிரியல் பூங்கா – ஒரு பார்வை








ஊரிலிருந்து வேலை சம்பந்தமாக அக்கா பையன் வந்திருந்தான். முதலில் மகாபலிபுரம் போகலாம் என சொன்னான். 70 கிமீ என்பதால், 1.15 மணி நேரத்தில் போய்விடலாம் அல்லவா? என்றான். மாபெரும் சிங்கார சென்னையை கடந்து தான் செல்லவேண்டும். ஆகையால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்றதும், பயந்துவிட்டான். ”அப்ப பைக்கிலேயே வண்டலூர் ஜூ போகலாம்” என சொல்லிவிட்டான்.


வெளியே பிரிஞ்சி வாங்கி, காலை 11 மணிக்கு உள்ளே போய்விட்டோம். பார்க்கிங் கட்டணத்தை மணிக்கு இவ்வளவு என வாங்குகிறார்கள். பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ. 90. பூங்கா 1490 ஏக்கர் பரப்பளவில் பரந்து இருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நெருக்கமான கான்கிரீட்டு காடுகளுக்கு மத்தியில் ஒரு ’காடு’ என்பது கொஞ்சம் ஆச்சர்யத்துக்குரியது தான்! இந்தியாவில் முதலில் துவங்கப்பட்டதும், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு பிறகு பரப்பளவில் பெரியது இது தான் என்கிறார்கள்.

வார நாட்களில் 5000 பேர் வரையும், விடுமுறை நாட்களில் 10000 பேர் வரையும் மக்கள் பார்வையிடுகிறார்கள். பரந்து இருக்கும் பூங்காவை நடந்து போய் பலரும் பார்க்கிறார்கள். நடந்து போனால், முழுவதையும் பார்க்க முடியாது. சோர்வாகி விடும். உள்ளேயே வாடகைக்கு மிதிவண்டி தருகிறார்கள். மணிக்கு ரூ.30. ஒரு வண்டிக்கு முன்பணமாக ரூ. 200 தரவேண்டும். அதே பேட்டரியால் இயங்கும் மிதிவண்டி என்றால், மணிக்கு ரூ. 90. அதற்கு முன்பணம் ரூ. 500 செலுத்தவேண்டும். இளைஞர்கள் பலரும் மிதிவண்டிகளில் சுற்றிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

நடந்துபோக முடியாமல், மிதிவண்டி இயக்க முடியாதவர்கள், 13 பேர் வரை உட்கார்ந்து செல்லும் பேட்டரி கார்களை தேர்ந்தெடுக்கலாம். ஒரு ஆளுக்கு ரு 100 வாங்கி கொண்டு, 45 நிமிடங்களில் சுற்றிவருகிறார்கள். அவ்வளவு பெரிய பூங்காவை 45 நிமிடங்களுக்குள் எப்படி சுற்றி வந்து விலங்குகளைப் பார்ப்பது? என யோசனையாக இருந்தது. சில முக்கியமான இடங்களில் இறக்கிவிட்டு போய் 10 நிமிடத்தில் வாருங்கள்! 5 நிமிடத்தில் வாருங்கள் என சமாளித்துவிடுகிறார்கள்.

பறவைகள் பெரிய கூண்டுகளுக்குள் இருந்தன. விதவிதமான குரங்குகள் மரங்களில் அமர்ந்திருந்தன. நானெல்லாம் எவ்வளவு பெரிய ஆள்? என்னைப் போய் சிறை வைச்சிட்டிங்களேடா? என வெள்ளை நிறத்தில் வங்கப்புலி மட்டும் பார்வையாளர்களை பார்த்து முறைத்துப் பார்த்தப்படி இருந்தது. சிங்கம் ஏதும் கண்ணில்படவில்லை. முதலை ஒன்று எதையோ ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு, ஆவென வாயைப் பிளந்தபடியே நிறைய நேரம் இருந்தது,

ஓநாய்கள், கழுதைப்புலி, ஒரு சிறுத்தை, இரண்டு யானைகள், ஒரு ஒட்டகசிவிங்கி, இரண்டு காண்டாமிருகங்கள், நீர்யானை ஒன்று என பார்க்க முடிந்தது. விலங்கின் பெயர், உலகில் எங்கெங்கு வாழ்கின்றன? அதன் ஆயுள் காலம் எவ்வளவு? இனப்பெருக்க காலம் என்ன? என்கிற சில விவரங்களை ரத்தின சுருக்கமாக ஒவ்வொரு இடத்திலும் போர்டு வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் காண முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய விலங்குகள் இருந்தன. நானே பார்த்திருக்கிறேன்.. கொரானா வெளியில் ஏற்படுத்திய மோசமான விளைவுகள் அங்கும் ஏற்படுத்தியிருந்ததை பார்க்க முடிகிறது. சில விலங்குகள் இறக்க, ஊழியர்களை சோதிக்கும் பொழுது, பலருக்கும் கொரானா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுவாக நகர்ப்புறங்களில் பூங்கா போன்ற பொது இடங்களை மூடியதைப் போலவே இந்த பூங்காவையும், சில மாதங்கள் மூடி வைத்திருந்தார்கள். இணையத்தின் வழியாக சில விலங்குகளின் செயல்பாடுகளை பார்க்கலாம் என விளம்பரத்தினார்கள். அது எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என தெரியவில்லை.

ஒரு சிங்கத்தையும், ஒரு யானையையும் நடிகர் சிவகார்த்திகேயன் சில மாதங்களுக்கு தத்து எடுத்திருந்த செய்தி படித்தது நினைவுக்கு வந்தது. .அவர்களுடைய வலைத்தளத்தில் எவ்வளவு வாங்குகிறார்கள் என தேடிப்பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ.100 என போட்டிருந்தார்கள். சிவகார்த்திகேயேன் தத்தெடுத்திருந்த சிங்கம் கொரானா காலத்தில் செத்து போயிருந்தது. இப்படி தொடர்ச்சியான செய்திகளுகு பிறகு, முதல்வர் ஸ்டாலின் உள்ளே போய் பார்த்தார்

இந்திய அளவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி, ஒரிசா, இமாச்சல் பிரதேசம் என இன்னும் சில மாநிலங்களில் உயிரியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பூங்காவின் வரலாறு தேடினால், பிரிட்டன் ஆதிக்கத்தின் இந்தியா இருந்த காலத்தில், ஒரு வெள்ளைக்கார மருத்துவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட்டில் 1850களில் விலங்குகள் ஒன்றிரண்டை கூண்டில் வைத்து காட்சிக்கு வைத்துள்ளார். வெளியூரில் இருந்து கூட மக்கள் ஆர்வமாய் பார்த்திருக்கிறார்கள். 1855ல் ஒரு பூங்காவாக ஏற்படுத்தி, பல விலங்குகளை கொண்டு வந்து உயிரியல் பூங்காவாக உருவாக்கியிருக்கிறார்கள். நூறாண்டு கடந்தும் அங்கேயே இருந்திருக்கிறது. பிறகு, நகரத்தின் முக்கிய இடம் என்பதால், விரிவாக்கம் செய்ய முடியாததால் 1985ல் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தாம்பரம் அருகே வண்டலூரில் நிறுவியிருக்கிறார்கள்.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு ஒரு காட்டைப் போன்ற சூழ்நிலையில் விலங்குகளைப் பார்ப்பது என்பது சந்தோசமான விசயம் தான். வெயில் காலம் துவங்கிவிட்டது. பூங்காவை சுற்றிப் பார்த்த வரையில் எல்லா மிருங்களும் சோர்வாகத்தான் இருக்கின்றன. மனிதர்களின் முகங்களை காணப் பிடிக்காமல் எங்கோ போய் ஒளிந்துகொண்டு தான் இருக்கின்றன. சுதந்திரத்தின் அருமை நமக்கு தெரியும். காடுகளில் தன் சொந்தங்களோடு, தன் இயல்புகளோடு சுதந்திரமாய் சுற்றித்திரிந்த மிருகங்களை, உலகம் முழுவதும் பறந்து திரிந்த பறவைகளை ஒரு சின்ன எல்லையை வகுத்து அதற்குள் தான் எல்லா பருவ காலங்களிலும் வாழவேண்டும், பறக்கவேண்டும் என்பது அநீதியாக தான் எனக்குப்படுகிறது!

வாழ்ந்து கெட்ட பூங்காவைப் போல தான் காட்சியளிக்கிறது. அரசு ஏதோ சமாளித்து ஓட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது.. ஒழுங்காக பராமரிக்கவில்லை என சமீபத்தில் தான் கோவையில் இருந்த உயிரியல் பூங்காவை மூட உத்தரவிட்ட செய்தி நினைவுக்கு வருகிறது. இந்த பூங்காவையும் எப்பொழுது மூடுவார்கள் என தெரியவில்லை. முறையாக பரமாரிக்கப்படாமல் கண்ணெதிரே ஒவ்வொரு மிருகமும் செத்து மடிவதை விட, இழுத்து மூடிவிடுவதே கருணைமிக்க செயலாக இருக்கமுடியும் என எனக்குப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

February 21, 2022

Heat (1995) Crime Drama Movie


திருடன் போலீசு விளையாட்டு தான் கதை. அதை எடுத்த விதத்தில் அசத்தி இருக்கிறார்கள். பக்காவாக திட்டமிட்டு, திறமையாக திருடுகிற ஒரு குழு. ஒரு போலீசு வண்டியை மடக்கி சில பத்திரங்களை (Bearer Bonds) கொள்ளையடிக்கிறார்கள். குழுவில் புதிதாக சேர்ந்த ஒருவன் செய்த கோளாறால், மூன்று போலீசுகாரர்கள் கொல்லப்படுகிறார்கள். குழுத் தலைவன் அவன் செய்த பெரிய தவறுக்காக கொல்லப் பார்க்கிறான். அவன் நைசாக நழுவிவிடுகிறான்.


போலீசு தரப்பில் ஒரு திறமையான குழு மெல்ல மெல்ல அந்த குழுவை நெருங்குகிறார்கள். இரு தரப்பும் திறமையாக செயல்படுகிறார்கள். ஒரு வங்கி கொள்ளையை நடத்திவிட்டு, செட்டிலாகிவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****

போலீசு குழுவில் ஒரு அதிகாரி. திருடன்களுக்கு பின்னாடியே சின்சியாராக ஓடிக்கொண்டிருப்பதால், குடும்பத்திற்குள் பொருந்த முடியாமல், இரண்டு முறை விவாகரத்தாகி, மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அவரோடும் உறவு சிக்கலாகி கொண்டு இருக்கிறது.

திருடன் குழுவில் தலைமை ஏற்றிருக்கும் வில்லன் (?) ”ஒரு நெருக்கடியில் உடனே வெளியேறவேண்டும் என்றால், 30 நொடிகளில் பிரியமுடியாத எந்த உறவையும் வாழ்வில் இணைத்துக்கொள்ளாதே” என சொந்த தம்பிக்கு புத்திமதி சொல்கிற ஆள். பிறகு இறுதிக்காட்சிகளில் அவருக்கே அந்த நிலைமை வருகிறது.

படம் பார்க்கும் பொழுது, இவ்வளவு திறன் கொண்ட குழு, ஏன் வெளிப்படையான வங்கி கொள்ளைக்கு திட்டமிடுகிறார்கள் என்கிற கேள்வி வந்தது. இப்படி, திருடன் போலீசு விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், இரு தரப்பிலும் உள்ள ஆட்களிடம் உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுபூர்வமான காட்சிகளும் படம் நெடுகிலும் உண்டு. படம் பார்க்கும் பொழுது, பல காட்சிகள் ”காக்க காக்க” (2003) நினைவுக்கு வந்தது.

பெரும்பாலான படங்களில் நாயகனுக்கு சமமான வில்லன் எப்பொழுதுமே பஞ்சம் தான். சட்டென்று நினைவுக்கு வருவது வெற்றிவிழாவில் கமல் – ஜிந்தா இணையான ஜோடி. சமீபத்தில் தனியொருவன், இரும்புதிரை படங்கள். இந்தப் படத்தில் அப்படி ஒரு வலுவான ஜோடியாக அல்பாசினோவும், ராபார்ட் டி நீரோவும்! படத்தில் நடித்த பலரும்
அருமையாக
பொருந்தியிருக்கிறார்கள்.
பார்க்கவேண்டிய படம். நெட்பிளிக்சில், அமேசான் பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. யூடியூப்பிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

February 19, 2022

The Skin I Live in (2011) ஸ்பானிஷ் திரில்லர்



நாயகன் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர். தன் பண்ணை வீட்டிற்குள் ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்து, தோல் குறித்தான தன் ஆய்வுக்கு பயன்படுத்தி வருகிறார். அந்த வீட்டில் மருத்துவருக்கு நம்பிக்கையான ஒரு வயதான பெண்மணி தான் அந்த பெண்ணுக்கு தேவையானதை எல்லாம் தருகிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தப்பிக்க முயல்கிறாள்.


இப்படி போய்க்கொண்டிருக்கும் பொழுது, அந்த அம்மாவின் மகன் ஒரு திருட்டை செய்துவிட்டு, ஒளிந்துகொள்ள அந்த பண்ணை வீட்டிற்கு வருகிறான். அந்த அம்மா அனுமதிக்க மறுத்தாலும், நைசாக பேசி உள்ளே வந்துவிடுகிறான். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணைப் பார்த்ததும் பலாத்காரம் செய்கிறான். அங்கு வரும் மருத்துவர் அவனை சுட்டுக்கொல்கிறார்.

அந்த மருத்துவரின் குடும்பத்திற்கு என்ன ஆச்சு? அந்த பெண்ணுக்கு பின்னால் உள்ள கதை என்ன? அந்த பெண் எப்படி வந்து சேர்ந்தாள்? இறுதியில் என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

****

குறைந்த கதாப்பாத்திரங்கள் தான். அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை கதை முன்னும் பின்னுமாய் கொஞ்சம் குழப்பமாகவும், அதிர்ச்சியாகவும் சொல்லி செல்கிறது. இப்படி மனிதர்களுக்குள் நிறைய புதிர்களை சுவாரசியமாகவும், அதிர்ச்சிகரமாகவும் சொல்வதில் இந்த இயக்குநர் சிறப்புமிக்கவர் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பெட்ரோ அல்மதோவர் ”சண்டைக் காட்சிகளும், அலறல் சத்தமும் இல்லாத ஹாரர் திரைப்படம் இது” என்று சொன்னாராம்.

மாட்டிக்கொண்ட அந்த ‘பெண்” செய்த தவறு என்ன? அதற்கு கிடைக்கும் தண்டனை மிகவும் பெரியது. இன்னும் சொல்லலாம். ஆனால், ஸ்பாய்லராகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறது.

எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. வித்தியாசமான திரில்லர் விரும்பிகள் பாருங்கள்.

February 18, 2022

Ramanujan (2014) தமிழ்ப்படம் – ஒரு பார்வை

 




கணித மேதை இராமனுஜரின் கதை (1887 – 1920)

துவக்கப் பள்ளிச் செல்லும் வயதில் இருந்து படம் துவங்குகிறது. ”பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என பாடம் நடத்தும் ஆசிரியரிடம் ”மதிப்பு உண்டே” என முரண்படுகிறார். கல்லூரி படிக்கும் பக்கத்து வீட்டு அண்ணனின் கணித புத்தகத்தை படிக்க கேட்கிறார்.  சிரித்துக்கொண்டே கொடுக்கிறார்.  அடுத்தநாள் திரும்ப தரும் பொழுது, ”படித்து முடித்துவிட்டேன்” என்கிறார். சந்தேகம் எழுப்பினால், தயக்கம் இல்லாமல் பதில் அளிக்கிறார். வியந்துபோகிறார்கள்.

கணிதம், கணிதம் என எப்பொழுதும் கணிதத்திலேயே இருக்கிறார். பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்ணோடு தேறுகிறார். ஆனால், கல்லூரியில் மற்ற பாடங்களில் கவனம் செலுத்ததால், தோல்வியடைகிறார்.  அவரின் குடும்பமோ எப்பொழுதும் வறுமையிலேயே இருக்கிறது. மூத்தவனான இராமனுஜன் ஏதாவது நல்ல வேலைக்கு போவான் தங்கள் சிரமம் தீரும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இவரின் நிலை கவலை அளிக்கிறது. வழக்கம் போல கல்யாணம் முடித்தால், பொறுப்பு வந்துவிடும் என அவருக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.

இராமனுஜரின் திறமையை புரிந்துகொண்டு இப்பொழுது சென்னை (அப்பொழுதைய மதராஸில்) ”இவர்களை எல்லாம் போய் பார்” என அனுப்பிவைக்கிறார் உள்ளூர்காரர்.  சிலர் நிராகரித்தாலும், அரசு அதிகாரியான இங்கிலீஷ்காரர் அவரை ஆதரிக்கிறார். துறைமுகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்.

இன்னொரு வெள்ளைக்காரர் இவருடைய திறனை அறிந்து, இன்னும் சலுகைகள் தருகிறார். இராமனுஜர் பிரிட்டனில் உள்ள கணித அறிஞர்களுக்கு கடிதம் எழுதுகிறார்.   அதில் ஒருவர் அவரின் திறமையை கண்டறிகிறார்.  1914ல் பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டு, கேம்பிரிட்ஜில் படிக்க துவங்குகிறார். அவருடைய கணிதத்தில் உள்ள மேதைமையை அறிந்து, பல்கலை கழகம் அங்கீகரிக்கிறது. அதன் மூலம் உலக அளவில் பெரிய அங்கீகாரம் பெறுகிறார்.

பிரிட்டனில் படிக்கும் காலத்திலேயே அவரை டி.பி என்கிற காச\நோய் தாக்குகிறது. அப்பொழுது அதற்கான மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. பலவீனமாக இருக்கும் அவரை குணமாக்க அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்  அசைவம் சாப்பிட மறுக்கிறார். முதல் உலகப்போர் காலம் என்பதால், அவர் இந்தியா வருவதற்கு தாமதமாகிறது. 1919ல் இந்தியா வரும் பொழுது மிகவும் சிக்கலான நிலையில் வந்து சேர்கிறார்.  1920ல் அந்த கணித மேதை 33வயதில் மரணிப்பதோடு படம் முடிவடைகிறது.

****

உலகம் கடந்து வந்த பாதையில் இந்தியாவின் பங்குக்கு தசம எண்களை தந்ததிலும், இராமனுஜரின் பங்கும் முக்கியத்துவமானவை என்கிறார்கள்.  அவருடைய கண்டுபிடிப்புகளான எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு, நீள்வளையச்சார்புகள், தொடரும் பின்னங்கள் மற்றும் முடிவிலா தொடர்கள் ஆகியவை அவருடைய கணித தேற்றங்களில் சில. அவைகள் நூற்றாண்டுகள் கடந்தும் நாம் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்திலும், ஆன்ட்ராய்டுகளிலும் இன்றும் பயன்படுகின்றன. அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இராமனுஜரின் பிறந்த நாளான டிசம்பர் 22ந் தேதியை தேசிய கணித தினமாக இந்தியா அறிவித்துள்ளது.

படத்தில்…. கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இராமனுஜரின் கணிதத் திறமையை புரிந்துகொள்கிறார்கள். அவரிடம் விவாதிக்கிறார்கள். “நீங்கள் ஒரு கணிதத்தை போட துவங்குகிறீர்கள். உடனே அதன் விடையை சொல்லிவிடுகிறீர்கள்.  நீங்கள் ஒவ்வொரு படியாக (Step by Step) போகாததால்,  எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை”. அதற்கு, இராமனுஜர் ”ஒரு கணக்கை போட துவங்கும் பொழுதே அதற்கான பதில் உடனே நினைவில் வந்துவிடுகிறது.. எழுதிவிடுகிறேன். அடுத்த கணிதம் என்னை உள்ளிழுத்துவிடுகிறது. அதை போட துவங்கிவிடுகிறேன்” என்கிறார்.

இராமனுஜர் ”சாதியில்” அய்யங்கார்.  அவரை பிரிட்டனுக்கு அழைக்கும் பொழுது, கடல் கடந்து சென்றால், ”சொந்த சாதியைச்” சேர்ந்தவர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள் என அம்மா அழுகிறார்.  ”அப்ப நான் போகவில்லை” என்கிறார். அறிவியலின் மீதான பிரியத்தால், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், இந்தியாவின் வங்காளத்திலிருந்து இருந்து படிக்கும் ஒருவரை அழைத்து கேட்கிறார்கள்.  ”அது அதுக்கு உரிய பரிகாரம் செய்துவிட்டால் போதும்” என்ற இரகசியத்தை சொல்கிறார். பிறகு தான் இராமனுஜரை வரவழைக்கிறார்கள்.  இதே சாதிக்காரர்கள் தான், இராமனுஜர் இறக்கும் தருவாயில், வெளிநாடு போனதால் தான் இந்த நிலை. இங்கிருந்தால் நமக்கும் அந்த தோஷம் பிடித்துவிடும் என தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள்.  அவர் மீது மரியாதை கொண்ட மற்ற ”சாதிக்காரர்கள்” தான் இறுதி காரியங்களையும், மரியாதையும் செய்கிறார்கள்.

இராமனுஜர் வெளிநாடு செல்ல அழைப்பு வரும் பொழுது, அவருடைய அம்மா ”ஏற்கனவே நீ உடல் சரியில்லாதவன். அங்குள்ள குளிர் ஒத்துக்காது. ஆகையால் போகாதே!” என்கிறார்.  எதிர்பார்த்தது போலவே உடல்நிலை சிக்கல் வருகிறது. கணக்கிலேயே நேரம் காலம் தெரியாமல் மூழ்கி இருப்பதால், சாப்பாட்டையும் தவறவிடுகிறார். அங்கு சைவ உணவு சரியான பக்குவத்தில் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. உடல்நிலையை சரி செய்ய மருத்துவத்திற்காகவாவது அசைவம் சாப்பிட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.  நிலைமைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறார். உடல்நிலை இன்னும் மோசமாகிறது.

இராமனுஜருடைய துணைவியாரை வரவழைக்கலாம். உடனிருந்து சமைத்து பார்த்துக்கொள்வார் என ஆலோசனை சொல்கிறார்கள். அவரும் கடிதம் எழுதுகிறார். விசயத்தின் முக்கியத்துவதை உணராமல், அவருடைய அம்மா கடுமையாக மறுத்துவிடுகிறார்.  அதற்கு பிறகான காலத்தில் ஒரு இடத்தில் காரணம் சொல்வார். ஒரு ஜாதககாரன் “உன் மகன் அல்ப ஆயுசிலேயே செத்துருவான். அவன் பொண்டாட்டியை அவன் கூட இருக்கவிடாமல் பார்த்துக்கொண்டால், ஆயுசு கூடும்” என சொன்னதாக சொல்வார்.  இராமனுஜரை கொன்றது பாதி நோய் என்றால், சடங்குகளும், பகுத்தறிவு அற்ற உணவு பழக்கமுறையும் மூட நம்பிக்கைகளும் தான் பாதி கொன்றிருக்கின்றன. படத்தில் வெவ்வேறு இடங்களில் இராமனுஜர் அழுவார்.  அவர் மனதார ஏற்றுக்கொண்ட சாதி, மத மூட நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் சிக்கி கொண்டதால் வந்த அழுகை தான் என்பதாகத் தான் எனக்குப்பட்டது.

படம் பார்க்கும் பொழுது, உடைமையிலும், அதிகார வர்க்கத்திலும் என உயர் மட்ட இடங்களிலும்  ”உயர் சாதியில்” பிறந்தவர்களின் ஆதிக்கம் நன்றாகவே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு ”உயர் சாதியில்’ பிறந்த இராமனுஜரையே அங்கீகரிக்க முடியாமல், சோத்துக்கு வழியில்லாமல் அல்லாட விட்டிருக்கிறார்கள்.  வெளிநாடு போகவேண்டும் என்ற நிலையில் சாதிய பழக்க வழக்கங்களை, சடங்குகளை சொல்லி, கட்டையை போட்டிருக்கிறார்கள்.  இதே இராமனுஜர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், இவர்கள் எல்லாம் எப்படி கையாண்டிருப்பார்கள்? என்ற சிந்தனை வருவதை தவிர்க்கமுடியவில்லை.

இப்படி எல்லா இடங்களிலும் தங்கள் அதிகாரம் கொண்டிருந்த பார்ப்பனர்களாலும், ஆதிக்கச் சாதியை சேர்ந்தவர்களாலும், கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த சமூக மாற்றத்தை பொறுக்க முடியாமல் தான், இந்த மண்ணிலேயே தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்க தான் ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. பொய் பிரச்சாரங்கள், கலவரங்கள் என சாம, தான, பேத, தண்ட என எல்லா வழிகளிலும் முயல்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடியதால் தான் அந்த இருண்ட காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். மீண்டும் அதே காவி இருளில் விழாமல் இருக்க.  இப்பொழுதும் அதே ஒற்றுமையுடனும், உறுதியோடும் எதிர்கொள்ளவேண்டும்.

மற்றபடி, இராமனுஜராக நடிகை சாவித்திரியின் பேரனான, பிக்பாஸ் புகழ் அபினய் வருகிறார். சரத்பாபு, சுஹாசினி, இராதாரவி, செல்வா, நிழல்கள் ரவி என தெரிந்த முகங்களாக பலரும் வருகிறார்கள். அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.  ”பாரதி” படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். யூடியூப்பில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. பாருங்கள்.

February 16, 2022

எனக்கு பயமாக இருக்கிறது!


 நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள்

என்று சொல்கிறீர்கள்
ஆனால் அதன் கீழ் நடக்க
ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்

நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள்
என்று சொல்கிறீர்கள்
ஆனால் அது பிரகாசிக்கும் போது
நீங்கள் உங்கள் தங்குமிடங்களில்
அடைந்து கொள்கிறீர்கள்

நீங்கள் காற்றை நேசிக்கிறீர்கள்
என்று சொல்கிறீர்கள்
ஆனால் அது வரும்போது
உங்கள் ஜன்னல்களை மூடி விடுகின்றீர்கள்
அதனால்தான்

நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
என்று சொல்லும்போது
எனக்கு பயமாக இருக்கிறது!

February 15, 2022

Hridayam (2022) மலையாளம்



காலம் 2006. நாயகன் இன்ஜினியரிங் படிக்க சென்னைக்கு வருகிறார். புதிய சூழல், புதிய நண்பர்கள், சீனியர்களின் ராகிங், பார்த்ததும் காதல், கலாட்டக்கள் என நகர்கிறது. நாயகன் செய்த ஒரு தவறால், காதல் முறிகிறது. நண்பர்களுடன் குடி, ஏகப்பட்ட அரியர்ஸ், பிறகு கொஞ்சம் சுதாரித்து, படிக்கிற பசங்களுடன் இணைந்து, எல்லா தாள்களிலும் தேர்கிறார்.


ஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடித்து, பல்வேறு திசைகளில் பிரிகிறார்கள். எதைச்சையாக பார்த்த ஒரு புகைப்படக்காரருடன் இணைந்து தொழில் செய்கிறார். ஒரு புதுகாதலுடன் வாழ்க்கையை துவக்குகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
****

”என்னை ஒரு ஆளுமையாக உருவாக்கியதற்கு நன்றி” என கல்லூரியின் சுவற்றில் எழுதுவது படத்தின் ஒன் லைன். உள்ளம் கேட்குமே, பிரேமம் வரிசையில் இன்னுமொரு படம் எனலாம். அந்த படங்களில் உள்ள இளமை துள்ளல், கல்லூரி வாழ்க்கை, நல்ல பாடல்கள், பளிச் ஒளிப்பதிவு இந்தப் படத்திலும்!

படம் பீல் குட் மூவி என முடிவெடுத்துவிட்டதால், அதன் திசைவழியிலேயே ‘நல்ல’ அம்சங்களுடனேயே நகர்கிறது. இடையில் நாயகன் ஏன் திருந்தினான்? சொல்லவில்லை. நாயகன், நாயகிக்குமான உறவு பூமிக்கும், சூரியனுக்கும் உறவு போல தான்! ஈர்ப்பும் இருக்கிறது, விலகலும் இருக்கிறது. இறுதிவரை நண்பர்களாக இருப்பது பெரிய ஆறுதல்.

”இங்கிலீஷை கண்டால் மலையாளிக்கு கொஞ்சம் பயம்.” “எல்லாத்தையும் கணக்குப் போட்டு காதலிக்கிறதுக்கு நான் என்ன மலையாளியா? தமிழன்டா!” என சுய எள்ளல் ரசிக்க வைத்தது. படம் சென்னையில் தான் பாதிக்கும் மேலாக நகர்கிறது. சென்னையை, சென்னை மனிதர்களை பாசிட்டிவாகவும் காண்பித்திருக்கிறார்கள். தான் மட்டும் வளராமல் தன்னைப் போல அனைவரையும் தன்னோடு அழைத்து செல்லும் செல்வா கதாப்பாத்திரம் சிறப்பு.

மோகன்லாலின் பையன் பிரணவ் தான் நாயகன். தர்சனா, கல்யாணி இருவரும் நாயகிகள் என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ”தட்டத்தின் மறயத்து” இயக்கிய வினீத் சீனிவாசன் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

திரையரங்குகளில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

அதிகரிக்கும் தற்கொலைகள்; அலட்சியப்படுத்தும் மோடி அரசு!



தற்கொலைகளைத் தனித்தனியாக ஊடகங்களில் பார்க்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஒவ்வொரு நாளும்  எந்தவித சலனமும் இல்லாமல் கடந்துபோகிறோம்.

*****


கொரானா ஊரடங்கு, தொழில் முடக்கம் என பல காரணங்களால், தொடர்ச்சியான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க, கடன் தொல்லையால் செய்யப்படும் தற்கொலைகளை தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என மாநிலங்கவையில் (09/02/2022) காங்கிரசைச் சேர்ந்த ராகுல் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை இணையமைச்சர் “கடந்த 2018 முதல் 2020 வரைக்குமான  மூன்று ஆண்டுகளில் வேலையின்மை, திவால் அல்லது கடன் காரணமாக 25000 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  இதில் கடன்சுமையால் 16091 மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  வேலையில்லாத காரணத்தால் 9140 தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக கொரானா காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முயல்வதன் மூலம் தீர்வு காண முயல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

தற்கொலைகளைத் தனித்தனியாக ஊடகங்களில் பார்க்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஒவ்வொரு நாளும்  எந்தவித சலனமும் இல்லாமல் கடந்துபோகிறோம்.  இப்படி தொகுத்து, சொல்லும் பொழுது, எத்தனை ஆயிரம் மனித உயிர்கள், எல்லாம் நம்மைச் சுற்றி வாழ்ந்த சகமனிதர்கள் என யோசிக்கும் பொழுது பதைபதைக்கிறது.

 

உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை 2018ல் அறிவித்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 2192 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.  இதில் இந்தியாவின் பங்கு (2019ல்) 1,53,052 . உலகில் 100 பேர் தற்கொலை செய்கிறார்கள் என்றால், அதில் 19பேர் இந்தியாவில்  தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

 

இந்தியாவில் ஒரு நாளைக்கு 420 பேர் தற்கொலையால் சாகிறார்கள். ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னாலும் 25பேரை தற்கொலையிலிருந்து  சக உறவுகள், மனிதர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள். ஒரு தற்கொலையால், சொந்தங்கள், நண்பர்கள் என  135 பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உலக சுகாதார உலகம்.  அப்படியென்றால் இதன் தீவிரத்தை நம்மால் உணரமுடியும்.


மோடி அடுத்தடுத்து அறிவித்த திட்டங்களாலும், கொரானா காலத்தில் எடுத்த மோசமான நடவடிக்கைகளாலும் இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலைகளும் அதிகரித்திருக்கிறது என்பதை  அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே நிருபிக்கின்றன.

மாணவர்களின் தற்கொலைகள்

 

ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் போன்ற இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கல்லூரியிலும், விடுதியிலும் தற்கொலை செய்துகொண்டவர்களைத் தான் கணக்கில் எடுத்துள்ளார்கள். வீடுகளில், வெளியிடங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.



மாணவர்களின் பெரும்பாலான தற்கொலைகளுக்கு சாதியப் பாகுபாடு தான் காரணம். மாணவர்களிடையே, ஆசிரியர்களிடம் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.



தற்கொலை செய்த மாணவர்களை வகைப்பிரித்து பார்த்தால், 24 மாணவர்கள் பட்டியல் சாதியினர் (SC),  41 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC),  பட்டியல் பழங்குடி பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் மூவர்,  சிறுபான்மையினர் பின்னணி சார்ந்தவர்கள் 3 மாணவர்கள் ஆக 58% மேலே முன்னா சொன்னது உண்மை என விளங்கும்.



தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது.  எப்படி தடுப்பது? என ஆய்வு செய்த குழு,  ”விடுதிகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளை கழட்டிவிடுங்கள்” என்று சொன்ன ஆலோசனைகளில் ஒன்றை மட்டும் நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் உடனடியாக அமுல்படுத்தியிருக்கிறது.



விவசாயிகளின் தற்கொலைகள்

 

இந்தியாவில் மற்ற பிரிவினர்களின் தற்கொலைகளை விட விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் என்பது பலமுறை அம்பலமான விசயம். 1995  துவங்கி 2015 இருபது ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இதில் நிலம் உள்ளவர்கள் தான் விவசாயிகள் என்ற கணக்கில் வருவார்கள்.  ”நாம செத்துப்போனா, நம்ம குடும்பம் தெருவில் நிற்கும் என நினைத்த விவசாயி தன் குடும்பத்தோடு சாகும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் இந்த தற்கொலை பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள்” என்பது முக்கிய செய்தி.

 

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைகள் வெளி உலகத்திற்கு அம்பலமானதும், தன் ஆட்சியில் இந்த பிரச்சனை வந்துவிட கூடாது என ”புத்திசாலித்தனமாக” யோசித்த மோடி அரசு, கணக்கெடுப்பு முறையையே மாற்றிவிட்டது என்கிறார் ஊரக விவகார ஆய்வாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான சாய்நாத். உழவர்களில் கணிசமானவர்களை, மற்ற தொழில்புரிவோர் எனும் பிரிவுக்கு மாற்றினார்கள். இதனால், உழவர் தற்கொலையின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. ஆனால், ’மற்ற தொழில் புரிவோர்’ வகையினரின் தற்கொலை 128 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது” என மர்மத்தை போட்டு உடைத்தார். பிறகு 2016ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சார்பில் உழவர்கள் தற்கொலை விவரத்தை மட்டும் வெளியிடாமல் அரசு நிறுத்தி வைத்தது.

 

ஆக இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கிறார்கள் என விவசாயிகளின் தற்கொலைகளின் தகவலை தான் இத்தனை அலட்சியமாக ஆட்சியாளர்கள் கையாள்கிறார்கள். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்காமல், விவசாயிகளின் தற்கொலைகளை அதிகரிப்பதற்கு போட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வெயில், மழை, பனி, கொரானா என  எல்லாவற்றையும் துணிவாக எதிர்கொண்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடினார்கள். விளைவு அரசு பின்வாங்கியது.

 

இதோ தற்கொலை செய்துகொண்ட பல ஆயிரம் உழவர்களில் ஒரு உழவர் சாவதற்கு முன்பு எழுதிய தற்கொலை குறிப்பு

 

“அரசியல்வாதிகளும், பெரும் தொழிலதிபர்களும் பாக்கி பணத்தைக் கட்டாமல் இருந்தால் அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதலாளிகள் கடன் வாங்கினால் கடனை திருப்பிக் கட்ட அவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கின்றனர். மேலும் அவரது கடன்களைத் தள்ளுபடியும் செய்கின்றனர். ஆனால் ஒரு சாதாரண மனிதன் சிறிய தொகை கட்டாமல் விட்டால் கூட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று விளக்கம் கூட கேட்பதில்லை.

 

கொரோனா காரணமாக என்னால் பாக்கி தொகையைக் கட்ட முடியவில்லை. சிறிது கால அவகாசம் தந்திருந்தால் நான் அந்த தொகையைக் கட்டி இருப்பேன். என்னால் எனது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய உடல் பாகங்களை விற்று பாக்கி தொகை எடுத்துக் கொள்ளவும்”

–     ராஜ்புத், விவசாயி, மத்திய பிரதேசம், 02/01/2021  

 

வேலையின்மை, கடன்சுமையில் தற்கொலை செய்தவர்களின் சடலங்களை தொடர்ந்து சென்றால், தோண்ட தொண்ட குழந்தைகளின் உடல்கள் கிடைக்க துவங்கி மூத்த குடிமக்களின் உடல்கள் வரை வந்துகொண்டே இருக்கின்றன.  தற்கொலை என்பது சுயவிருப்பத்தில் தன்னைத் தானே கொலை செய்வது என்கிறது மருத்துவ உலகம்.  தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்த குரல்களையும், கதறல்களையும் இந்த அரசுகள் கேட்க தயாரில்லை. அதனால் இவைகளை தற்கொலையில் எப்படி சேர்க்கமுடியும்?  ”உயர் கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகையால் அங்கு நடந்த மாணவர்களின் தற்கொலைகளுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜுலுகர ஸ்ரீனிவாஸ்.  மற்ற பிரிவினர் மக்களின் தற்கொலைகளுக்கும் ஆள்கிற மோடி அரசு தான் பொறுப்பேற்கவேண்டும்.

 

இவைகளைப் பற்றியெல்லாம் எதற்கும் கவலைப்படாத  ஆளும் காவி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின், தரகு முதலாளிகளின் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கிறார்கள்.  அவர்கள் இட்ட கட்டளையை உடனே நிறைவேற்றுகிறார்கள். மக்களை திசை திருப்புவதற்கு நாட்டில் கலவரங்களை தூண்டிவிடுகிறார்கள். நாட்டை எப்பொழுதும் பதட்டமாகவே வைத்திருக்கிறார்கள்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரிவிலும் பல ஆயிரங்களில் தற்”கொலை”கள் செய்த மக்களின் பிரதிநிதிகள் நாம் தாம். அவர்களின் குரல்களின் நியாயத்தை நாம் தாம் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் ஓங்கி ஒலிக்கவேண்டும்.  அதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் நீதி.

February 14, 2022

கண் சிமிட்டும் நேரம் (1988) ஒரு நல்ல திரில்லர்


நாயகன் கொலைவெறியோடு சென்னை வந்து சேர்கிறான். மருத்துவராக வேலை செய்யும், நாயகியின் வீட்டை நோட்டம் விடுகிறான். வீடு புகுந்து கொலை செய்கிறான். தவறுதலாக நாயகியின் அத்தையை கொன்றுவிடுகிறான். தப்பிக்கும் பொழுது, விபத்தில் மாட்டுகிறான்.

நாயகியின் மருத்துவமனைக்கே சிகிச்சைக்கு வந்து சேர்க்கிறார்கள். விபத்துக்கு முன்பு நடந்த எந்த நினைவுகளும் மறந்துபோகிறான். தொடர்ச்சியாக அவனுக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது, நாயகிக்கு நாயகனை பிடித்துப் போகிறது. எங்கே அனுப்புவது என யோசிக்கும் பொழுது யாருமில்லாமல் இருக்கும் நாயகி தான் பராமரிப்பதாக அழைத்து செல்கிறாள்.

அவனுக்கு எப்பொழுது நினைவு திரும்பினாலும், நாயகியை கொலை செய்வான் என்கிற நிலையில் படம் நகர்கிறது. நாயகன் ஏன் கொலை செய்ய நினைத்தான்? என்ன நடந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு காதல் விவகாரம். அதில் இருந்து தப்பிக்க சுயநலமாக ஒரு ஆள் மொட்டைக் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் இரண்டு குடும்பங்களை எப்படி மோசமாக பாதிக்கிறது என்பது தான் கதை. நம்மூரில் உண்மை சம்பவம் பரவுவதை விட, காட்டுத்தீ போல வதந்தி பரவுவது தான் அவலம். ஒரு ”செய்தி” வருகிறது என்றால், அந்த கடிதம் உண்மையா? பொய்யா? என யாருமே ஆராய்ந்து பார்ப்பதில்லை அடுத்தடுத்து உணர்ச்சிப்பூர்வமாகவே முடிவெடுக்கிறார்கள். நம்ம தாத்தா சொன்னது

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்பது தான் நினைவுக்கு வருகிறது. நம் நாட்டில் வதந்திகளைப் பரப்பியே கட்சி வளர்ப்பவர்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

நடைமுறையில் உள்ள ஒரு சம்பவத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை சுவாரசியமான படமாக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியது கவிஞர் கண்ணதாசனுடைய மகன் கலைவாணன் கண்ணதாசன். பட தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், போலீஸ் ஆய்வாளராக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் சரத்குமார். வேறு வழக்கே இல்லாதது போல, நாயகன், நாயகி பின்னாடியே சுத்த விட்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

கார்த்திக் கொலைகாரனாகவும், எல்லாவற்றையும் மறந்து வெள்ளந்தி மனிதராகவும் நன்றாக வித்தியாசம் காண்பித்திருக்கிறார். அம்பிகாவும் சிறப்பு. சிரிப்புக்காக எஸ்.எஸ். சந்திரனும், செந்திலும் வருகிறார்கள். கடுப்பேற்றுகிறாரகள். ”விழிகளில் கோடி அபிநயம்” பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. இந்த பாடல் தான் இந்தப் படத்தையே பார்க்க தூண்டியது.

இந்தப் படத்தில் நாயகன் ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறிழைக்கிறான். அவனை மன்னித்து இருக்கலாம். அவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துவிட்டார் இயக்குநர் என நினைத்தேன். இந்தப் படத்தின் வெற்றியில் இந்தியில் மாதுரி தீட்சித்தை வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்தியில் நான் யோசித்தது போல, அவர்களும் யோசித்து இறுதி காட்சியை மாற்றி இருந்தது சிறப்பு.

யூடியூப்பில் இலவசமாகவே கிடைக்கிறது. திரில்லர் விரும்பிகள் பாருங்கள்.

February 8, 2022

பட்ஜெட் 2022 : கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்!




பொதுவாக இந்திய பட்ஜெட்டோ, தமிழக பட்ஜெட்டோ வாசிக்கும் பொழுதும் பெரும்பாலான மக்கள் அசுவராசியமாக இருக்கிறார்கள். ஊடகங்கள் தங்கள் ஆதரவு, எதிர்ப்பு நிலைக்கு தகுந்தவாறு தரும் சில செய்திகளை மட்டும் மேலோட்டமாக கேட்டுக்கொண்டு, அன்றாட வேலைகளில் மூழ்கிவிடுகிறார்கள். மத்தியதர வர்க்கமும், அதற்கு மேற்பட்ட வர்க்கங்களும் பட்ஜெட் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதால் ஆர்வமாய் கவனிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். அதில் வினையாற்ற முயல்கிறார்கள்முயல்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் வரவு, செலவை வைத்து அந்த குடும்பம் ஆரோக்கியமாய் இருக்கிறதா?. நெருக்கடியில் இருக்கிறதா, நோய்வாய்ப்பட்டு இருக்கிறதா? என தெரிந்துகொள்ளலாம். குடும்பத்தின் பட்ஜெட்டை கவனித்து வருபவர் பட்ஜெட் நெருக்கடியில் இருந்தால், மிகுந்த மன உளைச்சலில் இருப்பார். நோய்வாய்ப்பட்டு இருந்தால், அவர் இன்னும் நோய்வாய்ப்பட்டுவிடுவார். அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு இந்த நெருக்கடியை ஒன்று சொல்லமாட்டார் அல்லது சொல்லவேண்டும் என்ற உணர்வின்றி இருப்பார். அதனால் ஒவ்வொரு உறுப்பினரும் செல்லம் கொஞ்சி செலவை அதிகப்படுத்தி குடும்ப பட்ஜெட்டை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவார்கள்.

ஒரு குடும்பத்திற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்றால், ஒரு நாட்டிற்கு ஒப்பிட்டு பாருங்கள். இதன் தீவிரம் புரியும். வேறு எந்த சமூக காரணிகளையும் விட, பட்ஜெட்டை கொஞ்சம் உரசிப் பார்த்தால், ஆள்கிறவர்களின் லட்சணத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த பட்ஜெட் யாருக்கு ஆதரவாக போடப்படுகிறது? யாரை அதிகம் பாதிக்கப்போகிறது? என தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை அல்லவா? பெரும்பான்மை மக்களின் அறியாமையில் தான் சிறுபான்மை கும்பல் இதில் குளிர்காய்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது? வாருங்கள். பார்க்கலாம்.

கழுத்தை நெறிக்கும் கடனும், வட்டியும்

ஒரு குடும்பத்தை நடத்த ஒரு நாளைக்கு என்பது ரூபாய் தேவை.. ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு வட்டியாக மட்டும் 20ரூ கட்டவேண்டும். ஆக மொத்தம் மாதம் நூறு ரூபாய் தேவை. ஒரு நாளைக்கு அந்த குடும்பம் சம்பாதிப்பதோ 65 ரூபாய் தான். பற்றாக்குறைக்கு என்ன செய்ய? தயங்காமல் கையை நீட்டிட வேண்டியது தான்! என சொன்னால்…நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அந்த குடும்பம் திவால் தான். சீக்கிரமே தெருவிற்கு வந்துவிடும்” என்றெல்லாம் மோசமாக திட்டாதீர்கள்.  இந்தியாவை இந்த மோசமான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

காங்கிரசு கட்சி ஆட்சியை விட்டு 2014 ஜூனில் இறங்கிய பொழுது, இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 7 ஆண்டுகளில், அது ரூ. 116 லட்சத்து 21 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது.

அதை இப்படியும் சொல்லலாம்!  நாடு 1947ல் துவங்கி, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஆண்ட‌ 7 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் கோடி கடன்  அதிகரித்துள்ளது.

இப்படி கைநீட்டி கடன் வாங்குவதெல்லாம், பெரும்பாலும் உலக வங்கியில் தான். அதில் பெரும்பங்கு போட்டிருப்பது உலக ரவுடியான ஏகாதிபத்திய அமெரிக்கா. மற்ற நாடுகள் ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்காளிகள். நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளை கடன் என்கிற பெயரில் சிக்க வைத்து, அவர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற திட்டங்களை கட்டாயப்படுத்தி நிறைவேற்றி கொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ “இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதன்மூலம் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஓரளவு முன்னேற்றம் பெறுவதும், பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதுமாகத்தான் சுழற்சியாக இருக்கிறது.  தேசிய நெடுஞ்சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக அனுமதிக்காதே! காசு வசூல் செய்!” என்பதெல்லாம் உலகவங்கி கொடுத்த திட்டங்களில் ஒன்று” என்கிறார்.

ஆக, இந்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையை ஈடுகட்டவேண்டும் என்கிற சாக்கில் உலக வங்கியில் கடன்கள் வாங்கி இந்தியாவை கடன் வலையில் வலுவாக சிக்க வைக்கிறார்கள். இன்னொரு வழியாக, முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை வித்து தின்பவன் போல, இத்தனை ஆண்டு காலம் மக்களின் உழைப்பில் எழுந்து நிற்கும் பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்றுத்தள்ளுகிறார்கள். இந்த பட்ஜெட்டில் எல்.ஐ.சியை குறிவைத்து இருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்கள்

பட்ஜெட் பற்றிய நிதியமைச்சர் உரையில் `பெண்கள்’ என்ற வார்த்தை ஆறு முறைதான் உச்சரித்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்காக பட்ஜெட்டில் எவ்வளவு சிந்தித்துள்ளார்கள் என புரிந்துகொள்ளலாம்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளார்கள். சென்ற ஆண்டு 4.4% ஆக இருந்த அதன் பங்கு, இந்த வருடம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.

இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்றும், புதியதாக உருவாக்கப்படும் அங்கன்வாடிகள் சிறந்த உள்கட்டமைப்பு, ஆடியோ காட்சியமைப்புகள், மற்றும் தூய்மையான சுற்றுப்புறத்துடன் குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சூழலை வழங்கும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த அங்கன்வாடிப் பணிகளை, சச்சாம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் (Poshan 2.0 scheme) கீழ்தான் செயல்படுத்த வேண்டும். ஆனால் அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு 0.7% என்ற மிகக் குறைந்த அளவு உயர்வே கிடைத்துள்ளது. குழந்தைகளின் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கேட்டு வரும் குறைந்தபட்ச நிர்ணய ஊதியம் போன்றவற்றுக்கோ ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பெண்களின் பாதுகாப்பிற்காக நடைமுறையில் இருக்கும் `பேடி பச்சவோ பேட்டி படாவோ’, ஒன் ஸ்டாப் சென்டர்கள், நாரி அதாலத், மகிளா போலீஸ் தன்னார்வலர் மற்றும் மகளிர் ஹெல்ப்லைன் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ₹587 கோடியில் இருந்து ₹562 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரம், குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை உள்ளடக்கிய மிஷன் வத்சலயா திட்டத்திற்கு 63.5% நிதி ஒதுக்கீடு உயர்ந்து ₹900 கோடியாக உள்ளது.


மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் SC, ST, சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கான நலனுக்கான திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் பயனாளிகள் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த செலவு 2021-22 பட்ஜெட் ஒதுக்கீட்டில் 3.2% என்று இருந்து, இந்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2.5% ஆகக் குறைந்துள்ளது. அரசின் தொலைநோக்குப் பார்வையில் பெண்களுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது” என தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் சங்கம்.

போராடிய உழவர்களை பலிவாங்கிய பட்ஜெட்

கார்ப்பரேட்டுகளுடைய நலனுக்காய் கொண்டு வந்த வேளாண்சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடினார்கள். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சில நூறு பேரை இழந்தும் கூட வெயில், மழை, பனி, கொரானா என எல்லாவற்றையும் எதிர்கொண்டு விடாப்பிடியாக போராடினார்கள். மத்திய அரசு பின்வாங்கியது. அவர்களை பழி வாங்கும் விதமாக, கடந்த ஆண்டு உரங்களுக்கான மானிய தொகை ரூ.1,40,122 கோடி ஒதுக்கியவர்கள், இந்த பட்ஜெட்டில் ரூ. ரூ.1,05,222 கோடிகள் தான் ஒதுக்கியுள்ளார்கள். இது சுமார் ரூ. 34,900 கோடிகள் அதாவது 25 சதவீதம் குறைவு.

பஞ்சாப் மாநிலம் உருவாக்கும் விவசாய உற்பத்தியின் பங்குக்கு கிட்டத்தட்ட ரூ. 3141 கோடி சுமை ஏறப்போகிறது. உரத்தின் விலை இன்னும் உயர்ந்தால், அதன் சுமையும் அந்த விவசாயிகளின் தலையின் தான் விழப்போகிறது.

நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றிய பட்ஜெட்

கடந்த ஏழு ஆண்டுகளாக விலைவாசி கடுமையாக ஏறியிருக்கிறது. ஆனால், தனிநபர் வருமான வரிக்கான இலக்கை கொஞ்சம் தளர்த்தி, சலுகைகள் தருவார்கள் என நடுத்தர வர்க்க மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால், அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இந்த நாட்டின் தேசிய முதலாளிகள் 10 லட்சத்திற்கும் மேலாக சம்பாதித்தால், 30% வருமான வரியாக செலுத்தவேண்டும்.  ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் 25.2 சதவிகிதம் வரியாக கட்டினால் போதும் என 2019 பட்ஜெட்டிலிருந்து சலுகை தந்தார்கள். இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரிகளுக்கு போடப்படும் சர்சார்ஜை 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்கள்.


நேர்முகவரியும் மறைமுக வரியும்

நேர்முகவரி என்பது வருமான வரி.  சம்பாதிக்கும் பணத்திற்கு ஏற்ப வரி வசூலிப்பது. இந்த முறை தான் சரியானது. இந்த நேர்முக வரியில் தான் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு 30% சதவிகிதத்திற்கு பதிலாக 25.2% வசூலிக்கிறார்கள்.  மறைமுகவரியான விற்பனை & சேவை வரி என சொல்லப்படும் ஜி.எஸ்.டி வரியை அதிகரிக்கிறார்கள். கொரானாவால் ஊரடங்கு காரணமாகவும், தொழில் நிலைமை ஆரோக்கியமாக இல்லாததாலும், கிட்டத்தட்ட 60 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என ஆய்வாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மோசமாக நலிந்து கிடக்கும் சிறு, குறு, நடுத்தர முதலாளிகளின் நிலையை கணக்கில் கொள்ளாமல், பட்ஜெட்டில் எந்தவித ஊக்க சலுகைகளும் வழங்காமல், இதற்கு எதிர்மாறாக கரும்பு மிசினில் பிழியப்படும் கரும்பைப் போல பிழிந்து, ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டியில் ஒரு லட்சம் கோடி வசூல் செய்கிறோம் என பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை அதிகரித்துக்கொண்டே சென்றதால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் என அனைத்துப் பொருட்களும் விலைவாசி எகிறிக்கொண்டே செல்கிறார்கள்.  இதற்கு சர்வதேச சந்தை விலை எகிறுவது தான் காரணம், மாநில அரசுகளும் இதில் வரி விதிக்கிறார்கள் என மாநில அரசு மீது பழி போடுகிறார்கள். இதோ மக்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

கச்சா பேரல் விலையும்/ தில்லி விலையில் ஒரு லிட்டர் விலை

2012 ல் $94.05 65.60

2014 ல் $93.17 72.24

2016 ல் $43.29 59.68

2018 ல் $65.23 75.55

2020 ல் $39.68 79.76

2021 ல் $60.68 94.69

2022ல் $85.60 95.41

சென்னையில் ஒரு லிட்டர் விலை 101.40

ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் விலை 108.20

கடந்த ஜூன் 1 ந்தேதி தில்லியில் பெட்ரொல் விலை ரூ. 94.49. இந்த விலை எப்படி விதிக்கப்படுகிறது என்றால்….

கச்சா பேரல் விலை – 5151.00

ஒரு கச்சா பேரல் என்பது 159 லிட்டர்.

ஆக 1 லிட்டர் ரூ. – 32.39

 

சுத்தப்படுத்த ரூ.- 3.60

மத்திய அரசு வரி ரூ. 32.90

(சுங்கம் + சாலைவரி)

பெட்ரோல் பம்பு ரூ. 3.79

மாநில வாட் வரி ரூ. 21.81

ஒரு லிட்டர் ரூ. 94.49

ஆக ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 32.90யும், மாநில அரசு 21.81 யும் வரியாக விதிக்கின்றன.  மத்திய அரசு இதில் எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பட்ஜெட் குறித்து இன்னும் பல அம்சங்களை விவாதிக்கலாம். கட்டுரை நீண்டு செல்வதால், இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம். ஆக இந்த பட்ஜெட் பெரும்பாலான மக்களுக்கான பட்ஜெட் இல்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஏகாதிப்பத்திய நாடுகளுக்கும் ஆதரவான பட்ஜெட் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பும் அல்வா கிண்டி பகிர்ந்துகொள்வது சடங்காக செய்வார்கள். இந்த வருடம் கொரானா அச்சுறுத்தலால், அந்த சடங்கை தவிர்த்துவிட்டார்கள்.  பெரும்பாலான மக்களுக்கு பட்ஜெட் என்ன தரும்? என்பதற்கு அரசு மக்களுக்கு சூசகமாக சொல்லும் செயல் தான். நாம் தான் அதை புரிந்துகொள்ள தவறுகிறோம்.

இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு பிடித்தது எதுவுமே இல்லையா?   இருக்கிறது. மக்களுக்கு எதிரான பட்ஜெட்டை மக்களுக்கு நல்லது செய்யும் பட்ஜெட் போல பூசி மெழுகுவதை போல பல மணி நேரம் பேசி, அதை ஊடகங்கள் ஒளிப்பரப்பி கடுப்பேத்துவது என்பது இந்த பட்ஜெட்டில் இல்லை. 1.30 மணி நேரத்தில் வாசித்து முடித்துவிட்டார்கள்.

இன்னொரு பாசிட்டிவான விசயம்.  இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை பேரல் பேரலாக தாள்களில் பிரிண்ட் எடுக்காமல் கடந்த ஓரிரண்டு வருடங்களாக டிஜிட்டல் பட்ஜெட் என்ற முறை கொண்டு வந்திருக்கிறார்கள். சில நூறு மரங்கள் வெட்டப்படாமல் தப்பித்தன என்பது பெரிய ஆறுதல் தானே!