> குருத்து: ஒளிவிளக்கு (1968)

December 4, 2022

ஒளிவிளக்கு (1968)


நாயகன் சிறுவயதில் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார். பசிக்காக திருட ஆரம்பிக்கிறார். பிறகு திருட்டே வாழ்க்கையாகிவிடுகிறது. திருந்தலாம் என நினைக்கும் பொழுது, யாரோ செய்த வங்கி கொள்ளையை தடுக்கப்போக... இவர் சிக்கி சிறை செல்கிறார். உண்மைத் திருடர்கள் யார் என தேடிப் போனால், அது பெரிய கொள்ளைக் கூட்டமாக இருக்கிறது. அங்கு நடந்த கை கலப்பில், நாயகனை காப்பாற்ற நாயகி ஒருவனை சுட, செத்துப்போகிறான். ”கொலையை மறைத்துவிடுகிறேன். இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள்” என சொல்ல… கையெழுத்துப் போடுகிறார்கள்.


பிறகு திருந்த நினைக்கும் பொழுதெல்லாம், வில்லன் மிரட்டி திருட வைக்கிறார். ஒரு கிராமத்து பண்ணையார் வீட்டில் திருட போகும் பொழுது, விச காய்ச்சலால் ஊரே காலி செய்துவிட்டு போய்விடுகிறது. அங்கு பண்ணையாரின் விதவை மருமகள் சாக கிடக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றுகிறார். தன்னுடனே அழைத்தும் வந்துவிடுகிறார்.

அந்த அன்பான உறவு அவரை திருந்தி, உழைக்கச் சொல்லி தூண்டுகிறது. திருந்தி வேலை கேட்டாலும், திருடன் என்பதால், வேலை தர மறுக்கிறது. ஒரு பக்கம் வில்லன் மிரட்டுகிறான். பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக, கொஞ்சம் ஆக்சனுடன் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

****

எம்.ஜி.ஆருக்கு இது 100வது படம். மிகப்பெரிய வெற்றிப்படம். பெரிய பேனரான ஜெமினி தயாரித்திருக்கிறது. ”எங்க வீட்டுப்பிள்ளை” படம் இயக்கிய சாணக்கியா தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்து இந்தியில் Phool Aur Pathar (Flower and Stone என்ன ஒரு கவித்துவமான தலைப்பு) என்ற பெயரில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றிப்பெற்ற படத்தை தமிழில் எடுத்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் திருடன் என்ற பாத்திரத்தில் எப்படி ஒத்துக்கொண்டார் என்பது பெரிய ஆச்சர்யம். அதனால் எம்.ஜி.ஆருக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதனால் படத்தில் திருந்துவதிலேயே குறியாய் இருப்பதை காணலாம்.

எம்.ஜி.ஆருக்காக காட்சிகள் சேர்ப்பதை, மாற்றுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், படத்தில் ஜெயலலிதாவிற்காகவும் காட்சிகளை மாற்றியிருக்கிறார்கள். இந்திப் படத்தில் ஜெயலலிதா பாத்திரத்தை கொன்று, செளகார் ஜானகி பாத்திரத்தை நாயகன் திருமணம் செய்கிறார். இங்கு உல்டா செய்திருக்கிறார்கள். டைட்டில் போடும் பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்த பெயராக செளகார் ஜானகியை போட்டு, ஜெயலலிதாவை பிறகு போட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் சொல்லி, எம்.ஜி.ஆருக்கு அடுத்த பெயராக ஜெயலலிதாவை டைட்டிலில் போட வைத்தார் என சமீபத்தில் செளகார் ஜானகி ஒரு பேட்டியில் சொன்னாராம்.

வில்லனிடம் அந்த கொலை கேசில் சிக்கும் பொழுது, எம்.ஜி.ஆரே அந்த அடியாளை அடித்துக் கொன்றுவிடும் நிலையில் இருக்கும் பொழுது, ஜெயலலிதா வந்து அவனை சுடுவதெல்லாம்… அந்த காட்சி ஒட்டவே ஒட்டாது.

1966ல் வெளிவந்தது. இந்தப் படத்தில் உள்ள ”இறைவா உன் ஆலயத்தில்” பாடல், எம்.ஜி.ஆர் உடல்நலமின்றி இருக்கும் பொழுது 1984ல் பட்டித்தொட்டி எல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கட்சிகாரர்களால் பிரபலப்படுத்தப்பட்ட பாடல். திரையரங்கில் எந்தப் படம் ஓடினாலும், இந்தப் பாடலை ஒளிபரப்பினார்கள்.

இந்தப் படம் யூடியூப்பில் சுமாரான காப்பியாக இலவசமாக பார்க்க கிடைக்கிறது. எம்.ஜி.ஆரின் பிரபல படங்களில் இதுவும் ஒன்று. இதை ஏன் புது பிரிண்ட் போடவில்லை என்பது ஆச்சர்யம்.

0 பின்னூட்டங்கள்: