நாயகன் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு, மேற்படிப்பாக எலும்பியல் (Ortho) துறையில் படிக்கவேண்டும் என்பது சிறுவயது முதலே பெரிய விருப்பமாக இருக்கிறது. ஆனால், தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவன் விரும்பிய படிப்பு எங்கோ ஒரு மூலையில் இடம் கிடைக்கிறது. அம்மா தனியாக இருக்கிறார். அவரை விட்டுவிட்டு போகமுடியாத நிலை. ஆகையால் அவன் ஊரிலேயே மகப்பேறு மருத்துவருக்கான (Gynaeocology) படிப்புக்கு இடம் கிடைக்கிறது. தற்பொழுது இணைந்து படிக்கவிட்டால், ஒருவருடம் வீணாகிவிடும். அடுத்தவருடம் தேர்வு எழுதி தன் விருப்பமான துறைக்கு மாறிக்கொள்ளலாம் என முடிவு செய்கிறான்.
இளநிலை மருத்துவம் படிக்கும் பொழுதே ஒரு பெண்ணை காதலித்து, அவள் என்ன சொல்கிறாள் என்பதையோ, அவளின் உணர்வுகளை புரிந்துகொள்வதிலோ உள்ள சிக்கலில் அவள் பிரிந்துபோகிறாள்.
பிடிக்காத துறை படிப்பு. அவனோடு அந்த குழுவில் இருக்கும் அனைவருமே பெண்கள். சீனியர் பெண்களும் வெறுப்பேற்றுகிறார்கள். பெண் நோயாளிகளை சோதனை செய்வதில் இவனுக்கு ஒவ்வாமை இருக்கிறது. நர்சு, சக மாணவிகளின் உதவியுடன் நாட்களை கடத்துகிறான். துறைத்தலைவர் இவனுடைய அணுகுமுறையைப் பார்த்து கண்டிப்புடன் நடந்துகொள்கிறார்.
இதற்கிடையில் நாயகியான சீனியர் பெண் இவனுடன் சகஜமாக பழக, அதை காதல் என புரிந்துகொள்கிறான். அவளுக்கு வேறு ஒருவருடம் நிச்சயம் ஆகியிருக்கிறது. நாயகனின் அண்ணன் ஒரு மருத்துவர். அவன் செய்யும் ஒரு பெரிய தவறால், இவனுக்கு பெரிய சிக்கலாகிறது.
ஒரு வழியாக படிப்பை முடித்தானா? என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****
மருத்துவராக இருந்தாலும், நாயகன் ஒரு சராசரியான மனநிலையில் இருக்கிறான். ஒரு பெண்ணுடன் பழகினாலே காதலாக தான் இருக்கமுடியும் என்ற சிந்தனை. மற்றவர்கள் பேசும் பொழுது காது கொடுத்து கேட்காமல் இருப்பது, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்மையுடன் இருக்கிறான். நாயகனின் அம்மா, நாயகி, அண்ணனின் ’காதலி’ என குறிப்பாக மூன்று பெண்களும், மற்ற பெண்களும் அவனின் வாழ்க்கையை நேர்மறையாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது தான் படமே.
இந்தியாவில் ஆண் மகப்பேறு மருத்துவர்கள் தான் அதிகம். ஆண் தொடுதல் (Male Touch) என்பதை ஒரு மருத்துவர் கைவிடவேண்டும் என சின்ன சின்னதாய் நிறைய விசயங்களை பேசியிருக்கிறார்கள். ஒரு துறை ரீதியாக புரிந்துகொண்டு, கதையிலும், எடுப்பதிலும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருக்கலாம். ஒரு அளவோடு போதும் என வரம்பிட்டு நிறுத்திக்கொண்டார்களோ என தோன்றுகிறது.
ஆயுஷ்மான் குரானா தான் நாயகன். தொடர்ச்சியாக இதுவரை பரவலாக பேசப்படாத கதைகள் என Article 15, Badhaai Ho என தொடர்ந்து நடித்து வருகிறார். நன்றாகவும் நடிக்கிறார். நாயகியாக ரகுல் ப்ரீத்சிங் என மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ”கேங்ஸ் ஆப் வாசேபூர்” புகழ் அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூதி (Anubhuti) தான் இயக்கியிருக்கிறார். அடுத்தப் படம் இன்னும் ஆழமான கதையுடன் வாருங்கள் என வாழ்த்துவோம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment