”மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’
- நாவலில் இருந்து…
அப்பாவை குத்தி, சீக்காளியாக்கி கொன்ற காரி என்ற காளை மாட்டை, மகன் பிச்சி அந்த காளையை அடக்குவதற்காக செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு தனது உறவுக்காரன் மருதனோடு வந்திருக்கிறான். அந்த காளை அந்த ஊரின் ஜமீன்தாரினுடையது. அந்தக் காளையை வாடிவாசலை விட்டு வெளியே வரும் பொழுது, வீரர்கள் யாரும் ஓரமாய் போய்விடுகிறார்கள். அவன் என்ன ஆனான்? காளைக்கு என்ன ஆனது என்பதை மண்ணின் மனத்தோடு சி.சு. செல்லப்பா சொல்லியிருக்கிறார்.
1959ல் வெளிவந்த நாவல். அதன் மொழி இன்னமும் உயிரோட்டமாய் இருக்கிறது. இப்பொழுது இயக்குநர் வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். நாவலுக்கு முன்னும் பின்னும் சேர்த்து ஒரு அருமையான படமாக கொண்டு வந்துவிடுவார். எதிர்பார்ப்போம்.
என்னுடைய பதினெட்டு வயதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஒருமுறை என் நண்பர்களுடன் போயிருக்கிறேன். வாடிவாசல் அருகே முதல் வரிசையில் மாடுபிடிவீரர்கள். அவர்களுக்கு பின்னால் முண்டிக்கொண்டு இரண்டாவது வரிசையில் வேடிக்கைப் பார்க்கப் போன நாங்கள். கொஞ்சம் தள்ளு முள்ளு நடந்தால், முன்வரிசைக்கு நாங்கள் வந்துவிடுவோம். அது தான் நிலைமை. இப்பொழுது நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக மாடுபிடி வீரர்களைத் தவிர மற்றவர்களை வெளியேற்றி, வேடிக்கைப் பார்ப்பதற்கு வசதியாக காலரி கட்டி வைத்திருக்கிறார்கள். நல்ல விசயம்.
இதோ பொங்கல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கான வேலைகளை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?
பக்கங்கள் : 70
விலை : ரூ. 100
வெளியீடு : காலச்சுவடு
0 பின்னூட்டங்கள்:
Post a Comment