வங்கத்தைச் சேர்ந்த சத்யஜித்ரே உலகப்புகழ்பெற்ற இயக்குநர் என பெரும்பாலோர் அறிவார்கள். அவருடைய புகழ்பெற்ற படங்கள் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார். திரைப்பட வாழ்நாள் பணிக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு பெற்றவர் என்கிற பெருமையும் உண்டு.
அவருடைய அப்பா சிறுவர்களுக்காக ஒரு இதழை நடத்தி வந்துள்ளார். அவருக்கு பிறகு சத்யஜித்ரே அந்த இதழை தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அதில் துப்புறியும் நிபுணர் பெலுடா என்ற பாத்திரத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து கதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒரு கதை தான் இப்பொழுது நான் படித்த ”கேங்டாக்கில் வந்த கஷ்டம்”
தனியார் துப்பறியும் நிபுணரான பெலுடா தன் தம்பியுடன் சிக்கிமின் தலைநகர் கேங்டாக் வந்து சேர்கிறார். வந்து சேர்ந்ததும், ஒரு மலைச்சரிவில் ஒரு பாறை உருண்டு காரில் பயணித்த ஒருவர் இறக்கிற செய்தி வந்து சேர்கிறது. அந்த கேஸ் அவரிடமே வந்து சேர்கிறது. அது விபத்தா? கொலையா? கொலை என்றால் யார் செய்தது? எதற்காக செய்தார்கள்? என்பதை நிகழ்ச்சிகளின் போக்கில் சென்று சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் துப்பறிந்து சொல்கிறார்.
துப்புறியும் நிபுணருக்கான கூர்மையான அறிவு, பல துறை சம்பந்தமாக அறிந்து வைத்திருத்தல், சமயோசித பண்பு என்கிற வழக்கமான பல அம்சங்கள் அவரிடம் இருக்கின்றன. ஓரிடத்தில் “தலைவிதி என்று தான் சொல்லவேண்டும். வேறெப்படி இதை எடுத்துக்கொள்வது.” என்றார் பெலுடா என தலைவிதியை நம்பும்படி வசனம் வருவது கொஞ்சம் உறுத்தல்.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் ரேவுக்கு நிறைய பிடிக்கும். அதிலிருந்து ஆர்வமாகி, இப்படிப்பட்ட கதைகளை தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஏதோ குழந்தைகளுக்கு எழுதியிருக்கிறார் என சாதாரணமாய் நினைத்துவிட முடியாது. இந்தக் கதைகளில் இரண்டை அவரே படமாக்கி இருக்கிறார் என்கிறார்கள். இணையத்தில் தேடிப்பார்த்தால், படமாகவும் கிடைக்கிறது. காணொலி கதைகளாகவும் நிறைய கிடைக்கின்றன. அதை லட்சக்கணக்கில் பார்த்திருக்கிறார்கள். கேட்டிருக்கிறார்கள்.
வாசிப்பை நேசிப்போம் குழு சார்பாக இந்தப் புத்தகத்தை பிறந்தநாள் பரிசாக அனுப்பி ரேயின் இன்னொரு பக்கத்தை அறிமுகப்படுத்திய ரம்யா & ரியா அவர்களுக்கு நன்றி.
தமிழில் : வீ. பா. கணேசன்
பக்கங்கள் : 112
விலை : ரூ. 70
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment