> குருத்து: Slumberland (2022) கனவுலக பயணம் American fantasy adventure

December 1, 2022

Slumberland (2022) கனவுலக பயணம் American fantasy adventure

 



கண் திறந்தால்
அடுத்த இரவுக்கு
காத்திருத்தல்
 
கண்மூடினால்
தொலைந்து போன
காட்சிகளுக்குத் தேடல்!
 
-எப்பொழுதோ படித்தது
 
***
 
சுற்றிலும் கடல் பரவியிருக்க, கலங்கரை விளக்கத்தில் அப்பாவும், 11 வயது மகளும் தனியாக வாழ்கிறார்கள். அப்பா தன் பெண்ணுக்கு நிறைய கதைகள் சொல்லி வளர்க்கிறார். ஒரு நாள் வேலைக்குப் போனவர் இறந்துவிடுகிறார். அரசு அந்த பெண்ணை சித்தப்பாவிடம் கொண்டுபோய் சேர்க்கிறது.
 
அவளின் அப்பா சவால்களை எதிர்கொள்ளும், ரகளையான வாழ்வு வாழ்ந்தவர். அவரின் தம்பியோ அவருக்கு உல்டாவாக போரடிக்கிற வாழ்வு வாழ்ந்து தொலைக்கிறார். சித்தப்பாவிடம் ஒட்டமுடியவில்லை. பள்ளியிலும் சக மாணவர்களுடன் ஒட்டமுடியவில்லை.
 
தூங்கியதும் அவள் கனவுலகில் நுழைகிறாள். கனவு புதிய உலகை அறிமுகப்படுத்துகிறது. வண்ண மயமான கனவுகளைத் தருகிறது. சவால்களை உண்டாக்குகிறது. அந்த உலகில் பிளிப்பை சந்திக்கிறாள். அவனோ அவளின் அப்பா அவளிடம் தந்த மேப்பை கேட்கிறான். அந்த மேப் சக்தி வாய்ந்த முத்துக்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும் என்கிறான். அந்த முத்துவை வைத்து கனவில் தன் தந்தையை சந்திக்க முடியும் என நம்புகிறாள். அந்த முத்துக்களை அடைந்தாளா? தன் தந்தையை சந்தித்தாளா? என்பதை கனவுலகம் வழியாக சொல்கிறார்கள்.
 
கனவுலகம் என்பது அதிசயமானது. புதிய புதிய கதைகள். பழகிய மனிதர்கள் வேறு வேறு கதைகளில் வேறு ஆட்களாக வருவார்கள். தமிழ் நாயகர்கள் போல பலருடன் சண்டையிடலாம். பேய் துரத்தும் பொழுது, தலை தெறிக்க ஓடலாம். சில சமயம் ஓட நினைப்போம். ஓட முடியாது. பேய் நெருங்கும் பொழுது, வியர்த்து விறுவிறுத்து முழிப்பு வந்து எழுவோம். அப்பாடா! ஒன்றும் நடக்கவில்லை என நிம்மதியடைவோம். சிறு வயதில் பறப்பது போல எனக்கு அடிக்கடி கனவு வரும். வளர்ந்த பிறகு அந்த கனவு வரவேயில்லை. ஆச்சர்யம்.
 
சிலர் கனவு எல்லாம் தனக்கு வருவதேயில்லை என சொல்லும் பொழுது பெரும் ஆச்சர்யமாயிருக்கும். கனவுகளைப் பற்றிய அச்சம், ஆச்சர்யம் மனித குலத்திற்கு நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ”இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்” என கனவுக்கு மூடநம்பிக்கையில் அர்த்தம் சொல்கிறார்கள். அதனால் இறந்தவர்கள் கனவில் வந்தால் மனிதர்கள் பயந்துவிடுவார்கள். “திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்” என்கிறார்கள். அது என்னவோ உண்மை தான். 🙂
 
கனவு குறித்த ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் நிறைய சுவாரசியமான தகவல்கள் சொல்கிறார்கள். ஆண்களின் கனவில் 67 சதவீதம் ஆண்களே வருகின்றனர். என்ன ஒரு சோகம். பெண்களின் கனவில் பெண்கள் 50 சதவீதம் தான் வருகின்றனர். பாலியல் கனவுகளை 8 சதவீதம் மக்கள் காண்கின்றனர் என்கிறது ஒரு சர்வே.
 
நாம் காணும் கனவுகளில் 50 சதவீதம், நாம் விழித்த ஐந்து நிமிடத்திலேயே மறந்து விடும். அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு 40 சதவீதம் மறந்து விடும். அதிகபட்சம் ஒரு பத்து சதவீதம் தான் நினைவில் நிற்கும். கனவுகளைக் குறிப்பெடுக்க விரும்புபவர்கள் படுக்கையிலேயே பேப்பர் பென்சில் வைத்திருக்க வேண்டும். விழிப்பு வந்ததும் படுக்கையை விட்டு எழும்பாமல், படுத்திருக்கும் நிலையிலேயே எழுத வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 
இந்தப் படம் ஒரு காமிக்ஸ் கதையை எடுத்துக்கொண்டு, படம் எடுத்திருக்கிறார்கள். 1989ல் Little Nemo : Adventures in Slumberland என்றொரு அனிமேசன் படத்தை எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பையன் நாயகனாக வருகிறான். இந்தப் படத்தில் பெண்ணாக மாற்றிவிட்டார்கள்.
கனவுலகு என களம் முடிவெடுத்துவிட்டால், அனிமேசனில் தான் கற்பனையை அருமையாக எடுக்கமுடியும். ஆனால், இப்பொழுதுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் அந்த கற்பனையை சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
 
அந்த சிறுமியாக Marlow Barkley அருமையாக நடித்திருக்கிறார். Aquaman யாக வரும் Jason Momoa கனவுலகில் கலகலப்பாக வரும் நபராக வருகிறார். மனுசன் சமாளித்திருக்கிறார் .
 
நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலேயே கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: