> குருத்து: Wednesday (2022) வெப் சீரிஸ்

December 18, 2022

Wednesday (2022) வெப் சீரிஸ்


Supernatural mystery Comedy horror

பதினாறு வயது நாயகி தான் வெட்னஸ்டே ஆடம்ஸ். தான் படித்தப் பள்ளியில் சேட்டைகள் அத்துமீறியதால், வெளியேற்றப்படுகிறாள். நெவர்மோர் எனப்படும் உண்டு உறைவிட பள்ளிக்கு அவள் பெற்றோர் வந்து சேர்த்துவிடுகின்றனர். அந்தப் பள்ளி என்பது சேவியர் நடத்தும் மியூடண்ட் (Mutant) பள்ளி போல! ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு திறனோடு இருக்கின்றனர்.

”நான் செய்கிற சேட்டையில் அவர்களே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள்” என பெற்றோரிடம் சவால்விட்டு தான் அந்தப் பள்ளிக்கு வருகிறாள். அவள் மக்கு அல்ல! திறமையாய் கத்திச் சண்டை போடுகிறாள். வில் வித்தை தெரிந்தவள். நுட்பமாக துப்பறிகிறாள். இளவயதில் நாவல் எழுதி சாதனைப் படைத்த ஒருத்தியை அந்த சாதனையை முறியடிக்கவேண்டும் என்கிற முனைப்போடு இயங்குபவள். என்ன கொஞ்சம் முசுடு! யாரிடமும் ஒத்துப்போக மறுக்கிறாள்.

அந்தப் பள்ளிக்கும், சராசரி மக்களுக்கும் ஒரு ஒரு வாய்க்கா, வரப்பு தகராறு இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தடுத்து சில கொலைகள் மர்மமான முறையில் நடக்கின்றன. ஏன் இந்த கொலைகள்? என்ன காரணம் என்பதை துப்பறிய துவங்குகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை கலாட்டாகளுடன் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

படத்தில் ஒரு விருந்தில் நாயகி ஆடிய நடனம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதைப் பார்த்து, என்ன என தேடிப்போன பொழுது கிடைத்தது தான் இந்த சீரிஸ். DC காமிக்ஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு நாயகி தான் இவள். அந்த காமிக்ஸிற்கு வெப் சீரிஸ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அவளைச் சுற்றியே எல்லா பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் சீரிஸ்க்கு இருக்கிற இழுவைத் தன்மை இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கிறது. மர்ம (Mystery) படம் என்பதால், இறுதி வரை யார் கொலைகாரர் என்பதை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார்கள்.

அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையுடன் இருப்பதை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தி இருந்தால், இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். நாயகியைத் தவிர மற்றவர்கள் எல்லோரையும் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏன் அவளை அவ்வளவு உம்மாண மூஞ்சியாக காண்பிக்கவேண்டும் என தெரியவில்லை. படத்தில் தன் மாமாவை பார்க்கும் பொழுது மட்டும் முகம் மலர புன்னகைக்கிறாள். அழகாக இருக்கிறது.

இந்த சீரிஸ் நல்ல வெற்றிபெற்றிருக்கிறது. அடுத்தடுத்து சீரிஸ் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் இருக்கிறது. பாருங்கள்.

சீசன் 1 அத்தியாயங்கள் 8

0 பின்னூட்டங்கள்: