> குருத்து: நூல் அறிமுகம் : “அழிந்த பிறகு” – சிவராம் காரந்த் – கன்னட நாவல்

December 6, 2022

நூல் அறிமுகம் : “அழிந்த பிறகு” – சிவராம் காரந்த் – கன்னட நாவல்


”மனிதனின் வாழ்க்கையின் வரவு, செலவு. மனிதன் சமூகத்திற்கு கடமைப்பட்டவனாக இருக்கிறான். அந்தக் கடனிலேயே வளர்கிறான். இறக்கும் போது தான் பெற்றதை விட அதிகமாகத் திருப்பி தராவிட்டால் அவனுடைய பிறவி பயனற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து. பணம் காசு முதலியவை எல்லாம் இந்த நோக்கில் பார்த்தால் மிகவும் அற்பமானவையாகும். ஆனால் அவையும் வாழ்க்கை நடத்துவதற்கு இன்றியமையாது வேண்டிய பொருள்கள் ஆகும்”. – பக். 27.-

– சிவராம் காரந்த், இதே நாவலிலிருந்து…

இந்த கதையை எழுதும் ஆசிரியரே, இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். கர்நாடகாவிலிருந்து பூனே செல்லும் ரயிலில் பயணிக்கும் பொழுது, வயதில் அறுபதுகளில் இருக்கும் கதையின் நாயகரான யசவந்தர் இயல்பாக உதவுகிறார். அதற்கு பிறகு இருவரும் நட்பாகிறார்கள். ஆசிரியர் மும்பை செல்லும் பொழுது, நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் யசவந்தரைப் போய் பார்க்கிறார். உலக விசயங்களை பேசிவிட்டு வருகிறார். யசவந்தருக்கு குடும்பம் இல்லை. குடும்பத்தை விட்டுவிட்டு வனவாசம் போல மும்பையில் தனியனாக வாழ்கிறார். அவரோடு அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் மட்டும் உதவிக்கு இருக்கிறான். இப்படியே ஆறு ஆண்டுகள் கடக்கின்றன.

ஒரு நாள் யசவந்தரிடமிருந்து தந்தி வருகிறது. ஆசிரியர் அங்கு போவதற்குள் அவர் இறந்துவிடுகிறார். பிறகு வீடு வந்து சேரும் பொழுது, அவருக்கு ஒரு பெருந்தொகை (பதினைந்து ஆயிரத்துக்கு மேல்)க்கு டிடி வருகிறது. (இந்தக் கதையின் காலம் தெரிந்தால் தான் இந்த பணத்தின் மதிப்பு புரியும். நாவலில் எங்கும் காலம் ஆசிரியர் குறிப்பிடவில்லை. எழுத்தாளர் சிவராம் காரந்தின் காலம் (1902 – 1997). அவரும் ஐம்பதில் இருப்பதாக ஓரிடத்தில் குறிப்பிடுவதால், கதை ஐம்பதுகளில் நடப்பதாக கொள்ளலாம். 50களில் 15000 என்பது பெரும் தொகை தானே!)

யசவந்தர் வாழ்ந்த காலத்தில் சிலருக்கு தொடர்ந்து மாத மாதம் சிறிய தொகையை அனுப்பி வைத்திருக்கிறார். அதை தன் காலத்திற்கு பிறகும் தொடரவேண்டும் என்ற கோரிக்கையை கடிதத்தில் வைத்திருக்கிறார்.

இவரும் அந்தப் பணியை ஏற்று, அந்த சிலருக்கு பணம் அனுப்பிக்கொண்டு இருக்கும் பொழுது, சம்பந்தப்பட்டவர்களை பார்க்கவேண்டும் என்கிற தேவை வருகிறது. ஆகையால், ஒவ்வொருவரையும் போய் பார்க்கிறார். பேசுகிறார். அதனால் மனநிறைவும் அடைகிறார். சிக்கலை, சங்கடங்களையும் எதிர்கொள்கிறார். சந்தித்த நபர்கள் மூலம் யசவந்தரின் இயல்பை புரிந்துகொள்கிறார். மனிதனின் வாழ்வு குறித்த வரவு செலவை பார்க்கும் பொழுது, யசவந்தர் தான் வாழ்ந்த பூமிக்கு, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வரவு வைத்தாரா, செலவு வைத்தாரா என்பதை ஆசிரியர் சொல்லி முடிக்கிறார்.

குடும்பம் என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் கறாரானவை. அதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதை மீறினால், நிறைய கோளாறுகள் எழுந்துகொண்டே இருக்கும். அதைத் தீர்ப்பதற்குள் தாவு தீர்ந்துபோகும். யசவந்தர் செய்கிற தவறு. குடும்பத்தில் தனது துணைவியார் சிக்கல் செய்கிறார் என.. இரகசியமாக இன்னொரு பெண்ணை தேடி “நிம்மதி” அடைய நினைக்கிறார். உடைமையை பகிர்ந்துகொள்ள குடும்ப விதிமுறை அனுமதிக்குமா? இன்னும் மூர்க்கமாய் அவருடைய நிம்மதியை குலைக்கிறது. அதை தாங்க முடியாமல் வெளியேறிவிடுகிறார். நில உடைமை பின்னணியில் உள்ள குடும்பத்தில் ஜனநாயகம் நொண்டியடிக்கத்தான் செய்யும். குடும்பங்களை ஜனநாயகப்படுத்தாமல், குடும்பம் சிதறுவதை தவிர்க்கவே முடியாது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குடும்பம் சிதறுண்டு பல வருடங்கள் கடந்துவிட்டன. இப்பொழுது குடும்பத்தை ஒட்ட வைப்பதற்கான ஒட்டு வேலைகளை செய்துவருகிறார்கள். ஊருக்கொரு பெண்ணிடம் சல்லாபம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் தன் குடும்பத்தை காப்பாற்ற உயிர் துறக்கிறார். மார்வெல்லின் சக்தி வாய்ந்த நாயகி வாண்டா (Wanda) தன் கற்பனை குடும்பத்தை பாதுகாக்க, எந்த லெவலுக்கும் கீழே இறங்குகிறார். இதெல்லாம் சமீபத்திய அமெரிக்க படங்களில் நிகழ்ந்தவை.

குடும்பத்துக்கு வெளியே, அதாவது சமூகத்தில் எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயகம் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தான் குடும்பத்திலும் ஜனநாயகம் நிலவ முடியும். சமூக வளர்ச்சியில் காலாவதியாகிப்போன நிலவுடைமை குடும்ப அமைப்பான கூட்டுக் குடும்பத்தையே காப்பாற்றுவதற்காக நமது சின்னத்திரை நாடகங்கள் நாள் முழுவதும் படாதபாடு படுகின்றன. நம்முடைய நவீன நியூக்கிளியர் குடும்பம் என்பதை காப்பாற்றுவதற்காகவாவது, புதிய ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்டே ஆகவேண்டும். இல்லையெனில் குடும்பங்கள் சிதறுண்டு போவதை யாராலும் தடுக்கமுடியாது.

நாவலை சித்தலிங்கய்யா மொழி பெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வின்றி படிக்க முடிகிறது. சிவராம் காரந்தின் “சோமன துடி” நாவல் முக்கியமான நாவல் என குறிப்பிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரின் உணர்வுகளை அழுத்தமாக பதிந்திருக்கிறார். அவசியம் படிக்கவேண்டும்.

இந்த நாவலைப் படித்துவிட்டு, சிவராம் காரந்த் யார் என கொஞ்சம் தேடிப்பார்த்ததில்… கன்னடத்தில் முக்கிய ஆளுமையாக இருந்திருக்கிறார். நிறைய நாவல்கள், நாடகங்கள், அறிவியல் கதைகள், சிறுவர்களுக்கான கதைகள், திரைப்படங்கள், சூழலியல் என நிறைய பங்காற்றியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, பத்ம விபூஷண் என பல முக்கிய விருதுகளை வென்றிருக்கிறார். எமர்ஜென்ஸி நிலையை கண்டித்து, பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்பியவர். அரசுக்கு எதிராக பல வழக்குகளை நடத்தினார். அவர் இறந்த பொழுது, கர்நாடக அரசு இரண்டு நாட்கள் துக்க நாளாக அறிவித்தது.

வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ஆசிரியர் : சிவராம் காரந்த்
மொழிபெயர்ப்பு : எம். சித்தலிங்கய்யா
பக்கங்கள் : 232

0 பின்னூட்டங்கள்: