> குருத்து: மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா

December 19, 2022

மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா


ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அங்கு அறிமுகமாக துரித உணவுகள், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் உணவுகள், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவையும், சாப்பிடுவது ஒரு கலாச்சார நடவடிக்கையாக விளம்பரப்படுத்தப்பட்டதும் பிரதான காரணம். அந்த ஆவணப்படத்தில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க செய்தியைச் சொன்னார்கள் - உலகின் வேறெந்த நாட்டையும் விட அமெரிக்காவில் டைப் 1 மற்றும் சில நேரங்களில் டைப் 2 நீரிழிவாளர்களுக்கு தவிர்க்க முடியாத மருந்தான இன்சுலினின் விலை மிக மிக அதிகம் என்பது.


ஒரு மாதத்திற்கு தேவையான இன்சுலின் வாங்க இந்திய ரூபாயின் மதிப்பின் படி 80,000இல் இருந்து ஒரு லட்சம் வரை ஆகிறது. அதாவது ஒரு சராசரி அமெரிக்கனின் மாத சம்பளத்தில் 60% மேல் வெறும் இன்சுலின் வாங்கவே செலவாகிறது. நம்மூரில் இன்சுலின் விலை எவ்வளவு தெரியுமா? ரத்தத்தில் உடனடியாக வேலை செய்யும் short-acting இன்சுலினான அக்டிராபிட் போன்றவை - உங்களுக்கு மாதத்திற்கு 4-6 தேவைப்பட்டால் - சராசரியாக மாதத்திற்கு ரூ 600-900 ஆகும். (அரசு மருத்துவமனைகளில் இலவசம்.) எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். (Long acting இன்சுலினான வைலி கம்பெனி தயாரிக்கும் லாண்டஸ் தான் உலகம் முழுக்க விலை மிக அதிகம். அதன் அரசியல் ஒரு தனி கதை.) இந்த ஆவணப்படத்தில் இன்சுலின் வாங்க வழியில்லாமல் கிட்டத்தட்ட தற்கொலை பண்ணிக்கொண்ட ஒருவரைப் பற்றி சொன்னார்கள்.

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பெரிய குடும்பம். வாடகை வீடு. இவருடைய வருமானத்தையே நம்பியிருக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் செலவுகள் ஒரு முறை அதிகமாக அவரது கையிருப்பு பணம் முதல் வாரத்திலேயே காலியாகி விடுகிறது. எல்லா பில்களையும் கட்டி வாடகையையும் செலுத்தி விடுகிறார். இன்சுலின் வாங்க பணமில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான மெடிக்கல் இன்சுஷரன்ஸ் திட்டங்களின் கீழ் இன்சுலின் வாங்க முடியாது. வேறுவழியின்றி இன்சுலினே போட்டுக்கொள்ளாமல் இருக்கிறேன், டயட் மூலம் பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுக்கிறார். ஒரு மாதத்தில் சர்க்கரை அளவு 500, 600, 800 என எகிறிக் கொண்டு போக ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகமாகி கீட்டோ அஸிடோஸிஸ் வந்து கோமா நிலைக்குப் போய் செத்து விடுகிறார். தங்கள் மகன், தங்கள் அப்பா, தன் கணவன் இப்படி குடும்ப செலவுக்காக தன் உயிரையே பணயம் வைத்த விசயம் அவர் சாகும் வரை தமக்குத் தெரியாது என அவர்கள் நேர்முகத்தில் கவலையுடன் சொல்கிறார்கள். இன்சுலின் வாங்க பணமில்லாமல் இவரைப் போல டயட் மூலமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயலும் மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் அதிகமாகி வருவதாக சொல்லுகிறார்கள். நிறைய பேர் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்களாம். என்ன செய்வது எனத் தெரியாமல் பலர் தவித்து நிற்கிறார்கள். அவர்கள் மாதம் ஒருமுறை மருந்து கம்பெனிகளின் வாசலில் போய் பதாகைகளுடன் போராடுகிறார்கள்.

ஒரு பெண் தன்னுடைய மருத்துவர் தனக்கு ஒரு வருடத்திற்கு தேவையான இன்சுலினை இலவசமாகத் தந்துவிட்டதாக, அது தனக்கு ஒரு வருட ஆயுளைத் தந்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். அந்த இன்சுலினானது அண்மையில் இறந்து போன ஒரு நீரிழிவு நோயாளியின் சேமிப்பில் இருந்தது. நோயாளியின் குடும்பத்தார் மருத்துவரிடம் ஒப்படைக்க அவரோ இவரைப் போல இன்சுலின் வாங்க பணமில்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். இப்படி இன்சுலினை கடன்பெற்று உயிரை நீட்டிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த பெண் தானும் தனது கணவனும் நீரிழிவாளர்கள் என்பதால் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லுகிறார்.

இன்சுலினின் விலை மிக அதிகமாக போனதற்கு மருந்து வணிகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி தான் காரணம் என்கிறார்கள். ஏன் இவ்வளவு விலையென்றால் இருவரும் பழியை இன்னொருவர் மீது சுமத்தி தப்பிக்கிறார்கள். அரசாங்கம் இவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப் பார்த்தால் பெரும் தொகையை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கொடுத்து அவர்களுடைய கையைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் மோசமான விளைவு இது என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கட்டற்ற சந்தையின் ஒரு முக்கிய பிரச்சினை அது ஆளும் அரசை விட, மக்கள் விட அதிகாரம் படைத்ததாக மாறி, மக்களின் உயிரை உறிஞ்சிக் கொல்லும் உரிமையைப் பெற்றுவிடுகிறது என்பது.

இன்சுலின் ஒரு காலத்தில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் வரமாகத் தோன்றி இன்று அமெரிக்கா போன்ற தேசங்களில் சாபமாகி விட்டது. இப்போது அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி 24 மணிநேர உண்ணாநோன்பு டயட்டை மேற்கொண்டு, சாப்பிடும் ஒருவேளையின் போதும் காய்கறி, மாமிசம் போன்ற மாவுச்சத்து இல்லா உணவை எடுத்துக்கொள்வது. இப்படிச் செய்து இன்சுலின் அளவை மிகவும் குறைவாக எடுத்துக்கொண்டு செலவை வெகுவாக குறைக்க முடியும். ஆனால் எத்தனை பேருக்கு அந்த தெளிவும் கட்டுப்பாடும் உண்டு?

இந்தியாவில் மருந்து தயாரிப்பு, விற்பனை நிறுவனங்கள் ராட்சஸ வளர்ச்சி பெற்று, அரசைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இன்னும் பலம் பெறவில்லை. இங்கு நிறைய அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இன்சுலின் போன்ற மருந்துகள் இலவசம். ஆனால் எதிர்காலத்தில் இந்த மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் சேர்ந்து அரசியல்வாதிகளுக்கு நிதியளித்து அரசு மருத்துவமனைகளையும் சிறுக சிறுக மூட வைப்பார்கள். நாம் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்து அதன் மூலம் தனியார் மருத்துவமனை செலவுகளை, மருந்து செலவுகளை பார்த்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளை இதே போல எகிற வைத்து, அவற்றை மட்டும் காப்பீட்டின் கீழ் வராமல் பார்த்துக் கொண்டு மக்களை சாகடிப்பார்கள். மருத்துவம் முழுக்க கட்டற்ற பொருளாதார சந்தையின் கீழ்வரும் அன்று இந்தியாவிலும் மருந்து நிறுவனம், விற்பனையாளர்கள், மருத்துவமனை, காப்பீட்டு நிறுவனங்களின் வலைப்பின்னல் தோன்றி நம் மென்னியைப் பிடிப்பார்கள். அன்று அமெரிக்காவைப் போல மெட்டொபொலிக் நோய்கள் இங்கு அதிகமாகி முக்கிய மருந்துகளுக்காக மாதச் சம்பளத்தில் 60% செலுத்துகிற நிலைமைக்கு மக்கள் தொகையில் பாதி பேர் ஆட்படுவார்கள். சில பத்தாண்டுகளில் இங்கு அந்நிலை வந்துவிடும்.

நான் பயமுறுத்தும் நோக்கில் சொல்லவில்லை - தனியார்மயமாக்கலின் சியர்கெர்ல்ஸ், சியர்பாய்ஸுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன்.

- பிலாஷ் சந்திரன்,
எழுத்தாளர்.

0 பின்னூட்டங்கள்: