> குருத்து: My wife is a gangster (2001)

December 4, 2022

My wife is a gangster (2001)


சிறுவயதில் வறுமை காரணமாக அக்கா, தங்கை தனித்தனியாக பிரிகிறார்கள். தங்கையான நாயகியை ஒரு மாபியா தலைவன் எடுத்து வளர்க்கிறான். இப்பொழுது அவளுக்கு கீழே 50 பேர் வரை வேலை செய்கிறார்கள். டெரர் பீஸ் தான்.


இப்பொழுது வலுவான இடத்தில் இருப்பதால், சிறுவயதில் தன்னை விட்டு பிரிந்து அக்காவை தேடிக்கொண்டே இருக்கிறாள். ஒரு நாள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் அவளுக்கு ஏதோ ஒரு வியாதியால் தன் வாழ்வின் இறுதி மாதங்களில் இருக்கிறாள்.

அக்காவிற்கு திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது பெரும்விருப்பமாக இருந்திருக்கிறது. அது நிறைவேறா ஆசையாகிவிட்டதால், தன் ஆசையை தன் தங்கை மூலம் நிறைவேற்ற பேசுகிறாள். அவளும் கடைசி ஆசை என்பதால் நிறைவேற்றுகிறேன் என சொல்கிறாள்.

அங்கிருந்து துவங்குகிறது நகைச்சுவை கலாட்டா. மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஒரு அப்பா, அம்மாவை செட்டப் செய்கிறார்கள். திருமணத்தின் பொழுது மாபியா எதிர்கோஷ்டி கலாட்டா செய்கிறது. சமாளிக்கிறார்கள். அந்த மணமகன் ரெம்ப அமைதியான, அன்பான ஆள். அக்கா தன் தங்கை குழந்தைகள் பெற்று கொள்ள ஆசைப்படுகிறாள். அதற்கும் ஏக கலாட்டா.

பிறகு என்ன ஆனது என்பதை சீரியசாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
*****

ஒரு பக்கம் நாயகியின் மாபியா கும்பல். இன்னொரு பக்கம் இவர்களோடு போட்டி போடும் இன்னொரு மாபியா கும்பல். இரு குழுக்களும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், மோதிக்கொள்கிறார்கள். இப்படி சீரியசாக போய்க்கொண்டிருக்கும் பொழுதே, மாப்பிள்ளை, கல்யாணம், கர்ப்பம் என கலாட்டாவும் செய்திருக்கிறார்கள். நன்றாக வந்திருக்கிறது. நாயகியிடம் உள்ள அடியாட்களும் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்கள். கொரிய படங்களில் உணர்ச்சியையும் கொஞ்சம் சரியான விகிதத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.

பெரிய பட்ஜெட் படமில்லை. சின்ன பட்ஜெட் படமாகத்தான் இருக்கிறது. பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு பிறகு இரண்டு பாகங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். எல்லாருமே சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இணையத்தில் எங்கும் இல்லை. யூடியூப்பில் ஒருவர் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் வலையேற்றியிருக்கிறார். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: