> குருத்து: பிரயாண நினைவுகள்

December 7, 2022

பிரயாண நினைவுகள்


தமிழகத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவதின் முன்னோடி என இவரை சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அண்ணாமலை கருப்பன் (ஏ.கே. செட்டியார் என அழைக்கிறார்கள்.) கருப்பன் மிக அருமையான பெயர். அதைச் சொல்லியே இனி அழைப்போம்.


பழைய ஆள். அதனால் எழுத்தும் கொஞ்சம் போரடிக்கும் என நானாக நம்பிக்கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் படித்ததும், சே! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என வருத்தப்பட வைத்துவிட்டார். நறுக்கென்றும், கொஞ்சம் கேலியோடும், நகைச்சுவையோடும், வரலாற்று கண்ணோட்டத்துடனும் அருமையாக எழுதுகிறார்.

இந்தத் தொகுப்பில் உலகநாடுகள், இந்தியா, தமிழ்நாடு என 12 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சிலதை மட்டும் பகிர்கிறேன். இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை 1940களில் என புரிந்துகொள்ளுங்கள்.

1. பிரான்சு : நம்ம ஊர் பேருந்துகளில் இப்பொழுதும் வல்லவனுக்கு இருக்கை கிடைக்கும் என்பது தானே வழக்கம். பிரான்சில் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு அங்குள்ள எந்திரத்தில் டோக்கன் எடுத்துக்கொள்கிறார்கள். நாம் பத்தாவது ஆளாக இருக்கிறோம் என்றால்… ஒரு பேருந்து வருகிறது. அதில் பத்து பேருக்கு இடம் இருக்கிறது என்றால் பத்து பேரும் ஏறலாம். ஐந்து பேருக்கு தான் இடம் என்றால், முதலில் வந்த ஐந்து பேர் தான் ஏறமுடியும். அந்த டோக்கனை கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். அருமையான முறையாக இருக்கிறதே!

2. ஜெர்மனியில் 1920களில் ஒரு பெரிய மிருக காட்சி சாலையில் விலங்குகளோடு, சில சீனர்களையும், 25 இந்திய ஆண், பெண்களையும் கூண்டில் பார்வைக்காக வைத்திருந்தார்களாம். இந்திய தலைவர்கள் தலையிட்டு விடுதலையடைய செய்திருக்கிறார்கள் என சொல்கிறார். அட கொடுமைக்காரங்களா!

3. செஞ்சிக்கு பயணம் செல்லும் வழியில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் இட்லி நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டு அங்கு போகிறார். பிரமாணர் சாப்பிடும் இடம், பிரமாணரல்லாதவர் சாப்பிடும் இடம் என்ற போர்டுகள் காணாமல் போனதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். பெரியாருக்கு நன்றி சொல்கிறார்.

4. காந்தி ஒருமுறை கன்னியாகுமரிக்கு போயிருக்கிறார். விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை அமைத்திருக்கிறார்கள். அங்கு காந்தியை அழைத்திருக்கிறார்கள். வாசகசாலைக்கு அடுத்த கட்டிடம், ஒரு விவேகானந்தா காபி கிளப். காந்தி காபி கிளப்பிற்குள் நுழைந்துவிட்டாராம். கடைக்காரருக்கு ஒரே குழப்பம். காந்தி ஆட்டுப்பால் தானே சாப்பிடுவார். காபி குடிக்கமாட்டாரே! என சிந்திக்கும் பொழுதே, அவர் தவறுதலாக வந்ததை உணர்ந்து, உடனே வெளியே போய்விட்டாராம்.

5. வெளிநாட்டில் ஒரு ஹோட்டலில் தங்குகிறார். காசை கொஞ்சம் மிச்சம் பிடிக்க வெளியில் சாப்பிடுகிறார். ஆனால் பில்லில் காலை உணவுக்கு 55 காசு என சார்ஜ் செய்திருக்கிறார்கள். என்னங்க? என விளக்கம் கேட்டால், இங்கு தங்கினால், இங்கு தான் காலை உணவு சாப்பிடவேண்டும் என விதி வைத்திருக்கிறோம் என பதில் சொல்லியிருக்கிறார்கள். சரி போகட்டும். டிபன் 50 காசு தானே! ஏன் 55 காசு? என கேட்டால், அந்த ஐந்து பைசா சர்வீசுக்கு 5 காசாம். டென்சனாயிட்டார்.


1911ல் பிறந்த கருப்பன் அவர்கள், படிப்புக்காக ஜப்பானுக்கும், பிறகு அமெரிக்காவிற்கும் பயணம் செய்திருக்கிறார். காந்தியைப் பற்றி ஆவணம் படம் எடுப்பதற்கு பல நாடுகள் பயணித்திருக்கிறார். வெற்றிகரமாக கொண்டும் வந்திருக்கிறார். ஆனால் அப்பொழுது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்ததால், திரையரங்கு முதலாளிகள் பயந்துகொண்டு வெளியிடவில்லையாம். பிறகு ”சுதந்திரம் அடைந்த” பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். பிறகு இந்த ஆவணப் படம் எங்கு போனது என தெரியாமல் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பிறகு கண்டுப்பிடித்தும் இருக்கிறார்கள். அந்த கதையை சொன்னால் நீண்டு விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்பொழுது யூடியூப்பில் பார்க்க கிடைக்கிறது.

- பக்கங்கள் 61

0 பின்னூட்டங்கள்: