> குருத்து: முதல் ஆசிரியர் நாவல்

December 19, 2022

முதல் ஆசிரியர் நாவல்


வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து ஆட்சி செய்த சோவியத் ரசியா. புரட்சி நடந்து ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும், அதிகாரத்தை இழந்த பிற்போக்கு கும்பல்கள் ஏகப்பட்ட தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.


ஏற்கனவே ஜார் மன்னன் ஆண்டு கொண்டிருந்த பொழுது, ரசியா கல்வி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கி இருந்தது. எல்லோருக்கும் உடனடியாக கல்வி தரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.

1924-ஆம் ஆண்டு. சோவியத்தின் கீர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்தில் இருந்தது குர்கூரெவு என்னும் சின்ன ஊர். வறுமையில் வாடுகிற பல நாடோடி குடும்பங்கள் அங்கே வசித்தனர்.

அங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட துய்சேன் வந்து சேருகிறார். அவர் இளம் கம்யூனிஸ்டு கழகத்தை சேர்ந்த இளைஞர். முன்பு பஞ்சத்தில் ஊரை விட்டு சென்றவர், இப்பொழுது பள்ளி ஆசிரியராக வந்து சேர்கிறார்.

மக்களிடம் போய் பேசிப் பார்க்கிறார். அறியாமையில் இருந்த மக்கள் அவரை சட்டை செய்யவில்லை. குழந்தைகளை அவர்கள் விவசாய வேலைகளில் உதவிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு குன்றின் மீது சிதிலமடைந்த ஒரு குதிரை லாயத்தை சரி செய்து பள்ளிக்கூடமாக மாற்றுகிறார். சிறுவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். சோவியத் உத்தரவைக் காண்பித்து, பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சிறுவர்களை அழைத்து வருகிறார்.

துய்ஷேனும் முறையாக கற்ற ஆசிரியர் இல்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்க மட்டுமே தெரிந்தவர். தனக்கு தெரிந்ததை பிள்ளைகளுக்கு கற்றுத்தந்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரை இயக்குகிறது. முதல் தலைமுறையாக படிக்கும் அந்த குழந்தைகளிடம் இனிமையாகவும், பொறுமையாகவும் பழகுகிறார். அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

இப்படி செல்லும் பொழுது, பெற்றோரை இழந்து, தன் உறவுக்காரர்களிடம் வளர்ந்து
வரும் ஒரு இளம் பெண்ணை ஒரு கிழவனுக்கு கட்டி வைக்க, முயல்கிறார்கள். ஆசிரியர் தடுத்தும், அவரை கடுமையாக தாக்குகிறார்கள். சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்கிறார். உயர்படிப்புக்கு நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு என்ன ஆனது என்பதை நெகிழ்வான சம்பவங்களுடன் நாவல் முடிவடைகிறது.

இப்படி பல லட்சக்கணக்கான ஊழியர்களின் தியாகத்தில் எழுந்தது தான் சோவியத் சமூகம். அதற்கு பிறகு கல்வியிலும், விளையாட்டிலும், பொருளாதாரத்திலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், என அனைத்து துறைகளிலும் பெரிதாய் வளர்ந்து நின்ற முதலாளித்துவ நாடுகளை எல்லாம் வந்து பார் என்றது வரலாறு.

ஆசிரியர்கள் எப்பொழுதும் போற்றத்தக்கவர்கள் தான். கடந்த காலங்களில் பின்தங்கிய கிராமங்களில் வெளியில் இருந்து வந்து கல்வியுடன் சமூக விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு தந்தவர்கள் ஆசிரியரகள் தான். அப்படி ஒரு ஆசியரைப் பற்றிய நாவல் தான் இது.

நம் நாட்டில் கல்வியின் சமகாலம் என்பது சிக்கலானதாக இருக்கிறது. அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறார்கள். காசிருப்பவர்கள் மட்டுமே இனி படிக்கலாம் என நிலையை இன்னும் சில ஆண்டுகளில் எட்டிவிடுவார்கள் அதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்திவருகிறார்கள். நாம் விழிப்போடு இருந்து, போராடினால் தான் அனைவருக்கும் கல்வி என்பதை பாதுகாக்கமுடியும்.

சோவியத் நூல்களில் புகழ்பெற்ற நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நாவலை The First Teacher என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் யூடியூப்பில் இலவசமாக காணக்கிடைக்கிறது. பாருங்கள்.

இன்றைக்கும் திருமண, பிறந்தநாள் என்றால் இந்தப் புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். அருமையான நாவல். படியுங்கள்.

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் : பூ. சோமசுந்தரம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80

0 பின்னூட்டங்கள்: