> குருத்து: சொந்தச் சிறைகள் – அப்துல்ரகுமான்

December 6, 2022

சொந்தச் சிறைகள் – அப்துல்ரகுமான்


கவிஞர் அப்துல்ரகுமானின் கவிதைகளை விட கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நெருக்கமானவை. இந்த தொகுப்பில் ஜூனியர் விகடனில் வெளிவந்த கட்டுரைகளையும், இன்னும் சில கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.


”மரம் என்பது உயர்திணை” –தலைப்பில்… மரங்கள் மனிதன் பிறந்ததிலிருந்து இறந்தது வரை துணைக்கு வருவதை ஒவ்வொன்றாக அடுக்குகிறார். ஒவ்வொரு மரமும் எத்தனை விதமாய் பயன்படுவதையும் பட்டியலிடுகிறார். திடீரென மரத்தையும் மனிதனையும் ஒப்பிட ஆரம்பிக்கிறார். மரம் வரவு. மனிதன் செலவு என்கிறார். மரம் கொடுப்பதற்காகவே கைகளை நீட்டுகிறது. மனிதன் வாங்குவதற்காகவேக் கைகளை நீட்டுகிறான். மரம் வானத்தை நோக்கி வளர்கிறது. மனிதன் புழுதியிலேயே புரள்கிறான். மனிதன் உயர்திணையாம். மரம் அஃறிணையாம் என முடிக்கும் பொழுது தலை குனிவதை தவிர எதையும் சொல்ல முடிவதில்லை.

”சொந்தச் சிறைகள்” தலைப்பில் சுதந்திரத்தைப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் விரும்புவதில்லை என தொடங்குகிறார். என்ன இப்படி சொல்றாரே! என நினைத்தால்… எல்லா தளைகளிலிருந்து விடுபடும் மரணத்தை கொண்டாடவேண்டும். ஆனால் அழுகிறோம். திருமணம் ஆயுள்சிறை. சந்தோசமாய் சிக்கிக்கொள்கிறோம் என்கிறார். பாசம், நேசம் என்பதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பூவிலங்குகள். இரும்பு சங்கிலியை கூட உடைத்துவிடலாம். பூவிலங்கை உடைப்பது கடினம் என்கிறார். சில சிறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம். சில சிறைகள் நம்மை தேர்ந்தெடுக்கின்றன என்கிறார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிறைகளைப் பற்றி கவனமாய் இருங்கள். உங்களுடைய பெருமை எல்லாம் நீங்கள் எந்த சிறையின் கைதி என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது என அதிரடியாய் முடிக்கிறார்.

இப்படிப் புத்தகம் முழுவதும் பல விசயங்களை முன்வைத்திருக்கிறார். நாம் அதைக்கொண்டு அசைபோடலாம். சரி தவறுகளை விவாதிக்கலாம். எது சரியோ அதை அள்ளிக்கொள்ளலாம். அவருடைய ”பித்தன்” தொகுப்பு இன்னும் பிடித்தமானது.

- பக்கங்கள் : 160
- வெளியீடு : நேஷனல் பப்ளிஷர்ஸ்

0 பின்னூட்டங்கள்: