ஜிம் கார்பெட் வேட்டைகாரராக மட்டுமில்லாமல், சூழலியலிலும் அக்கறையுள்ளவராக இருந்திருக்கிறார். ஏழை மக்களையும் நேசித்திருக்கிறார். இன்றைக்கும் அவர் பெயரில் ஒரு வன உயிரியல் பூங்கா உத்தரகாண்டில் இயங்குகிறது.
**
ஒரு புலி ஆட்கொல்லியாக எப்பொழுது மாறுகிறது? பிற விலங்குகளால் கடுமையாக காயம் ஏற்பட்டோ, வயோதிகத்தாலோ பிற விலங்குகளை வேட்டையாட முடியாமல் போகும் பொழுது ’எளிதாக’ சிக்கும் மனிதர்களை வேட்டையாட துவங்குகிறது. மேலும் வேட்டையாடுபவர்களால் தாக்கப்பட்டு ஊனம் ஏற்பட்டால் கூட ஆட்கொல்லியாக மாறுகிறதாம்.
ஜிம் கார்பெட் (1887 – 1955) தனது வாழ்நாளில் 1907 துவங்கி 1938 வரைக்குமான காலங்களில் 1200 மனிதர்களை கொன்று ஆட்கொல்லியாக சுற்றித் திரிந்த 33 புலிகளை (Man eaters) கொன்றுள்ளார். சில ஆட்கொல்லி சிறுத்தைகளையும் கொன்றுள்ளார். அதில் ஒரு சில அனுபவங்களை தொகுத்து ”குமாயுன் புலிகள்” என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜிம் கார்பெட் தனது அனுபவங்களை பெரிய பந்தா இல்லாமல், எதார்த்தமாக பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு புலியும் தன் வாழ்நாளில் பல மனிதர்களை கொன்று தின்றுள்ளது. சம்பாவதி பெண் ஆட்கொல்லி புலி மட்டுமே நேபாளத்தில் 200 பேரையும், இந்தியாவின் குமாயுன் பகுதியில் 234 பேரையும் கொன்றிருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட ஆட்கொல்லி புலிகளை கொன்றால்… அரசு நிறைய பரிசுகளை அறிவித்துள்ளது. ஆகையால், பலரும் கொல்ல கிளம்பியிருக்கிறார்கள். கொன்றும் இருக்கிறார்கள்.
இதில் ஜிம் கார்பெட் கொஞ்சம் தனித்துவமானவர் என அவர் சிந்திக்கும் விதத்தில், அணுகுமுறையில் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் அவர் ஒரு பகுதிக்கு போகவேண்டுமென்றால்… ”முதலில் பரிசுத்தொகை அறிவிப்பை திரும்ப பெறுங்கள். யாரெல்லாம் அந்த பகுதியில் வேட்டையாடுபவர்கள் இருக்கிறார்களோ அவர்களை திரும்பி வர அறிவியுங்கள்” என முன்நிபந்தனை விதிக்கிறார். காரணம் புலியை சுடுகிறேன் என தன்னை சுட்டுவிடுவார்கள் என்ற எதார்த்தமான பயம் இருக்கிறது. இவர் புலியைத் தேடி தன்னந்தனியாக செல்கிறார். தனது ஆட்களை கூட சுமைகளைத் தூக்குவதற்கு தான் பயன்படுத்திக்கொள்கிறார்.
ஆட்கொல்லி புலிகளின் இயல்பு, அதன் மோப்பத்திறன், எங்கு வசிக்கும், எப்பொழுது தாக்கும் என பல நுட்பமான தகவல்களை சொல்லி செல்கிறார். ஆட்கொல்லிகளுக்கு மனிதர்கள் மீது பயமில்லை என்பதால் பகலில் வேட்டையாடுகின்றன. சிறுத்தைகளுக்கு இன்னும் அந்த பயம் போகவில்லை. ஆகையால் இரவில் வேட்டையாடுகின்றன என்கிறார். வேட்டைக்கு போகும் பொழுது, கொஞ்சம் அசந்தால் தன்னையே கொன்றுவிடும் பயமும் எப்பொழுதுமே அவருக்கு இருந்திருக்கிறது. அதை வெளிப்படையாகவும் பதிவு செய்கிறார்.
அக்காவும், தங்கையும் ஓரிடத்தில் புல் நறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்கொல்லி புலி வந்து அக்காவை தங்கை கண் முன்பே இழுத்து செல்கிறது. ”அக்காவை விடு!” என இவள் சத்தம் போட்டுக்கொண்டே பின்னால் ஓடுகிறாள். தூக்கி சென்றுக்கொண்டிருந்த புலி, இவளைத் திரும்பி பார்த்து… திரும்பி இவளை நோக்கி வர, தலைத் தெறிக்க இவள் ஓடுகிறாள். இந்த உயிர்ப் பதட்டத்தில் அவளுக்கு பேச்சுவராமல் போகிறது. ஒரு வருடம் கழித்து, ஜிம் அந்த பகுதிக்குப் போய், அந்த புலியை கொன்ற உடன், அந்த பகுதிக்குப் போய் அந்த பெண்ணிடம் காட்டும் பொழுது, மகிழ்ச்சியில் அவளையும் அறியாமல், ”எங்க அக்காவை கொன்ன புலி செத்துவிட்டது” என பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சத்தமாக பேச துவங்குவது ஆச்சர்யம். தமிழ்ப்படங்களில் இப்படி காட்சி வைத்தது உண்மை தான் போலிருக்கிறது.
ஜிம் கார்பெட் ஒரு வேட்டைக்காரராக மட்டுமில்லாமல், சூழலியலாளராகவும் இருந்துள்ளார். இந்திய கிராமப்புற மக்களுடனும் அவர் நெருக்கமாக இருந்துள்ளார். தான் வசித்த பகுதியில் இருந்த சோட்டி ஹால்தானி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அவர்களை வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பற்றுவதற்கு கிராமத்தைச் சுற்றி மதில் சுவரை எழுப்பியிருக்கிறார். 1925ல் கட்டப்பட்ட இந்த சுவர் இன்றும் மக்களை காக்குகிறது.
ஜிம் எழுதிய இன்னொரு நூலான “எனது இந்தியா” என்ற நூலில் “இவர்கள் ஏழைகள், பட்டினியால் வாழும் லட்சக்கணக்கானவர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடன் தான் இவர்களை நேசிக்கும் நானும் வாழ்ந்தேன். எனவே, என் மரியாதைக்குரிய ‘இந்தியாவின் ஏழை நண்பர்களுக்கு இந்த நூலை சமர்பிக்கிறேன்” என நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சமூக பங்கின் காரணமாக உத்திரகாண்ட் மாநிலத்தில் வன உயிரியல் பூங்காவிற்கு ”ஜிம் கார்பெட் தேசிய பூங்கா” என பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் இயங்கிவருகிறது. “Man eater of Kumaon” என்ற பெயரில் 1948ல் ஒரு படமும், ”The Nature world Man eaters of Kumaon” (1986) என்ற பெயரிலும் படங்கள் எடுத்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் இப்பொழுதும் யூடியூப்பில் கிடைக்கிறது.
புலிகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்துகொண்டே வருவது குறித்து, கவலைப்பட்டு, புலிகளை காக்கவேண்டும் என தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்திய அரசு 1973ல் இந்தியாவின் தேசிய விலங்காக (வங்கப்) புலியை அறிவித்தது. ஜூலை 26ஐ சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடுகிறார்கள். 2006ல் 1411, 2010ல் 1706, 2014ல் 2226, 2018ல் 2967 என புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
ஏகாதிபத்திய நாட்டைச் சார்ந்த நிறுவனங்கள் உலகம் எங்கிலும் காடுகளை கணக்கு வழக்கில்லாமல் அழித்து வருகிறார்கள். எண்பதுகளின் இறுதி தொடங்கி தொண்ணூறு தொடக்கம் வரையிலான நான்கு ஆண்டுகளில் போர்னியோவில் மலேசியாவிற்கு உட்பட்ட பகுதியில் ஒரு மழைகாட்டையே கொன்ற வரலாற்றை எழுத்தாளர் நக்கீரன் “காடோடி’ நாவலில் பதிந்திருக்கிறார். சில பேரை கொன்றாலே ஒரு புலியை ஆட்கொல்லி என அழைக்கலாம் என்றால், ஒவ்வொரு ஆண்டும் இப்படி கணக்கு வழக்கில்லாமல் காடுகளை அழிப்பதன் மூலம், அதைச் சார்ந்த விலங்கினங்களையும், பல்வேறு பருவநிலை மாற்றத்தையும் உருவாக்கி, அதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகளை நிகழ்த்தி வரும் ஏகாதிபத்தியத்தை ஆட்கொல்லி ஏகாதிபத்தியம் என அழைப்பது தானே பொருத்தமானது. என்ன சொல்கிறீர்கள்?
பக்கங்கள் : 176
விலை ரூ. 280
மொழிபெயர்ப்பாளர் : தி.ஜா. ரங்கநாதன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment