> குருத்து: துணிவே துணை (1976)

December 2, 2022

துணிவே துணை (1976)



தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் ஒரு கிராமம். எங்களுக்கு போலீஸ் ஸ்டேசனே தேவை இல்லை என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். வருடங்கள் கடந்த பின்னும் ஒரு புகார் கூட அந்த கிராமத்து மக்கள் தரவில்லை என உளவுப் பிரிவு அறிக்கை தருகிறது.

அவ்வளவு நல்ல ஊரா… நம்ம ஊரில் இருக்கிறது! வாய்ப்பில்லையே என சந்தேகம் வந்து ஒரு சிஜடியை போலிசு துறை அனுப்புகிறது.


ரயிலில் போகும் பொழுது, ஒருவன் கொல்ல முயல்கிறான். அவனிடமிருந்து தப்பினால்… ஸ்டேசன் மாஸ்டர் அறையில் கொலை செய்ய வந்தவனுடைய படத்திற்கு மாலை போட்டு இருக்கிறது. (சொந்த பையன் படத்தை எல்லாம் ரயில்வே அலுவலகத்தில் வைக்க அனுமதிப்பார்களா?) “ அவன் செத்துப்போய் ரெம்ப வருசமாச்சு!” என ஜெர்க் கொடுக்கிறார். பேசி விட்டு வெளியே வந்தால், இன்னொரு ஸ்டேசன் மாஸ்டர் எதிர்படுகிறார். உள்ளே ஸ்டேசன் மாஸ்டரிடம் பேசினேனே என்றால்… ”அவர் ரிட்டைர்டு ஆள். பையன் செத்துப்போன சோகத்தில், அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்” என பீதியை கிளப்புகிறார். இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி தர இதயம் வெடித்து ரத்தம் கக்கி செத்துப்போகிறார்.

இறந்தவரின் தம்பி தான் நாயகன். அவரும் சிஜடி தான். அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டறிய செல்கிறார். எல்லா பீதிகளையும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு கிராமத்தை சென்றடைகிறார். மக்களோ தண்ணீர் கூட தரமாட்டேன் என்கிறார்கள்.

பிறகு மெல்ல மெல்ல துப்பறிந்து, அந்த ஊரில் உள்ள மர்மம் என்ன என்பதை பாட்டு, பைட்டு, ஆள் மாறாட்டம் என எல்லாத்தையும் கலந்துக் கட்டி சொல்லியிருக்கிறார்கள்.
***

துவக்க 20 நிமிட காட்சிகள் மட்டும் சுவாரசியம். மற்றவை எல்லாம் பயங்கர கற்பனை. அப்படி ஒரு கற்பனை கிராமத்தை, அப்படி ஒரு கிராமத்தில் அப்படி ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தை எங்குமே பார்க்க முடியாது. பஞ்சு அருணாச்சலம் கதை வசனம் எழுத, எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருக்கிறார். படம் வந்த புதிதில் செமத்தியாக ஓடியிருக்கிறது. இப்படி ”திரையுலக ஜம்பாவன்கள்” பலரும் லாஜிக்கே இல்லாமல் எடுத்து நிறைய கல்லா கட்டியிருக்கிறார்கள் என்று மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஜெய்சங்கர் ரெம்ப நல்ல மனுசனாக இருந்திருக்கிறார். தன்னைச் சுற்றி, தன்னை நம்பி உள்ள மனிதர்களை எல்லாம் தயாரிப்பாளராக்கி வாழவைத்திருக்கிறார். அதனாலேயே அவர் படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களாகவே இருந்திருக்கின்றன. இந்தப் படம் கொஞ்சம் பட்ஜெட் அதிகம் தான். இறுதிக் காட்சிகளில் ஹெலிகாப்டர் எல்லாம் வருகிறது.

இவருக்கு மாதம் ஒரு படம் என்ற கணக்கில் அதைவிட கூடுதலாகவே சில ஆண்டுகள் தொடர்ச்சியாய் வந்திருக்கின்றன. சில சமயங்களில் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து வெளியிட்டதால், இவரை Friday Hero எனவும் அழைத்திருக்கிறார்கள். சிஐடியாகவும், போலீசாகவும் பல படங்களில் நடித்ததால், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் பெயர் பெற்றிருக்கிறார். முரட்டுக்காளைக்கு பிறகு வில்லனாகவும், குணச்சித்திர பாத்திரங்களும் நடித்தார்.

யூடியூப்பில் தெளிவான பிரிண்டிங்கில் இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: