> குருத்து: March 2023

March 29, 2023

Saakini Daakini (2022)



கதை. போலீஸ் அகாடமியின் பயிற்சியின் பொழுது இரு பெண்கள் முதலில் முட்டி மோதி, பிறகு புரிதலில் நண்பர்களாகிறார்கள். இருவரில் ஒருத்தி பப்பை எல்லாம் பார்த்தேயில்லை என்கிறாள். இவர்களும் ஆர்வமாக வெளியே வர அனுமதிவாங்கி, பப்புக்கு வருகிறார்கள். நடுநிசி வேளையில் வீடு திரும்பும் பொழுது, ஒரு இளம்பெண் இவர்கள் இருவரையும் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணை காரில் கடத்துகிறார்கள். முயன்றும், அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.


ஒருவர் கடத்தப்பட்ட பிறகு வருகிற ஐந்து மணி நேரங்கள் என்பது முக்கியமான நேரங்கள் (Critical Hours). அதற்குள் கடத்தப்பட்டவர்களை மீட்டுவிடவேண்டும். இல்லையெனில் சிரமம் என பாடத்தில் படித்திருப்பார்கள். அதனால், உடனடியாக போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் தெரிவிக்கிறார்கள். அவர்களோ வழக்கம் போல அசமந்தமாய் இருக்கிறார்கள். வேறு வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இருவருமே தங்கள் கற்றதை வைத்துக்கொண்டு, விசாரித்து, விசாரித்து, கடத்திய பெண்ணை கண்டுபிடித்தும் விடுகிறார்கள்.

அங்கு அந்த பெண் மட்டுமல்ல! நிறைய இளம்பெண்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடத்திய ஆட்களோ ஒரு மாபியா கும்பலாக இருக்கிறது. எதற்காக இளம்பெண்கள் கடத்தப்பட்டார்கள்? அந்த பெண்களை அவர்கள் மீட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

****

இரண்டு கத்துக்குட்டிகள். தன்னைப் போல ஒரு இளம்பெண் கடத்தப்படுவதைப் பார்த்து பதைப்பதைத்து ஒரு மனிதாபிமானத்துடன் மல்லுக்கட்டுவதை உணர்வுபூர்வமாகவும், காட்சிகளில் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

கற்பது வேறு. நடைமுறை வேறு என்கிற முரண்பாட்டை அவர்கள் உணரும் இடம் முக்கியமான இடம். பெண்ணை கடத்தி சென்றுவிட்டார்கள் என இவர்கள் பதைபதைப்புடன் வந்து சொல்லும் பொழுது, அங்கிருக்கும் ஒரு போலீசு அதிகாரி ”ஒரு பெரிய வழக்கு ஒன்று இருக்கிறது. என்னவென்று உடனே பாருங்கள் என மேலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. மேலிட உத்தரவு ரெம்ப முக்கியம்” என சொல்லி வேகமாக கிளம்பி செல்வார்.

நம்மூரில் எளிய மக்களின் புகாரை போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்வதே பெரிய போராட்டம் தான். புகார் கொடுப்பது ”பெரிய இடம்” என்றால் புகாரை பதியமாட்டார்கள். பல சமயங்களில் போலீசை வழக்கை பதிய வைப்பதற்கே, ஒரு வழக்கறிஞரை பார்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்காடி உத்தரவு வாங்கி வரவேண்டியிருக்கும். அப்பவும் போலீசு உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்கமாட்டார்கள். ”உங்க உத்திரவை மதிக்க மாட்டேங்கிறாங்க!” என திரும்பவும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும். இப்படி பல ஆயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்பது தனிக்கதை. ஆனால், அதிகாரத்தில், ஆட்சியில், பணம் படைத்தவர்களுக்கு போலீசில் கிடைக்கும் மரியாதை எப்போதும் தனிதான்.

கத்துக்குட்டிகள் இந்த உண்மையை, எதார்த்தத்தை பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே கற்றுக்கொள்வார்கள். பிறகு அதுவே பழக்கமாகிவிடும். பிறகு அந்த உயரதிகாரியை போலவே ”சாமர்த்தியமாக” நடந்துகொள்வார்கள்.

மற்றபடி, கமர்சியலான படம். Midnight Runners என்கிற தென்கொரிய படம் 2017ல் வெளிவந்து வெற்றிபெற்றது. அந்த கதையை முறையாக அனுமதி பெற்று (இதெல்லாம் மிகவும் நல்ல விசயம்) கதையில் கொஞ்சம் நம்மூருக்கு தகுந்த மாதிரி எடுத்திருக்கிறார்கள். அங்கு இரண்டு ஆண்டுகள். இங்கு இரண்டு பெண்கள். அது கூட நல்ல மாற்றம் தான். இருப்பினும் கொரிய படங்கள் உணர்வுப்பூர்வமாக எடுப்பதில் கில்லாடிகள். இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங் என பட்டது.

இதில் ரெஜினாவை விட, நிவேதிதா தாமஸ் நல்ல ஸ்கோர் செய்கிறார். நிவேதிதா சாப்பாட்டு ப்ரியை. அதனால் அந்த சட்னியை வைத்து கண்டுபிடிப்பது நல்ல நகைச்சுவை. பொருத்தமாகவும் இருந்தது. தெலுங்கில் எடுத்து, தமிழ், மலையாளம் என மற்ற மொழிகளில் டப் செய்திருக்கிறார்கள். தமிழ் படம் போல இருப்பது சிறப்பு.

நெட்பிளிக்சில் இருக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் பாருங்கள்.

March 27, 2023

சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!




அறிவியல் 
சாட் ஜிபிடி (Chat GPT) என்னவெல்லாம் செய்யப்போகிறது ?

சாட் ஜிபிடியைக் குறித்து உலகம் முழுவதும் பேசுகிறார்கள். அது செயல்படும் தன்மையை, வளர்ந்து வரும் விதத்தைக் கண்டு வியந்து பேசுகிறார்கள்..அதன் சாதக பாதகங்களை நிறைய விவாதிக்கிறார்கள். குறுகிய காலத்தில் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்களையும் தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். இன்றைய நான்காம் கட்ட தொழிற்புரட்சி காலத்தில் அறிமுகமாகியுள்ள புதிய தகவல் தொழில்நுட்பம் இந்தளவிற்கு வேகமாக பரவ காரணம் என்ன?

சாட் ஜிபிடியை கடந்த 2022 நவம்பர் 30-ல்தான் அறிமுகப்படுத்தினார்கள். கடந்த இருபது ஆண்டு வரலாற்றில் அறிமுகப்படுத்திய நாள் துவங்கி பரபரவென மக்களிடம் பரவியதில் முதலிடத்தில் உள்ளது. பத்து லட்சம் பயனாளர்களைப்பெற புகழ்பெற்ற பேஸ்புக்கிற்கு பத்து மாதங்கள் தேவைப்பட்டது. அதே அளவில் பயனாளர்களைப் பெற இன்ஸ்டகிராமிற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால் சாட் ஜிபிடிக்கு ஐந்து நாட்கள் தான் தேவைப்பட்டது. இதிலிருந்து மக்களிடம் பரவும் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சாட் ஜிபிடி ” கூகுள் கில்லரா ”?

பில்கேட்ஸ்-மைக்ரோசாப்ட் குழுமத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாட் ஜிபிடியை செல்லமாக ”கூகுள் கில்லர்” என அழைக்கிறார்கள். கூகுள் சாட் ஜிபிடியின் வளர்ச்சியைப் பார்த்து எரிச்சலில் இருப்பதாக சொல்கிறார்கள். நம் தேவைக்கான ஒரு கேள்வியை கூகுளில் பதிவிட்டால்… அதற்கு பொருத்தமான பதில்கள், பதில் தரும் தளங்களை கூகுள் தேடித் தருகிறது. அதற்குள் உள்ளே போய் நம் பதிலை தேடி அடைந்துகொள்ளவேண்டும். கிடைக்கவில்லை என்றால், நமது கேள்வியை வேறு வகையில் கேட்கவேண்டும். அதற்கு தகுந்ததையும் கூகுள் தேடித்தரும்.

ஆனால் சாட் ஜிபிடி அப்படியல்ல! நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதுவே பொருத்தமான பதில்களைத் தருகிறது. நம்மை தேடும் வேலையை சுலபமாக்குகிறது. எனவே பலரும் சாட் ஜிபிடியை நாடுகின்றனர். இதன் காரணமாக கூகுளின் வருமானம் பெரிய அளவில் அடிவாங்கும் என கணக்கிட்டு சொல்கிறார்கள். கூகுளும் சாட் ஜிபிடியைப் போல ஒன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பெயர் பார்ட் (Bard) என பெயர் வைத்திருக்கிறது. இந்த இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறார்கள்.

சாட் ஜிபிடி என்பது என்ன?

சாட் ஜிபிடி என்பது ஒரு மெய்நிகர் ரோபோ. செயற்கை நுண்ணறிவுடன் இது செயல்படுகிறது. “ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்” (ஜெனரேட்டிவ் முன் பயிற்சி மின்மாற்றி) என்ற தொழில்நுட்பம்தான் ஜிபிடி. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பல்வேறு வகையான சாட்பார்ட்கள் உள்ளன. படம் வரைவது, புகைப்படங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகள் உள்ளன. நமது ரயில்வே தளத்தில் ”உங்களுக்கு உதவி தேவையா? என சாட் பாக்ஸ் திரையில் தோன்றுவதை பார்த்திருப்போம். அவற்றில் இது புதிய வரவு.

சாட் ஜிபிடி என்னவெல்லாம் செய்யும்?

இது மனிதர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் மனிதர்களைப் போன்றே பதிலளிக்கிறது. எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்கிறது. சரளமாக உரையாடுகிறது. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறது

உதாரணத்திற்கு ஒரு கதை கேட்டால்… ஒரு கதை தருகிறது. ”நான் இந்தத் துறையில் இருக்கிறேன். எனக்கு ஒரு ராஜினாமா கடிதம் எழுதி தா!” என்றால், உடனே தருகிறது. கவிஞர் நா.முத்துக்குமார் போல ஒரு கவிதையை எழுதிக் கேட்டால் எழுதி தருகிறது. ரோபோ படத்தின் சிட்டியை போல அனைத்தையும் விரல் நுனிக்கு கொண்டு செல்கிறது. கணினி நிரல்களை எழுதுவது, தவறுகளைக் கண்டறிவது போன்றவையும் கூட இந்த மென்பொருள் கருவியால் சாத்தியம். .ஒரு யூடியூப்பர் தான் தயாரிக்கும் ஒரு காணொளிக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல எழுதி தருகிறது. இவை அனைத்தும் சில வினாடிகளுக்குள் தருவது தான் இந்த சிறப்பு.

சாட் ஜிபிடி எப்படிச் செயல்படுகிறது?

முன்னரே கூறியதுபோல இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு மெய்நிகர் ரோபோ. முழுவதும் டெக்ஸ்ட், அதாவது உரை அடிப்படையிலானது. அதனால் பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். ஏற்கனவே இருக்கும் வாக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கான அல்காரிதம்களைப் (Algorithm) பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன.

இதற்கு பயிற்சியளிக்கும்போது, ​​சில கேள்விகள் கேட்கப்பட்டு, வல்லுநர்கள் தரும் பதில்கள் உள்ளன. வழக்கமான பயனர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தும் இது கற்றுக் கொள்கிறது. அந்த பதில் தவறாக இருந்தால், சரியான பதில் உள்ளிடப்படுகின்றன. ஒரு மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கிறது.

தற்போதைக்கு செப்டம்பர் 2021 வரையிலான தகவல்கள் மட்டுமே உள்ளீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அதற்குள் தான் நாம் கேள்வி கேட்கமுடியும். 2023 பொங்கலுக்கு வெளிவந்த வாரிசு, துணிவுப் பற்றியெல்லாம் அதற்கு தெரியாது. சாட் ஜிபிடியை இன்னும் இணையத்தில் இணைக்கவில்லை. வரும் காலங்களில் இணைத்துவிட்டால், நடப்பு நிலவரங்கள் வரைக்கும் தொகுத்து சொல்லும்.

சாட் ஜிபிடியின் முதலீட்டாளர்கள்

அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஈஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. வேறு சில காரணங்களால், இதிலிருந்து இலான் மாஸ்க் விலகினார். அதன் பிறகு பில்கெட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. பிப்ரவரி 2023 வரை இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தொட்டுவிட்டது. எனவே, விரைவில் பில்கேட்ஸ் இன்னும் பத்து மில்லியன் டாலர் முதலீட்டை தரப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சாட் ஜிபிடியின் மொழி

சாட் ஜிபிடியில் இப்பொழுது ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வளர்ச்சியில், உலகின் முதன்மையாக இருக்கும் 20 மொழிகளில் அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது என கணக்கிடுகிறார்கள். எதிர்காலத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மொழி தெளிவாய் தெரிந்திருந்தால் போதும். மற்ற மொழி சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தால் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

எடுத்துக் காட்டாக கூகுளின் ஜி போர்டு என்ற செயலி தமிழில் நான்கு வகையான உச்சரிப்புகளை தமிழில் எழுத்தாக மாற்றி தருவதைப் போல சாட் ஜிபிடி அனைத்து மொழிகளில் மட்டுமின்றி பல வகையான பேச்சு வழக்குகளையும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும்..

சாட் ஜிபிடிக்கு கட்டணம் உண்டா ?

சாட் ஜிபிடி இன்னும் முழுமையாக தயாராகவில்லை. தன்னிடம் உள்ள தரவுகளின் படி, அது பதிலளிக்கிறது. சில பதில்கள் தவறாக உள்ளன என சிலர் சொல்கிறார்கள். எனவே, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே இன்றைய தேதி வரை பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. இதன் வளர்ச்சியில் கட்டணம் விதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சாட் ஜிபிடியின் வளர்ச்சியில் என்ன ஆகும் ?

சாட் ஜிபிடி வேலை வாய்ப்பில் என்னவித தாக்கங்களை உருவாக்கும் என அதனிடமே கேள்விகள் கேட்டதற்கு, சிலவற்றை பட்டியலிட்டு சொன்னது. ஒரு பொருள், சேவை குறித்த வழக்கமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் தகவல்களை வழங்க இது பயன்படும். ஏற்கனவே துவக்க நிலையில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சாட் ஜிபிடியால் இன்னும் துல்லியமாக பதிலளிக்க முடியும்.

சிரி (Siri), அலெக்சா (Alexa) போன்ற மெய்நிகர் உதவியாளர்களுக்கான அடிப்படை தொழில்நுட்பமாக இதைப் பயன்படுத்தமுடியும். முன்பை விட இன்னும் துல்லியமாக இயங்க உதவும். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரு உரையை, செய்திக் கட்டுரையைத் தயாரிக்க உதவும். மொழிபெயர்ப்பில் பெரிய தாக்கத்தை கொடுக்கும். முன்பை விட மேம்பட்ட மொழிபெயர்ப்பு செய்யும் கருவிகள் வந்துவிட்டன. சாட் ஜிபிடி இன்னும் மேம்பட்ட முறையில் தரஇயலும்.

மாணவர்களுக்கு ஒரு மொழியை கற்றுத்தர, பிறமொழிகளை கற்றுத் தர என கல்வித்துறையில் பயன்படும். மனிதர்களின் மனநலம் சார்ந்த பொதுவான ஆலோசனைகளைவழங்கும்.

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சமூக விளைவுகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் 2013-ல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோக்கள் செய்யத் துவங்கிவிட்டன. இன்னும் பத்து ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் (AI) கொண்ட கணிப்பொறிகளே அந்த வேலைகளை செய்துவிடும் என்பதை அறிக்கை சொல்கிறது. அதாவது சுமார் 702 வகை வேலைகள் காணாமல் போகும் என்கிறது.

பல்வேறு வேலைகளில் ரோபோக்களை, தானியங்கி சேவைகளை நிறுவத் தொடங்கிவிட்டார்கள். சென்னை போன்ற நகரங்களிலேயே பல ஷாப்பிங் மால்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கட்டணத்தைக் கணக்கிட்டுச் சொல்வதற்கும், மின்னணு முறையில் பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டாக் (ஃபாஸ்ட் டேக்) என்னும் முறையில் சென்சார்கள் உதவியுடன் தானாக கட்டணத்தை எடுக்கத் துவங்கிவிட்டன. சட சடவென ஆட்குறைப்பும் வேகமாக நடக்கிறது.

பெங்களூரில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தானியங்கி போன் விற்கும் கியோஸ்க்களைத் திறந்துவிட்டன. ரயில்வே நிலையங்களில் குளிர்பானங்களை அடுக்கி வைத்திருக்கும் ஒரு எந்திரத்தில் பணத்தைப் போட்டால் குளிர்பானத்தைத் தள்ளிவிடும். இதைத்தான் கியோஸ்க் என்கிறோம். இனி ஸ்மார்ட் போன் வாங்க உங்களுக்கு என்ன மாடல் வேண்டும் என்று உள்ளிட்டால் போதும். தொகையைக் காட்டும். மின்னணு முறையில் பணத்தைச் செலுத்தினால் விரும்பிய ஸ்மார்ட்போனைப் பெட்டியில் இருந்து வெளியே தள்ளும். ஆக, இனி மெல்ல கடைகளில் விற்பனை பிரதிநிதிகள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

சென்னையில் உள்ள பல துரித உணவுக் கடைகளில் ஆர்டர் செய்து மிஷின்கள் வந்துவிட்டன. இதுநாள் வரை வார இறுதி நாட்களில் இது போன்ற துரித உணவகங்களில் ஆர்டர் எடுக்க பகுதிநேர வேலை பார்க்கக் குவிந்த கல்லூரி மாணவர்கள் இனி என்ன செய்வது என திகைக்கிறார்கள். சென்னையில் மட்டும் பரிமாறுபவர் (Waiter) இல்லாமல் இயங்கும் தானியங்கி ரோபோ ஹோட்டல்கள் சில இயங்குகின்றன.

வங்கி சேவையில் பணம் எடுப்பது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்தையும் ஏடிஎம்மிலேயே செய்துவிட முடிகிறது. அப்படியிருக்க ஏன் வங்கிக்குச் செல்ல வேண்டும்? ஸ்மார்ட்போன் ஆப்களில் பல விதமான வங்கி சேவைகள் வந்துவிட்டன. எனவே,கால ஓட்டத்தில் வங்கிகள் இயங்குவதும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் குறையத் தொடங்குவார்கள். .ஒருவேளை வங்கிகள் இயங்கினாலும் அங்கு பெயருக்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பார். ரோபோக்கள் மற்ற வேலையாட்களின் பணிகளைச் செய்துவிடும் என விவரிக்கிறது ஆக்ஸ்போர்டு ஆய்வு.

இந்நிலையில் “ரோபோக்கள் பல வேலைகளை அழிக்கப் போகின்றன. ஆனால், நம் சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை…” என்று எச்சரிக்கிறது ‘கார்டியன்’ பத்திரிக்கை. 2018-ம் ஆண்டு உலகம் முழுவதிலும் சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’.

வேலைபறிப்பும்தீர்வும்!

மறுகாலனியாக்கத்தை விரைவுபடுத்தும் புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி (Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. 40 கோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்..கடந்த தேர்தலில் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் மோடி. ஆனால் இன்று வரை அது வெற்று அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.

பல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களையே தூக்கியெறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.

முன்னேறிய தொழில்நுட்பம் உண்மையில் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா? இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா? என்றால் ஏகாதிபத்திய முதலாளிகளின் மீமிகு உற்பத்திக்கும், லாப வேட்டைக்கும் தான் பயன்படுகிறது. கருவிகளின் கண்டுபிடிப்புகள், அது யாரின் கையில் இருக்கிறது? என்பதைப் பொருத்துதான் மனித குலத்திற்கு பயன்படுகிறது.

சோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தில் கார்ப்பரேட் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு ” வேலை பறிப்பு”. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் பொழுது தான், வேலையில் இருப்பவர்களை மிரட்டியே சம்பளத்தை குறைக்கவும் முடியும். ஆனால் அதன் உபவிளைவாக ஏகாதிபத்திய முதலாளிகள் ஆசைப்படும் விற்பனை உயர்ந்துகொண்டே செல்லாமல் அதலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் ஏற்படும்.

அறிவியலின் வளர்ச்சியான தானியங்கி தொழில்நுட்பத்தை புறக்கணிக்க முடியாது. ஆனால் மனித குலத்திற்கு எதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். புதிய சாட் ஜிபிடியை அந்த வகையில் பயன்படுத்த பாட்டாளி வர்க்கத்தை பயிற்றுவிப்போம்.

தமிழ்ச்செல்வன்

புதிய ஜனநாயகம் (மா-லெ)
மார்ச் மாத இதழ் 2023

யாத் வஷேம் நாவல் அறிமுகம்



கர்நாடக சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட நாவல்

 

ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் நாடு பிடிக்கும் சண்டையில் ஈடுபட்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலகட்டம்.  முதல் உலகப்போரில்,தொலைத்ததைப் பிடிக்கும் வெறியில் இட்லர் ஜெர்மனியில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தான். ஒவ்வொரு நாடாக படை எடுத்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான்.  சொந்த நாட்டிலும், தான் ஆக்கிரமித்த நாடுகளிலும்  பொதுவுடைமைவாதிகளை, தொழிற்சங்கவாதிகளை, ஜனநாயகவாதிகளை, யூதர்களை என பல லட்சம் பேரை வேட்டையாட  துவங்கினான்.

 

இதில் குறிப்பாக யூதர்களை பெண்கள், குழந்தைகள் என வித்தியாசமே இல்லாமல் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தினான். வதை முகாமில் சோறு தண்ணீர் இல்லாமல் வதைத்தான்.  சுட்டுக்கொன்றான்.  விஷ வாயுவை செலுத்தி கொன்றான்.  இப்படி அறுபது லட்சம் யூதர்களை கொன்று குவித்தான் என வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறது.


அமெரிக்க அருங்காட்சியம்

 

இந்த வரலாற்று கொடூரத்தை,  யூதர்கள் பட்ட கொடும் துன்பத்தை இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இன்றைக்கும் பதிவு செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.  எவ்வளவு பேசினாலும் ஆறாத ரணம் அது. புகழ்பெற்ற நாவல்கள், புகழ்பெற்ற திரைப்படங்கள் நிறைய வந்திருக்கின்றன. 

 

இட்லருடைய காலத்திற்கு முன்பும், இட்லருடைய நெருக்கடி காலக்கட்டத்திலும் தங்களுடைய எல்லா உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என யூதர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏதுமற்றவர்களாய் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.  இந்தியாவிற்கும் சிலர் அப்படி வந்திருக்கிறார்கள்.   இந்தப் பின்னணியில் தான் இந்த நாவல் எழுதப்பெற்றுள்ளது.

 

***


பெர்லின் நினைவகம்

இரண்டாம் உலகப்போர் துவங்குகிற காலகட்டம். ஜெர்மனியில் இளம் விஞ்ஞானியாக பண்புரிகிறார். இடலரின் யூத வெறுப்பின் வேரைத் தெரிந்துகொண்டவர்கள் ஜெர்மனியிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம் பெயர துவங்கினார்கள். மேல்த்தட்டில் அதுவும் விஞ்ஞானத்துறையில் பணிபுரியும் விஞ்ஞானியின் மீது கைவைக்க மாட்டார்கள் என அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் அங்கும் யூதர்களைத் தனிமைப்படுத்துகிறார்கள்.  கைமீறி போய்விட்டது என உணர்கிறார். இருப்பினும் கடைசி நேர முயற்சியில், உயிர் பிழைத்தால் போதும் தனது உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு தனது துணைவியார், இரண்டு மகள்களோடு  கிளம்புகிறார்.


இஸ்ரேல் அருங்காட்சியம்

 

ஒரு வழியாக பக்கத்து நிலமான டச்சின் ஆர்ம்ஸ்டர்டாமில் தஞ்சம் புகுந்து, வாழத் துவங்குகிறார்கள். குறுகிய காலத்திலேயே ஜெர்மனியின்  கொடூரப்படைகள் அங்கும் ஆக்கிரமிக்கிறார்கள்.   மீண்டும் அங்கிருந்தும் தப்பிக்கவேண்டிய நிலை. தன் குடும்பத்தோடு கிளம்புகிறார்கள். குடும்பம் மொத்தமும் கிளம்பிபோய், மாட்டிக்கொள்ள கூடாது என முடிவு செய்து,  தன் ஒன்பது வயது மகளை கையில் பிடித்துக்கொண்டு முன்னே போகிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, அவருடைய துணைவியார் 11 வயது மூத்த மகள், இரண்டு வயது மகனோடு வருகிறார். அப்பாவும், பொண்ணும் தப்பித்துவிடுகிறார்கள். பின்னால் வந்தவர்கள் ஜெர்மன் படைகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

இந்தியாவில் கர்நாடகாவின் பெங்களுருக்கு வந்து சேர்கிறார்.  தொலைந்து போன தன் குடும்பத்தாரை தொடர்புப்படுத்த எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.   இரண்டு ஆண்டுகளில்  அவரும் இறந்துவிடுகிறார்.  பெங்களுருவில் ஒரு குடும்பத்தால் ஆதரவு தரப்பட்டு தங்கள் சொந்த பிள்ளைகளோடு, அந்த சின்னப் பெண்ணும் வளர துவங்குகிறாள்.

 

தனது பால்ய கால நினைவுகள், தங்களது குடும்பத்தைப் பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளுக்கு நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.   எப்படியாவது தன் சொந்த மண்ணில் போய் சேர்ந்துவிடுவோம் என இட்லர் எப்பொழுது வீழ்ச்சியடைவான் என அங்கிருந்து வரும் செய்திகளை கவனித்தப்படியே இருக்கிறாள்.   சோவியத்  ரசியா இட்லரை முறியடித்தது. அதற்கு ரசிய மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். 2 கோடி மனித உயிர்கள்.

 

ஆனால், அவளுக்கு நல்ல செய்தி அவள் குடும்பத்தினரிடம் இருந்து எதுவும் வரவில்லை.  இது தான் நம்ம ஊர். இது தான் நம்ம குடும்பம் என மனதளவில் ஏற்றுக்கொண்டு வாழத்துவங்கிவிடுகிறாள்.   வளர்ந்த பிறகு அந்த வீட்டு பையனையே திருமணம் செய்துகொள்கிறாள். மகன் பிறக்கிறான். வளர்கிறான். நல்ல படிப்பு படிக்கிறான். நல்ல வேலையும் கிடைக்கிறது.

 

அறுபதுகளில் இருக்கும் அவள் தனது குடும்பத்தைத் தேடி தனது கணவனுடன் ஜெர்மனி செல்கிறாள்.  அங்கு கொல்லப்பட்ட யூதர்களைப் பற்றிய செய்திகள் முறையாக சேகரித்து வைக்கப்படவில்லை. ஜெர்மன் அரசு நடந்த கொடுமைகளை மறைக்க முயல்கிறது.  அமெரிக்காவில் சிறப்பாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என தகவல் சொல்கிறார்கள். அங்கும் செல்கிறார்கள். , ”இஸ்ரேலில் உள்ள ”யாத் வஷேம்” போனால் உங்களுக்கு தேவையான செய்திகள் கிடைக்கும்” என்கிறார்கள். 

 

இந்த தொடர்ச்சியான தேடலின் முடிவில் தனது சொந்தங்களை கண்டறிந்தாரா? இல்லையென்றால் அறுபது லட்ச மக்களோடு கொல்லப்பட்டுவிட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****

 

பெங்களூரில் பல மொழி பேசும் மக்கள், பல சாதி, மதங்களை, அதன் பண்பாடுகளை கடைப்பிடிக்கும் மக்கள் என கலந்து வாழும்  சூழலில் வாழ்ந்த யூத பெண்மணி ”இஸ்ரேலின்” அரசியல் சூழலை நினைத்து வருந்துகிறார்.

 

யூதர்கள் தங்களுக்கு என ஒரு சொந்த மண் இல்லையே என தங்கள் கடவுள் ”கை காட்டிய இடம்” என பாலஸ்தீனத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து,  இட்லரிடம் இருந்து தப்பித்த யூதர்கள்  இன்னும் வேகமாய் நிலங்களை ஆக்கிரமித்து 1948ல் ”இஸ்ரேல்” என அறிவித்துவிட்டார்கள்.

 

அறிவித்த நாள் துவங்கி, இன்றைக்கு வரைக்கும்  அந்த மண் கலவர பூமியாகத் தான் இருக்கிறது.  இஸ்ரேல் தனது அரசியல் செல்வாக்காலும், படைப் பலத்தாலும் பாலஸ்தீன மக்களை மேற்கு கரையிலும், காஸா (Gaza) பகுதிக்கும் ஓரமாய் தள்ளிவிட்டுவிட்டார்கள்.  பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த மண்ணை இழந்து பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.  தாங்கள் இழந்த சொந்த மண்ணை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

வரலாற்றில் போரை, இட்லரின் யூத வெறுப்பை வெறுப்பவர்கள் பாலஸ்தீன மக்களை ஒடுக்கும் ”இஸ்ரேலை” ஆதரித்து விட முடியுமா!  எல்லோரும் இணைந்து வாழும் நிலைமை எப்பொழுது சாத்தியப்படும் என்பதை முன்வைக்கிறார்.

 

தொலைந்து போன குடும்பத்தில் அக்காவை மட்டும் கண்டறிகிறார்.  அவர் தன் சொந்தங்களுடன் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ”இங்கேயே இருந்துவிடாலாமே!” என்கிறார்.  இத்தனை ஆண்டுகள் வாழ்க்கையில் இந்தியா தன்னை தன் மகளாக ஏற்றுக்கொண்டுவிட்டது. அது தான் தன்னுடைய சொந்த மண் என உணர்வதாக கிளம்பிவருகிறார்.  ”இட்லர் நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்.  நமக்குள் பிறந்துவிடக்கூடிய இட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது” என முடிக்கிறார்.

இந்தியாவிலும் வலது சாரி வெறுப்பு அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.   வெறுப்பையும், வதந்திகளையும், கவவரத்தையும் ஊதி  ஊதிப் பெருக்கித்தான் மனிதர்களின் ரத்தம் குடித்துத்தான் தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்தார்கள். அமைப்புகளை வளர்த்தார்கள். மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்து ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள். 

பெரும்பாலான மக்களுக்கு எல்லாம் செத்ததற்கு பிறகு தான் சொர்க்கம் என போதிப்பவர்கள். மனுதர்மத்தின் மேலடுக்குகளில் வாழ்பவர்களுக்கு மட்டும் இந்த மண்ணில் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவித்தார்கள்.  இழந்த சொர்க்கத்தை மீட்பதற்குத்தான் அவர்கள் விடாப்பிடியாக போராடுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று ”சொர்க்கத்தை” அடைந்துவிட்டால் , இந்த மண்ணிலேயே பெரும்பாலான மக்கள் நம்மால் ”நரகத்தை” பார்த்துவிடமுடியும்.

அவர்கள் முன்வைப்பது இட்லரின் வெறுப்பு அரசியலைத் தான்.  யூதர்களுக்கு மட்டுமல்ல! மனித குலத்திற்கே ஆறாத ரணம் தான் இட்லரின் வெறுப்பு அரசியலும், படுகொலைகளும்!  பார்ப்பனிய பயங்கரவாதிகளான் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், அதன் அடியாட்படைகளையும் அரசியல் அரங்கிலிருந்து துரத்தும் பொறுப்பு இங்கு மனித நேயத்தை விரும்பும் அத்தனைப் பேருக்கும் முன்னுள்ள கடமையாகும்.

 

ஆசிரியர் : நேமி சந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி

விலை : ரூ. 399

பக்கங்கள் : 360

வெளியீடு : எதிர் வெளியீடு.

March 25, 2023

Johnwick பாகம் 4 (2023)


நாயகன் நிழல் உலகத்தைச் சேர்ந்தவன். நிறைய கொலைகளை செய்தவன். ஒதுங்கி வாழவேண்டும் என நினைத்து வாழ்கிறவனை, ஒருவன் போய் சிக்கல் செய்ய, பழிவாங்குவதற்காக மீண்டும் களத்தில் இறங்குகிறான். அவன் தலைக்கு பெரிய விலை வைக்கிறார்கள். அதனால் அவனை கொல்ல வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகையால் எங்கும் நடமாட முடியவில்லை.


நாயகன் பழைய நண்பனைத் தேடிப் போகிறார். அவனுக்கு அடைக்கலம் தருவது பெரிய ஆபத்து என தெரிந்தும், நட்புக்காக அடைக்கலம் தருகிறார். மோப்பம் பிடித்து, ”டேபிள்” அமைப்பு அங்கேயும் தேடி வருகிறார்கள். பெரிய ரணகளம் ஆகிறது.

நாயகனுக்கு விடுதலை வேண்டுமென்றால், ”டேபிள்” அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு குழு அவனை தன்னில் ஒருவனாக அங்கீகரிக்கவேண்டும். அதற்கு பிறகு டேபிள் தலைமையில் உள்ளவனிடம் ஒத்தைக்கு ஒத்தை போட்டிப்போட அழைத்தால், அந்த தலைவன் போட்டிப்போட்டே ஆகவேண்டும் என தொழில்முறை சீனியர் ஆலோசனை சொல்கிறார்.

அதற்காக வேலைகளை செய்ய துவங்குகிறான். ஆனால் அந்தப் பாதை அத்தனை எளிதாய் இல்லை. போகிற வழியெங்கும் கொலைகாரர்கள், மம்மி படத்தில் கூட்டம் கூட்டமாய் வரும் வண்டுகள் போல வந்துகொண்டே இருக்கிறார்கள்.

எல்லா சோதனைகளையும் கடந்து தனக்கான விடுதலையைப் பெற்றானா? என்பதை ரத்தம் தெறிக்க, கட்டி உருண்டு, மல்லுக்கட்டி சொல்லியிருக்கிறார்கள்.

****

படம் துவக்கம் முதல் இறுதி வரை… ஆங்காங்கே கொஞ்சூண்டு வசன காட்சிகளைத் தவிர சண்டை. கார் சேசிங். பைக் சேசிங் என சண்டைகள் தான்.

மியூட்டண்ட் படங்களில் வரும் வால்வரின் (Wolverine) இறக்கும் கடைசிப் படத்தில் மிகவும் சோர்வாக வருவார். அது போல இவங்களோடு மல்லுக்கட்டுனது போதும். டயர்ட் ஆயிடுச்சு! ஆளை விடுங்கடா என சொல்வது போல நாயகன் வலம் வருகிறார். ஆனாலும் விடாமல் இறுதிவரை சண்டை செய்கிறார்.

நாயகனின் பழைய நண்பராகவும், டேபிளின் தலைவனாக வரும் வில்லன் ”உன் பொண்ணுக்கு தொந்தரவு தருவேன்” என சொல்லியே தனக்கான வேலைகளை செய்யும் ஆளாக வரும் டோனி யென் (Donnie Yen) முக்கியப் பாத்திரத்தில் வருகிறார். ஒரு நாயை கூட்டிக்கொண்டு நாயகனை பின்தொடர்ந்து கொண்டே, வில்லனிடம் பேரம் பேசிக்கொண்டு வெறுப்பேற்றிக்கொண்டு, படம் முழுவதும் வரும் சாமியர் ஆண்டர்சன் (Shamier Anderson) முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.

சண்டைப் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் பாருங்கள். இப்போதைக்கு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது

March 23, 2023

பிள்ளை நிலா (1985) பேய் படம்


நாயகன் ஒரு கல்லூரியில் படிக்கிறார். நாயகியும் அங்கு படிக்கிறார். பிரின்சிபால் கேள்வி கேட்டார் என்பதற்காக, அந்த கல்லூரியையே நாயகியின் அண்ணன் வாங்கிவிடுகிறார். பிறகு நாயகனுக்கும், நாயகிக்கும் கொஞ்சம் முட்டல் வருகிறது. பிறகு நாயகி நாயகனை காதலிக்க துவங்கிவிடுகிறார். இது நாயகனுக்கு தெரியவில்லை. அவ்வளவு தத்தி.


பெரிய பணக்காரி என்பதால், நாயகன் படித்து முடித்ததும், அண்ணன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையும் வாங்கி கொடுத்துவிடுகிறார். நாயகி வெளிநாடு போயிருக்கும் பொழுது, நாயகனுக்கு திருமணமாகிவிடுகிறது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். முடியாது என்றதும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த ஆவி நாயகனின் பெண் குழந்தைக்குள் சென்றுவிடுகிறது.

மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு, நாயகனுடன் “மேலுலகத்தில்” ஒன்றாய் வாழ்வதே அதன் இலக்காக இருக்கிறது. நாயகன் ஆவியுடன் போராடி, தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
*****

இயக்குநர் மனோபாலாவிற்கு முதல்படம். முதன்முறையாக இளையராஜாவின் படத்தின் பின்னணி இசையை தனியாக ட்ராக் வெளியிட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்காக ஆர்வம் வந்து பார்த்தேன். அந்த காலக்கட்டத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

முதல் பாதி படு திராபை. அந்த கல்லூரி காட்சிகள். அவர்களுக்குள் காதல் வரும் காட்சிகள். நாயகி தற்கொலை வரைக்கும் தாங்கவே முடியவில்லை. அவ்வளவு செயற்கை. அவ்வளவு மொக்கை. கதை, திரைக்கதை, வசனம் கலைமணி. இடைவேளைக்கு பிறகு பேய் வந்த பிறகு தான் படத்தையே காப்பாற்றியிருக்கிறது. பேயைத் துரத்துவதையும் சிம்பிளாக முடித்துவிட்டார்கள். கிறிஸ்துவ முறைப்படி புதைத்திருக்கிறார்கள். அதை தோண்டி எரித்தால் போதும் என சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்து முறைப்படி, எரிப்பது தான் வழக்கம். அந்த ஆவிகள் எல்லாம் நிறைய படங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றனவே! பேய் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது. அவ்வளவு தான்.

பாடல்களும், இசையும் படத்திற்கு பெரிய பலம். இளையராஜா படத்தை காப்பாற்றியிருக்கிறார்.

நாயகனாக மோகன், காதலியாக ராதிகா, ராதிகாவின் அண்ணனாக ஜெய்சங்கர், நாயகியின் துணைவியாராக நளினி, மகளாக பேபி ஷாலினி, ஜப்பான் மந்திரவாதி என சின்ன வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். இடைவேளை வரை படத்தில் வருகிறார். இடைவேளைக்கு பிறகு அவ்வப்பொழுது பேயாகாவும் வருகிறார். கெளரவ வேடத்தில் ராதிகா என எழுத்துப்போடுகிறார்கள். ஆச்சர்யமாக இருந்தது.

யூடியூப்பில் இருக்கிறது. பாருங்கள். இடைவேளை வரை பார்க்கவே வேண்டாம். அதையும் மீறி மன உறுதி கொண்டவர்கள் பாருங்கள்.

கண்ணை நம்பாதே (2023)


 நாயகன் குடியிருந்த வீட்டு ஓனரின் பெண்ணை காதலித்தது தெரிய வந்ததால், ”உடனே காலி செய்! இல்லையென்றால் எல்லாவற்றையும் தெருவில் எறிந்துவிடுவேன்” என அடம்பிடிக்கிறார்.

அவசர கதியில் ஒரு வீட்டில் குடியிருக்கும் இளைஞருடன் போய் செட்டிலாகிறார். அன்று இரவு உடல்நலம் சரியில்லாத ஒரு மத்திய வயது பெண்ணுக்கு நாயகன் காரோட்டி உதவுகிறார். உடன் இருக்கும் இளைஞர் நாயகனுக்கு தெரியாமல் அதில் ஒரு பெரிய சிக்கலை உண்டாக்குகிறார்.


ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு. அதை மறைக்க இன்னொரு தப்பு என போகிறது. பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாயகன் பூங்காவில் உட்கார்ந்து யாரும் பார்க்கிறார்களா இல்லையா என்பதை கூட கவனிக்காமல் வடிவேல் நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரிக்கிற லேசான ஆள். அதனால் முன்பின் தெரியாத ஆள் மீது சந்தேகமே அவரால் படமுடியவில்லை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகிறார். ஆங்காங்கே கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும் நடந்துகொள்கிறார்.

இப்படி சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கடைசி வரை பார்வையாளர்களை போராடிக்காமல் கொண்டு போயிருக்கிறார்கள்.என்பேன்.

நாயகனாக உதயநிதி, பிரசன்னா, புதுமுக நாயகி ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பூமிகா, மாரிமுத்து என பலரும் படத்தை காப்பாற்றியிருக்கிறார்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மாறன் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்பொழுது திரையரங்குகளில் ஓடுகிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.

March 20, 2023

Trial by fire (2018) உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம்.


1991. காலை 9 மணி. வீடு மள மளெவென தீப்பிடித்து எரிகிறது. உள்ளே இருக்கும் தனது மூன்று பெண் பிள்ளைகளை காப்பாற்ற போராடி, முடியாமல் புகைமூட்டம் தாளாமல் தள்ளாடி வெளியே வருகிறார் நாயகன். ”அப்பா, அப்பா” என பிள்ளைகளின் கூக்குரல் கேட்கிறது. சிலிண்டர், பிரிட்ஜ் என சில பொருட்களும் வெடிக்கின்றன. காப்பாற்ற முடியாமல், செய்வதறியாது அழுதுக்கொண்டே திகைத்து நிற்கிறான். தீயை அணைப்பதற்காக வண்டிகள் வருகின்றன. விபத்து நடந்த பொழுது நாயகனின் துணைவியார் இரவு வேலைக்கு போயிருக்கிறார்.


விசாரணை துவங்குகிறது. அடுத்து வந்த நாட்களில் திடீரென ஒருநாள் நாயகனை கைது செய்கிறார்கள். நடந்தது தீ விபத்து இல்லை. நாயகனே கொளுத்தியிருக்கிறான் என போலீசு குற்றம் சாட்டுகிறார்கள். ”ஆமாமாம். நாயகன் கூட என்கிட்ட கொளுத்தியதை சொல்லி அழுதான்” என ஒருவன் சாட்சி சொல்கிறான். அவன் மனப்பிசகு உள்ளவன் என (sociopath) என மருத்துவர் சான்றளிக்கிறார். அவன் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. கடந்த காலங்களில் அவன் மனைவியோடு தொடர்ந்து சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறான். இப்படி அவனின் தனிப்பட்ட பண்புகளும் சிக்கலாக இருக்க… வழக்கில் அவனுக்கு மரணதண்டனை தரப்படுகிறது.

ஊரே குழந்தைகளை கொன்றவன் (Baby Killer) என தூத்துகிறது. சிறைக்கு வந்தாலும் திட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். நொந்துப்போய் தன்னைத்தானே வதைத்துகொள்கிறான். அதனால் தனிமை சிறையில் போடுகிறார்கள். தனது துணைவியாரே வந்து பார்க்காமல் இருக்கிறாள். எல்லாம் வெறுத்துப் போகிறான்.

வேறு ஒருவரின் உதவியால் படிக்க துவங்குகிறான். அவனுடைய தொடர்ந்து மேல் முறையீடுகளால், வருடங்கள் உருண்டோடுகின்றன. ஒரு பெண் நாடக ஆசிரியரின் (Playwright) முகவரியைப் பிடித்து அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். நாடக ஆசிரியர் அவனை சிறைக்குப் போய் பார்க்கிறார். அவன் பேச்சில் இருந்த நம்பிக்கையில்… அந்த வழக்கை விசாரிக்க துவங்க… திட்டமிட்டு அவனை குற்றவாளியாக்கியிருக்கிறார்கள் என கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

இறுதியில் அவன் மரண தண்டனையில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

பிள்ளைகளின் மீது அத்தனை அன்புடன் இருந்தவன், தன் சொந்தப் பிள்ளைகளையே கொன்றவன் என ஊரே திட்டித் தீர்க்கும் பொழுது நொறுங்கிப்போகிறான். அதற்காகவாவது தான் நிரபராதி என நிரூபிக்கப்படவேண்டும் என விரும்புகிறான். ஆனால் அதற்கான சட்டப்பூர்வமான எல்லா வழிகளையும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பெண் நாடக ஆசிரியர் இந்த வழக்கை சாத்தியமான வழிகளில் விசாரிக்க துவங்க… அதில் வெளிப்படும் உண்மைகள் அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்கின்றன. அவன் குற்றமற்றவன் என சட்ட ரீதியாக நிரூபிக்க அவள் நகர்த்தும் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. நாட்கள் நெருங்க நெருங்க அவள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள்.

1980களிலிருந்து 158 பேர் குற்றவாளிகள் என மரண தண்டனை என கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என புதிய தடயங்களால் (Evidences) தெரிய வந்திருக்கின்றன என படம் முடியும் பொழுது தெரிவிக்கிறார்கள். படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார். “நீதி வழங்கும் முறை உடைந்துவிட்டது” (System is broken).

ஆயுத பலத்தாலும், அரசியல் பலத்தாலும் உலகையே உருட்டி மிரட்டி பல படுகொலைகளையும் போரையும் தூண்டி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் நீதியை சரியாக வழங்கிவிடுமா என்ன? அமெரிக்க மக்கள் அநீதிக்கு எதிராக போராடவேண்டும்.

சமூக ஏற்றத் தாழ்வு கொண்ட நம் சமூகத்திலும் சட்டங்களை அதிகார, பணபலம் கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வளைப்பதும், எளியவர்கள் மாட்டிக்கொண்டு, தண்டனைகளில் சிக்கிக்கொள்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறன. அமெரிக்காவில் நடந்தது போலவே இங்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பல வழக்குகளை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், பல அதிர்ச்சியான உண்மைகள் நமக்கும் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

2009ல் அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க்கரில் (New Yorker) டேவிட் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நாயகனாக ஜாக் ஓ கானல், நாடக ஆசிரியராக லாரா என இருவரும் முக்கிய பாத்திரங்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள். எட்வர்ட் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

The man who called OTTO (2022)



”எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.”

****

நாயகன் பணி ஓய்வு பெறும் வயதில் இருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய துணைவியார் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் புற்றுநோயால் இறந்து போயிருக்கிறார். அவருடைய இழப்பு அவருக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. விரைவில் தன் துணைவியாருடன் சென்று சேர்ந்துவிடவேண்டும் என நினைக்கிறார். மீதி நாட்களை அவளின் நினைவுகளில் வாழ்கிறார்.

பிரியத்துக்குரியவரை இழந்ததில் மனிதர் சிடுசிடுவென மாறிவிடுகிறார். தன் குடியிருப்பில் வாழும் அத்தனைப் பேரிடமும் அப்படித்தான் அணுகுகிறார். தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்குப் போனால், நிர்வாக மாற்றத்தினால், சிலருக்கு நல்ல செட்டில்மெண்டில் விருப்ப ஓய்வு கொடுக்கிறோம். அதில் நாயகனும் பட்டியலில் இருக்கிறார் என சொல்கிறார்கள். ”போங்கடா!” என திட்டிவிட்டு வந்துவிடுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் தன் துணைவியாரின் கல்லறைக்கு போய், இன்று நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமால் பகிர்கிறார். ”விரைவில் உன்னுடன் வந்துவிடுகிறேன்” எனவும் சொல்கிறார்.

இந்த சமயத்தில் அருகே மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அங்கு வந்து சேர்கிறது. நிறைமாத கர்ப்பிணியான ஒரு அம்மா, அவரின் கணவன், அவர்களின் இரண்டு சின்ன பிள்ளைகள் என அவர் வீட்டுக்கு எதிரே குடிவருகிறார்கள். நாயகன் சிடு சிடுவென அவர்களிடமும் நடந்துகொண்டாலும், அவர்கள் குறிப்பாக அந்த அம்மா உரிமையோடு உதவியும் வாங்கிகொள்கிறார். உணவு, குக்கீஸ் என செய்து கொடுக்கவும் செய்கிறார்.

தன் துணைவியோரோடு போய்ச்சேர ஒவ்வொரு முறை தற்கொலை செய்துகொள்ள முயலும் பொழுதும், கர்ப்பிணி அம்மாவும், சுற்றி உள்ளவர்களும் ஏதோ விதத்தில் இடையூறு செய்து தடுத்துவிடுகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை முழு நீளப்படத்திலும் சொல்லி முடிக்கிறார்கள்.
****

பொதுவாக குடும்பம், குழந்தைகள் இல்லாத ஒரு மனிதர் தான் இப்படிப்பட்ட சிடு சிடு மனிதராக இருப்பார்கள். நம் தமிழ் படங்களில் கூட அப்படி பார்த்திருக்கிறோம்,. இவர் குண அளவில் (introvert) மற்றவர்களோடு சகஜமாக பழகாத மனிதராக இருக்கிறார். தன் பிரியத்துக்குரிய துணைவியார் இறந்ததும் எல்லாமும் சூன்யமாகிவிடுகிறது.

முதலாளித்துவ சமூகமாக இருக்கும் அமெரிக்காவில், மக்கள் தொகை 33 கோடியாக இருந்தாலும், தனிநபர் சுதந்திரம் என்பது அதிகமாகி, யாரையும் எதையும் சொல்ல முடியாத இடத்திற்கு போய்விட்டார்கள் எனலாம். அதனால் தான் அங்கு குடும்பங்கள் சிதறி சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால் அங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும், தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பேன்.

அதனால் தான் தன் பிரியத்துக்குரிய துணைவியார் இறந்து போனதும், சமூகத்தோடு வாழ பிடிக்காமல், தன் வாழ்வை முடித்துக்கொள்ள பார்க்கிறார். ஆனால், வாழ்க்கை அப்படியில்லையே! எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.

2012ல் நாவலாக எழுதப்பட்டு, ஸ்வீடிஸ் மொழியில் முதலில் (2015) எடுக்கப்பட்டு, 2022ல் இங்கிலீஷில் வெளியாகியிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் Tom Hanks சிறப்பாக நடித்திருக்கிறார். பிறகு அந்த மெக்சிகன் பெண்ணாக வரும் Mariana Treviñoவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

அருமையான படம். பாருங்கள்.