> குருத்து: பேச்சி (2024)

August 13, 2024

பேச்சி (2024)


நாமக்கல் மாவட்டத்தில் கொள்ளிமலையில் அரண்மனை காட்டில் ஒரு குறிப்பிட்ட வியூ பாயிண்டை பார்க்க மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என ஐந்து பேர் கொண்ட நண்பர்கள் குழு வருகிறது. அதில் இருவர் காதலர்கள்.

 

முன்பு மலையேற்றத்திற்கு அனுமதித்த அரசு, இப்பொழுது பாதுகாக்கவேண்டிய காடு என அறிவித்து, யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை.   விதி என இருந்தால்... விதி மீறலும் இருக்கும் அல்லவா...! ஒரு அதிகாரி மூலம் வனத்துறையில் கடைநிலை ஊழியராக இருக்கும் ஒருவரை அழைத்துக்கொண்டு ஒரு சுபவேளையில் ஐவரும் உள்ளே நுழைகிறார்கள்.

 

சட்ட விரோதமாக நுழைவதால்.. எந்த தகவல் தொடர்பு வசதியும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தாலும்.. அவர்கள் தான் சொந்த பலத்தில் தான் எதிர்கொள்ளவேண்டும்.

 

போகும் வழியில் தடை செய்யப்பட்ட பகுதி என ஒரு போர்டு தென்படுகிறது. அந்த பக்கம் போகவேண்டாம் என வனக்காவலர் தடுக்கிறார்.  அங்கு கொஞ்சம் அவர்களுக்குள் முட்டிக்கொள்கிறது.

 

அந்த வியூ பாயிண்டை அடைகிறார்கள். அவர்களுக்குள் கேலியும், கிண்டலுமாய் விளையாடுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால், அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பேச்சி என்கிற துர்தேவதை வெளியே வந்து கொலைவெறியில் காவு வாங்க காத்திருக்கும் வேளையில் தான் இவர்களும் நுழைந்திருக்கிறார்கள்.

 

அதனால் அங்கு அமானுஷ்ய செயல்களால் ஏற்படும் பதட்டம் அவர்களுக்குள் முட்டல், மோதல்களை உருவாக்குகிறது.

 

பிறகு என்ன ஆனது என்பதை பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

****

 


இதுவரை வந்த அனைத்து பேய் படங்களும் தங்களுக்கு தூண்டுதலாக இருந்ததன என நன்றி சொல்லித்தான் துவங்குகிறார்கள். சிம்பிளாக ஒரு கதை. அதை திரைக்கதை அமைத்த விதத்திலும்...காட்டின் பின்னணியிலும் சுவாரசியமாகவும், திரில்லாகவும் சொல்லியிருக்கிறார்கள்.  இரண்டாவது பாகத்திற்கும் சில கொலைகளை விட்டு வைத்திருக்கிறார்கள்.

 

அந்த துர்தேவதையின் இலக்கு சாகாவரம். சாகாவரம் என்பது வரமா, சாபமா என்பது என்னளவில் கேள்விக்குள்ளானது தான்.  எல்லாப் படத்திலும் வெள்ளந்தியாய் சிரிக்கும் ஒரு பாட்டியை டெர்ரான பேச்சியாய் மாற்றியிருக்கிறார்கள்.

 

வன காவலராக வரும் பாலசரவணனுக்கு மட்டும், குடும்பம், குழந்தை என காட்டுவதால் அவர் பாத்திரத்தோடு பார்வையாளர்களால் ஒன்ற முடிகிறது. மற்றவர்களுக்கு அப்படி ஒன்றை செய்யாததால் ஒன்ற முடியாமல் போகிறது. அது ஒரு சின்ன குறை தான்.  மற்றபடி படத்தின் வேகத்திற்கு அது ஒன்றும் தடையில்லை.  நாயகியாக வரும் காயத்ரி கொடுத்தப் பாத்திரத்தை காப்பாற்றியிருக்கிறார். பாலசரவணன் நிறைவாக செய்திருக்கிறார்.  மற்றவர்கள் புதுமுகங்கள். நன்றாக துணை நின்றிருக்கிறார்கள்.

 

இயக்குநர் பாலுமகேந்திராவை நினைவுப்படுத்தி, முதல் படத்தை துவங்கியிருக்கிறார் இயக்குநர் இராமச்சந்திரன்.   திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியானது.  இந்த வெள்ளிக்கிழமை படம் நீடிக்குமா என காத்திருந்தேன். இன்னும் ஓடுகிறது. நேற்று இரவு அரங்கு பெரும்பாலும் நிறைந்துவிட்டது.

 

கொல்லி மலைக்காட்டின் அழகை திரையரங்கில் பெரிய திரையில் காண்பது நன்றாக இருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும்.

0 பின்னூட்டங்கள்: