சிறையில் இருந்து தப்பித்தல் – உண்மை சம்பவங்களின் அடிப்படையில்!
****
நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியேறும் ஒருவன் இந்த உலகைக் குழந்தையின் கண் கொண்டு காண்பான்.
*****
1957ல் The break என ஒரு நாவல். பாரிஸ் சிறையில் 1947ல் உண்மையில் நடந்த சம்பவம் அது. அதைப் படமாக்கியிருக்கிறார்கள்.
சிறையில் நான்கு பேர் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறு ஒருஅறையில் உள்ள தற்காலிக பிரச்சனையால், ஐந்தாவது நபராக ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஏற்கனவே இடப் பிரச்சனை. இன்னும் ஒருவரா? என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அங்கு மதிப்பு இல்லை.
தனிப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சட்ட ரீதியாக இனி வெளியேறுவது சாத்தியமில்லை என்ற நிலையில், சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். ஐந்தாவது நபரை எப்படி நம்புவது என்பது தான் அவர்களது முக்கிய பிரச்சனை. இப்பொழுது வேறு வழியில்லை. ஐந்தாவது நபரை நம்பியாகவேண்டிய நிலை.
சிறையில் எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. யார் தப்பிக்க முயன்றாலும், உதவவேண்டும். அப்படித்தான் உதவுகிறார்கள். அவர்களின் திட்டம் இது தான். சிறை அறையின் மூலையில் ஓட்டை ஒன்றை போட்டு... அதன் வழியாக தப்பிப்பது. சிறையின் விதிமுறைகள் கடுமையானவை. இரவில் தூங்கும் பொழுது கூட ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிறை கண்காணிப்பு இருக்கிறது.
அங்கிருந்து தப்பித்தார்களா என்பதை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள்.
*****
சிறை என்பது சமூகத்தில் ஒரு மனிதன் குற்றம் இழைக்கும் பொழுது, அவன் செய்த தண்டனைக்கு தகுந்த காலத்தில் தனிமைப் படுத்தி பிறகு விடுவிப்பது.
தவறு இழைத்த மனிதனுக்கோ, தனி மனிதனுக்கோ சிறை என்பது ஆகப்பெரிய கொடுமை தான். அதனால் தான் உயிர் போனாலும் பரவாயில்லை என காலம் காலமாக தப்பிக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் உடன் இருப்பவர்களும் கடமை என உதவுகிறார்கள்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என்பதால், அதற்குரிய தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே தப்பித்த ஒருவரும் இந்தப் படத்தில் அவராகவே வலம் வருகிறார். ஒரு கான்கிரீட் தளத்தை அடித்து உடைப்பதாய் இருந்தால், உண்மையிலேயே உடைக்க விட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
சிறையில் இருந்து தப்பித்தல் என நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் முதல் படமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
இயக்குநர் Jacques Becker பிரான்சை சார்ந்தவர். படத்தில் நடித்தவர்கள் சரியாக பொருந்தியிருக்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment