சட்ட விரோதமாக கேசினோ சூதாட்ட அமைப்பு இயங்கிவருகிறது. அவர்களைத் தவிர வேறு யாரும் இயங்ககூடாது என அடாவடியாக நடந்துகொள்கிறார்கள். அப்படி யாராவது துவங்கினால், உள்ளே புகுந்து மொத்த செட்டப்பையும் நொறுக்கிவிடுகிறார்கள்.
இதற்கிடையில், இந்த விளையாட்டுக்காக கணிப்பொறியில் நல்ல அறிவு உள்ள இளைஞர்களை இழுத்து வந்து, கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். அதில் ஒரு இளைஞர் தப்பித்துப் போகிறார். அவரைத் தேடிப்பிடித்து கொடூரமாக கொல்கிறார்கள்.
இந்த வழக்கு போலீசிடம் விசாரணைக்கு வருகிறது. நாயகன் விசாரிக்க துவங்குகிறார். அந்த இளைஞரின் அம்மா, “இந்த மாபியா கும்பலை எப்படியாவது தண்டியுங்கள்’ என கேட்டுக்கொள்கிறார். துக்கம் தாளாமல் தற்கொலை செய்து இறந்தும் போகிறார். போலீசாக இருந்தாலும், இளகிய மனம் கொண்டவரான நாயகன் அந்த கும்பலை பிடிக்கப் போராடுகிறார்.
இதற்கிடையில், அந்த கேசினோவை நடத்தும் முதலாளிக்கும், அடியாட்படைகளின் தலைவனுக்கும் கமிசன் கொடுக்கல் வாங்கலில் முரண் எழுகிறது. அந்த அடியாட்படை தலைவன் மிக கொடூரமான ஆள். எவ்வளவு கொலைகளுக்கும் துணிந்த ஆள் அவன்.
அந்த கும்பல், அடியாட்களிலும் பெரிய படையாக, கொடூரமாக கொலை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். மில்லியன்களில் பணம் கொட்டுவதால், கணிப்பொறி தொழில்நுட்பத்திலும் கில்லாடியாக இருக்கிறார்கள். நாயகன் மெல்ல மெல்ல விசாரணையில் முன்னேறி அந்த காசினோ மாபியா கும்பலை பிடித்தாரா என்பதை அடிதடி, கலாட்டாகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***
ஜாக்கிசான் கொடிக்கட்டி பறந்த காலத்தில்... 1985 துவங்கி 2013 வரை போலீஸ் ஸ்டோரி என ஏழு பாகங்கள் வரை எடுத்து வெளியிட்டார்கள். மாபியா கும்பலை பிடிப்பதற்கான போலீசின் போராட்டம் தான் மையமாக இருக்கும். அதில் ஜாக்கிசானின் சாசகங்கள் பிரதானமாக இருக்கும்.
அது போல தென்கொரிய வரிசையாக, Don Lee யின் அடிதடி படங்களாக இந்த வரிசையில் நான்காவது படமாக வெளிவந்து, நன்றாக கல்லாவும் கட்டியிருக்கிறது.
போலீசு படங்கள் என்பதால், முற்றிலும் கற்பனையாக எடுக்காமல், சம காலத்தில் நடந்த விசயங்களையும் இணைத்துக்கொண்டு எடுப்பதால், படம் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் இருப்பது நல்ல விசயம்.
மாபியா கும்பல் கொழுத்த பண வசதியுடனும், தொழில்நுட்ப திறனுடனுடன், அடியாட் படைகளுடன் இருப்பதையும், போலீசுக்கு எல்லாமே பற்றாக்குறை என்பதையும் நன்றாக காட்டியிருப்பார்கள்.
இது தென்கொரிய போலீசுக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதிலுமே இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தியா டிஜிட்டல் உலகமாக சில வருடங்களாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், டிஜிட்டல் குற்றங்களும் நாள்தோறும் பெருகிக்கொண்டே போகின்றன. அதைக் கண்டுபிடித்து குற்றங்களை களைவதில் பெரிய தேக்கம் இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம்.
படம் கலகலப்பாக செல்கிறது. டோன் லீ தன் குழுவினருடன் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். ஆள் ஓங்கு தாங்காக இருந்தாலும், ஒரு அடி கொடுத்தால், பொறி கலங்கவைப்பவராக இருந்தாலும், அவருடைய நடவடிக்கையில் ஒரு வெள்ளந்தித்தனம் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
ஆக்சன் ரசிகர்கள் பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment