> குருத்து: Incendies (2010) பிரெஞ்சு

August 9, 2024

Incendies (2010) பிரெஞ்சு


அம்மா நினைவுகள் தப்பி, இறந்துவிடுகிறாள். தனது இரட்டைப் பிள்ளைகளான மகன், மகளுக்கு ஒரு பொறுப்பை தருகிறாள். பிள்ளைகள் அறியாத (முன்னாள்) கணவனுக்கு ஒரு கடிதம். அவருக்கு பிறந்த ஒரு பையனுக்கு ஒரு கடிதம். அந்த கடிதங்களை சேர்த்தப் பிறகு தான், தன் கல்லறையில் பெயரை எழுதவேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார்.


மகன் கடுப்பாகிறான். மகள் தன் அம்மா கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற முடிவெடுத்து, கிளம்புகிறாள்.

அரபு நாடுகளில் ஒன்று அம்மாவின் தாயகம். தாய் வீடு அவளை இனிதே வரவேற்கவில்லை.

அம்மா கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து...ஒரு முசுலீம் அகதியை காதலித்து... இது தெரிந்ததும் சகோதரர்கள் அவரை சுட்டு கொன்றுவிடுகிறார்கள்.

தன் பாட்டியின் ஆதரவில்.. குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தைக்கு காலில் ஒரு அடையாளமிட்டு அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள்.

அங்கு அரசியல் சூழலால் நிலைமை மோசமடைகிறது. அவளின் வாழ்க்கையும் அதில் சிக்கிக்கொள்கிறது.

அவள் தன் மகனைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். பின்னாட்களில் தான் தன் இரு குழந்தைகளுடன் கனடா வந்து சேர்கிறாள்.

தன் அம்மாவைப் பற்றிய தேடலில்.. தன் தந்தை யார்? தனது மூத்த சகோதரன் யார்? என்பது மட்டுமில்லாமல், அதன் வழியே தங்களுடைய வரலாறையும் அறிந்து... அதிர்ச்சி அடைகிறார்கள்.
****

புகழ்பெற்ற "இடிபஸ்" நாடகத்தின் அடிப்படையாக கொண்டு, ஒரு நவீன நாடகமாக எழுதப்பட்டு, அதை படமாக்கியிருக்கிறார்கள்.

இயல்பு வாழ்வில் நடக்க சாத்தியமில்லாத ஒரு கதை. ஆனால் மத ரீதியான மோதல் சூழலில்... இந்தக் கதை சாத்தியமாவது தான் வாழ்வின் பெருந்துயரம்.

கடவுள் மீதான நம்பிக்கை தனிநபர் நம்பிக்கையாக இருக்கும்வரை, ஏதும் பிரச்சனையில்லை. மதம் ஒரு அமைப்பாய், அதிகாரத்தில் அமரும் பொழுது, மதம் பிடித்துவிடுகிறது. மனிதர்களை ஈவிரக்கமின்றி கா வு வாங்க துவங்கிவிடுகிறது.

கதையைப் புரிந்து அனைவரும் நடித்திருக்கிறார்கள். படம் பல விருதுகளை வென்றிருக்கிறது.

அவசியம் பார்க்கவேண்டிய படம்.

0 பின்னூட்டங்கள்: