> குருத்து: வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 8

August 26, 2024

வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 8


ஆவணங்களின்றி முன்பணம் (Advance) பெறும் வசதி நிறுத்தப்பட்டது

 

கொரானா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, பி.எப் கணக்கில் கடன் வாங்குவது என்பது திருமணம், மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல், கல்விக் கட்டணம் செலுத்துவது என வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதற்குரிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் பொழுது தான் பி.எப். கடன் வழங்கிக்கொண்டிருந்தது.

 

 

கொரானா பெருந்தொற்றால்  மார்ச் 2020ல் அரசு ஊரடங்கு அறிவித்த பொழுது,  பல தொழில்கள் முடங்கின. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.   அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடிய சூழ்நிலையில், தொழிலாளர்களின் நெருக்கடியான வாழ்நிலையை கணக்கில் கொண்டு,  பி.எப். ஒரு அவசர அறிவிப்பை செய்தது.  

 

எந்த ஆவணமும் இல்லாமல், தொழிலாளர்கள் அவர்கள் செலுத்திய பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.  அவர்களுடைய பி.எப். நிதி இருப்பில் அந்த பணம் கழித்துக்கொள்ளப்படும்.  அதைத் திருப்பி செலுத்தவேண்டியதில்லை எனவும் அறிவித்தது.

 

கொரானா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையும் கொடூரமாக மக்களை தாக்கியது.  ஆகையால், முன்பணம் வாங்கும் காலத்தையும் நீட்டித்து அறிவித்தது.  நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டபடியால், இப்பொழுது முன்பணம் தருவதை நிறுத்துவதாக கடந்த ஜூன் 12ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

 

ஆகையால், தொழிலாளர்கள் ஆவணங்களின்றி முன்பணம் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

 

இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint declaration)



பி.எப். திட்டத்தில்  ஆதாரின் வருகைக்கு முன்பு ஒரு தொழிலாளி குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தளத்தில் பதிவு செய்யும் பொழுது,  தொழிலாளர்கள் வாய்மொழியாக தெரிவிக்கும் விவரங்களை கொண்டு பதிவு செய்வது வழக்கமாய் இருந்தது.  அவர் தெரிவிக்கும் அடிப்படைத் தகவல்களை சரிப்பார்ப்பதற்கு ஆவணங்களை கேட்கும் பொழுது, அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து  பல தொழிலாளர்கள் தருவதில்லை அல்லது தாமதப்படுத்துவார்கள்.

 

ஆகையால், பெயர், அப்பா/கணவர் பெயர், பிறந்த தேதி என பதிவு செய்ததில் நிறைய குழப்பங்கள்  இருந்தன. பிறந்த வருடத்தில் ஏழு வருடங்கள் வித்தியாசம் இருந்த தொழிலாளியை என் அனுபவத்தில் அறிவேன்.   இணையும் பொழுது, நாம் கொடுக்கும் தனிபட்ட விவரங்களை ஏற்றுக்கொள்ளும் பி.எப். தளம்  பி.எப் பணத்திற்காக விண்ணப்பிக்கும் பொழுது எளிதாக தந்துவிடுவதில்லை.  சம்பந்தப்பட்ட தொழிலாளியினுடைய விவரங்களில் உள்ள எல்லா பிழைகளையும் சரி செய்து வந்த பிறகே பணத்தை வங்கிக்கு அனுப்பிவைக்கும்.   அந்த தவறுகளை சரி செய்வதற்கு பல நாட்கள் அலைந்த தொழிலாளர்களை நானறிவேன்.

 

ஆதார் வருகை



ஆதார் வருகைக்கு பிறகு, இந்த குழப்பங்கள் பெருமளவில் குறைந்தன எனலாம்.  ஒரு நிறுவனம்  ஒரு தொழிலாளியை பதிவு செய்யும் பொழுது, இப்பொழுது ஆதார் இல்லாமல் பி.எப். தளத்தில் இணைக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ஆதாரில் உள்ள பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி என எல்லா விவரங்களையும் ஆதாரில் உள்ளவற்றை பி.எப் தளம் ஏற்றுக்கொண்டது. ஆகையால் அடிப்படை விவரங்களை சரியாக பதிய முடிந்தது.

 

பி.எப். பணத்தைப் பெறுவதற்கு, ஆதாரில் உள்ள விவரங்கள் மட்டும் சரியானவையாக இருந்தால் போதாது.   தொழிலாளியின் பான் கார்டு விவரங்கள், வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் எல்லாம் ஆதாரில் உள்ள விவரங்களோடு சரியாக ஒத்துப்போகவேண்டும்.  அப்பொழுது தான் பி.எப் தொழிலாளரின் நிதியை வங்கி கணக்கு அனுப்பிவைக்கும்.

 

முன்பு தொழிலாளியின் பெயர், பிறந்த தேதி, பாலினம் என குறைவான அம்சங்களை மட்டுமே திருத்துவதற்கு பி.எப் தளத்தில் வசதி இருந்து வந்தது.

 

ஆனால் நடைமுறையில் இப்படி தொழிலாளர்களின் தனிப்பட்ட விவரங்களையும்,  நிறுவனத்தில் இணைந்த தேதி, விலகிய தேதி என பல அம்சங்களில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கு தளத்தில் வசதி இல்லாமல் இருந்தது.  இதற்காகவே இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration form)  ஒன்றை பி.எப் வைத்திருந்தது.  

 

அந்த விண்ணப்பத்தில்  தொழிலாளியின் எது சரியான விவரங்கள், எந்த விவரங்கள் தளத்தில் பிழையாக இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு, வேலை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பாளர் கையெழுத்திட்டு, நிறுவனத்தின் சீல் வைத்து, தொழிலாளியும் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகத்தில் ஒப்படைத்தால், பிழைகளை சரி செய்யும் வழக்கமிருந்தது.

 

உறுப்பினருக்கான பி.எப். தளத்திலேயே இப்பொழுது இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)



தொழிலாளர்களின்  தனிப்பட்ட விவரங்கள், மற்ற அம்சங்களையும் திருத்துவதற்கு பி.எப் அலுவலகத்துக்கு நேரில் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் எப்பொழுதும், பி.எப் அலுவலகங்களில் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தார்கள்.

 

இதற்கும் இப்பொழுது பிஎப் நிறுவனம் ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்து, உறுப்பினர்கள் பயன்படுத்தும் பிஎப் தளத்திலேயே இணை உறுதிமொழிப் பத்திரத்தை வலையேற்றும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம்,  அப்பா/கணவர் பெயர், பாலினம், படிப்பு தகுதி, திருமணம் ஆனவரா, இல்லையா என பல அம்சங்களையும் திருத்துவதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இந்த வசதியை பி.எப் உறுப்பினருக்கான தளத்தில் நிர்வகி (Manage) என்ற தலைப்பின் கீழ் முதல் அம்சமாக இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)  ஒன்றை இணைத்திருக்கிறார்கள்.  அதைக் கிளிக் செய்தால், நாம் வேலை செய்த நிறுவனத்தின் பெயர்/பெயர்கள் தெரியும்.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், ஒரு கணக்கும், சில நிறுவனங்களில் வேலை செய்தால், சில கணக்குகளும் தளம் காட்டும்.  எந்த கணக்கிற்கு நாம் திருத்தம் செய்யும் தேவையிருக்கிறதோ, அந்த கணக்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

 

பிறகு, தனிப்பட்ட விவரங்களுக்கான பகுதியில் (Personal Details) மூன்று அம்சங்களைக் காட்டும். ஒன்று தேவையான மாற்றம் செய்யும் பகுதி (Update Details),  அடுத்தது, எந்த மாற்றம் செய்ய கோருகிறோமோ, அதற்கான ஆவணங்களை வலையேற்றும் (Upload documents)  பகுதி,  மூன்றாவது நாம் விவரங்களை சரிப்பார்த்து, சமர்ப்பிக்கும் பகுதி (Preview/Submit Application) இருக்கும்.

 

இரண்டாவது பகுதியில், நமது வேலை செய்த விவரங்களான (Update Service Details), வேலையில் இணைந்த தேதி, விலகிய தேதி, வேலையில் இருந்து விலகியதற்கான காரணம், அதே போல ஓய்வூதிய கணக்கில் உள்ள விவரங்களையும் தளம் காட்டும்.  அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கும் நாம் விண்ணப்பிக்கலாம்.

 

இதில் நாம் செய்கிற திருத்தத்துக்கு உரிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும்.  என்னென்ன திருத்தம் செய்யமுடியும், எத்தனைமுறை திருத்தமுடியும், ஒவ்வொரு திருத்தத்திற்கும்  என்ன ஆவணம், ஆவணங்கள் வலையேற்ற வேண்டும் என்பதற்கு, பி.எப். விளக்கமான கையேடு (SOP – Standard of Procedures) ஒன்றை 23/08/2023 அன்றும், அதற்கு பிறகு இன்னும் மேம்படுத்தி,  26/03/2024 அன்றும்  வெளியிட்டு இருக்கிறது.  இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கிறது.


தொழிலாளர்கள் மேற்கண்ட விவரங்களை சமர்ப்பித்த பிறகு, நிறுவனத்தின் பார்வைக்கு செல்லும். சம்பந்தப்பட்ட நிறுவனம் அவற்றை உரிய ஆவணங்களுடன் வலையேற்றப்பட்டிருக்கிறதா என்பதை சரிப்பார்த்து, ஒப்புதல் வழங்குகிறது.  பிறகு, அந்த விண்ணப்பம் பி.எப் நிறுவனத்திற்கு செல்கிறது.  அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிஎப். அலுவலர் சரிப்பார்த்து ஒப்புதல் கொடுத்ததும்,  தொழிலாளர் கோரிய மாற்றம் தளத்தில் மாற்றம் செய்யப்படும்.

 

தொழிலாளி தனது கணக்கை பராமரிக்க கூடிய பி.எப். அலுவலகத்தை எப்படி தெரிந்துகொள்வது?

 


பல தொழிலாளர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கிறது.  ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை பி.எப். தளத்தில் பதிவு செய்யும் பொழுது நிறுவனம் எந்த பகுதியில் இருக்கிறதோ,  அதற்கு அருகிலேயே பி.எப். அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஒவ்வொரு பி.எப். அலுவலகமும் அஞ்சலக குறியீடுகளை பிரித்துகொண்டு பொறுப்பேற்கிறது.  ஆகையால், எந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோமோ, அந்த நிறுவனத்திடம் எந்த பி.எப். அலுவலகம் நமது கணக்கை பராமரிக்கிறது என தெரிந்துகொள்ளவேண்டும்.

 

இந்த முறை என்பது தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமம் தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் இருக்கிறது. அதனுடைய கிளை அலுவலகம் சென்னையில் இருக்கிறது.   தமிழ் பேசும் தொழிலாளி சென்னையில் வேலை செய்து, பிறகு வேலையை விட்டு நின்ற பிறகு, அவருடைய பி.எப். பணத்தை வாங்குவதற்கு பிஎப் தளத்திலேயே விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது.  அந்த தொழிலாளியினுடைய தனிப்பட்ட தகவல்களில் பிழைகள் இருக்கும் பட்சத்தில்,  தலைமையிடமான மும்பை அலுவலகத்தையும், மும்பை அலுவலகம் இருக்ககூடிய பகுதியிலேயே சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகமும் இருப்பதால், அவர்களை தொடர்புகொண்டு, அந்த பிழைகளை சரி செய்வதற்குள் அந்த தொழிலாளி பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்.  இந்த மாதிரி சிக்கலான சமயங்களில் தன்னுடைய பி.எப் பணத்தை வாங்கமுடியாமல் சோர்வடைந்து விட்டுவிடுவதும் நடக்கிறது.

 

இப்பொழுது உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் பொழுது, இந்தியாவும் மெல்ல மெல்ல டிஜிட்டல்மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் ஒரு தொழிலாளி இந்தியாவில் எங்கு வேலை செய்தாலும், எந்த பி.எப். அலுவலகத்தை வேண்டுமென்றாலும் அணுகலாம்.  தனக்கு தேவையான செய்திகளைப் பெறலாம். தன் கணக்கில் ஏற்படும் பிழைகளை சரி செய்ய அணுகலாம் என்கிற நிலையை பி.எப்கொண்டுவர அதற்கான செயல்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

 

தொழிலாளர்கள் பி.எப். குறித்து உங்களுக்கு இருக்கும் கேள்விகளை, சந்தேகங்களை தொழில் உலகம் இதழுக்கு எழுதி அனுப்புங்கள்.  அடுத்தடுத்து வரும் இதழ்களில் பதிலளிக்கிறேன்.

 

இன்னும் வளரும்.

 

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721

0 பின்னூட்டங்கள்: