> குருத்து: Rosemary’s Baby (1968)

August 9, 2024

Rosemary’s Baby (1968)


அவன் வளர்ந்து வரும் ஒரு மேடை நடிகன். பல்வேறு கனவுகளுடன் அவனை திருமணம் செய்து, லண்டனில் அந்த முக்கிய பகுதியில் உள்ள வசதியான அடுக்கு வீடுகளில் ஒன்றில் குடிவருகிறார்கள். மேல் மாடியில் இருக்கும் ஒரு வயதான தம்பதி இவர்களுடன் நெருக்கமாக பழகுகிறார்கள்.


வாழ்க்கை சந்தோசமாய் நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது, பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என அதற்கு ஒரு நாள் குறிக்கிறார்கள். அன்றிரவு அவளுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, “சாத்தானை” உறவு கொள்ள வைக்கிறார்கள். அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் வந்து, அந்த கேக்கை கொஞ்சமாய் சாப்பிட்டதால், எல்லாமே ஏதோ கனவில் நடந்தது போல இருக்கிறது.

சாத்தானை வழிபடுகிற கணவன், வயதான தம்பதி என எல்லோரும் கூட்டு சேர்ந்து கும்பலாக அந்த பெண் மூலம் சாத்தானுகு குழந்தையை பெற்றுக்கொள்ள காய் நகர்த்துகிறார்கள். அவளுக்கு பெற்றோர் இல்லை. கொஞ்சம் அப்பாவியும் கூட.

கருவுறுகிறாள். கருவுற்ற நாளில் இருந்து, அவளுக்கு கடுமையான வயிற்றுவலி. அவர்களே ஒரு “நல்ல” மருத்துவரை ஏற்பாடு செய்கிறார்கள். அவள் உடல் சோர்வாகி கொண்டே போகிறாள். கணவன் ஏதோதோ சொல்லி சமாளித்து வருகிறான்.

அவளிடம் நலம் விரும்பியான ஒருவர், இவளைப் பார்த்து, பிறகு துப்பறிந்து, இவளுக்கு சாத்தான் கும்பலைப் பற்றி எச்சரிக்க முயல, அவரை காயப்படுத்தி, கோமாவிற்கு கொண்டுபோய்விடுகிறார்கள்.

கணவன் எவ்வளவோ தடுத்தும், நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறாள். அவர்கள் வந்து அவளை அக்கறையுடன் விசாரிக்கும் பொழுது, இவள் சுதாரிக்கிறாள்.

பிறகு என்ன ஆனது என்பதை ஹாரராக சொல்லியிருக்கிறார்கள்.
****


ஒரு வழக்கமான பேய் படம் இல்லை. ஒரு திரில்லர் போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

சாத்தானை வழிபடுகிற கும்பல் என காண்பிக்கிறார்கள். அதில் ஒரு தம்பதி சாத்தனுக்கு உதவி செய்யலாமே! ஏன் ஒரு அப்பாவி பெண்? படம் பார்த்த பின்பு, எனக்கு தோன்றியது. தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம்.

1960களில் வந்த படம் என்பதால்…. தாய்மை உணர்வு என கடைசியில் உருகியிருக்கிறார்கள். இப்பொழுது பார்த்தால், புன்னகை வருகிறது.

மையப்பாத்திரமான் நாயகி தான் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

ஒரு நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். The Pianist, Macbath என பல புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் (Roman Polanski) துவக்க கால படம் இது

இதுவரை வந்த ஹாரர் படங்களில், இது ஒரு முக்கிய படம் என பட்டியலில் வைத்திருக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: