> குருத்து: Wind River (2017) Neo-Western crime film

August 9, 2024

Wind River (2017) Neo-Western crime film


"காணாமல் போனவர்களின் புள்ளிவிவரங்கள் மற்ற ஒவ்வொரு மக்கள்தொகைக்கும் தொகுக்கப்பட்டாலும், பூர்வீக அமெரிக்கப் பெண்களுக்கு எதுவும் இல்லை."

***

அமெரிக்காவின் ஒரு பகுதியான எங்கும் வெண்பனி அடர்த்தியாய் படர்ந்திருக்கும் நிலமிது. நாயகன் வன விலங்குகளை பாதுகாக்கிற பணியில் இருக்கிறார். அவருடைய துணைவியாரை பிரிந்து வாழ்கிறார். பத்து வயது பையன் அம்மா, அப்பா இருவருடனும் மாறி மாறி இருந்துவருகிறான்.

ஒருநாள் சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறாள். உள்ளூர் போலீசுடன், FBI போலீசான நாயகியும் அங்கு விசாரணைக்கு வருகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். ஆனால், அந்த பனி இரவில் வெறுங்காலில் ஓடியதால், நுரையீரலில் பனிக்காற்று தாக்கி இறந்ததாக மருத்துவர் சொல்கிறார்.

அவள் யாரைத் தேடிச் சென்றாள்? ஏன் காலில் ஷூ இல்லாமல் சில கிமீ ஓடினாள்? என்பதைத் தேடி செல்லும் பொழுது, என்ன நடந்தது என்பதை திரில்லராய் சொல்லியிருக்கிறார்கள்.
*****


”உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்” என்பதாலும், அந்த இயக்குநர் வெகு வேகமாக நகரும் ஒரு படம் போல எடுக்காமல், நிதானமாக ஒரு படத்தையும், அதன் மூலம் ஒரு செய்தியையும் பதிவதற்காக எடுத்திருக்கிறார்.
நாயகன் செத்துக் கிடக்கும் அந்த இளம் பெண்ணைப் பார்த்து சொல்வான். “இந்த பெண் நல்ல திறனுடையவள் (Fighter). அதனால் தான் வெறுங்காலுடன் இந்த கடும்பனியில் சில கி.மீட்டர்கள் ஓடிவந்திருக்கிறாள். அதிலிருந்து எப்படியாவது வாழ்ந்துவிடவேண்டும் என்ற ஆசை தெரிகிறது”

செத்துப் போன இளம்பெண் நாயகனின் மகளுடைய தோழி. அவனின் மகளும் இப்படி ஒரு நாள் இரவு காணாமல் போய், அடுத்தநாள் ஒரு இடத்தில் அவளுடைய உடலை கண்டுப்பிடித்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால், எப்படிப்பட்ட மன உளைச்சலை தருகிறது என்பதை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது முதல் பத்தியை மீண்டும் ஒருமுறைப் படித்துவிட்டு வாருங்கள். அமெரிக்காவில் கொல்லப்பட்டபெண்களைப் பற்றி விவரப் பட்டியல் இருக்கிறது. ஆனால், காணாமல் போகும், கொலை செய்யப்படும் பூர்வீக பெண்களுக்கு அப்படி ஒரு பட்டியல் இல்லை என்பதைத் தான் படம் முடியும் பொழுது சொல்லி படத்தை முடிக்கிறார்கள். உலகம் முழுவதுமே இந்த பிரச்சனை நீடிக்கிறது போல! நம்மூரிலும் இப்படிப்பட்ட செய்திகளைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

இந்தப் படத்தின் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் Taylor Sheridan யினுடைய பிற முக்கிய படங்களையும் பார்க்கவேண்டும் என ஆர்வத்தைத் தூண்டுகிறார். நாயகன் மார்வல் படங்களில் வில், அம்புடன் Clint Barton / Hawkeye வலம் வரும் Jeremy Renner. போலீசு அதிகாரியாக வரும் நாயகி மார்வல் படங்களில் நெருப்பை அள்ளி வீசும் வாண்டாவான Elizabeth Chase Olsen . இருவரும் அளவான நடிப்பில் ஈர்க்கிறார்கள். மற்றவர்கள் சிறப்பு.

படம் முழுவதும் வெள்ளைப் பனி எங்கும் படர்ந்திருக்கிறது. அதனை உணரும் பொழுதே நம்மையும் பனி கடுமையாகத் தாக்குகிறது. ஒரு இடத்தில் ஒருவன் சொல்வான். “இந்த நிலத்தின் பனியும், அமைதியும் என்னை மிகவும் தொல்லை செய்கிறது.” முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு தோழி, இதே சொல்லைக் சொல்ல கேட்டிருக்கிறேன். “கணவர் வேலைக்கு சென்றுவிடுவார். வெளியே பனி. பனி. எங்கும் பனி. அந்த உறைபனி நம்மை இயல்பாக இருக்க அனுமதிக்காது. அந்தச் சூழலின் அமைதியே என் மனதின் சமநிலையை குலைத்துவிடும்”

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: